அமெரிக்காவின் நியூயார்க்கில் தட்டம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ளதையடுத்து ஆளுநர் கேத்தி ஹோச்சுல் மாநிலம் முழுவதும் பேரிடர் அவசரநிலையை அறிவித்தார்.
நியூயார்க்கின் கிராமப்புறங்கள் மற்றும் எல்லையோர மாநிலமான பென்சில்வேனியாவில் தட்டமை பாதிப்பு ஆயிரத்தை தாண்டி மிகத் தீவிரமாகப் பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 900 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரோன் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க மீன்பிடி வலைகள்
பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மற்றும் சோதனைச் சாவடிகளை ட்ரோன் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தும் விசித்திரமான நடைமுறையை பாகிஸ்தான் கையிலெடுத்துள்ளது.
ட்ரோன்கள் தரைமட்டத்திற்கு வந்து வெடிப்பதற்கு முன்பாகவே, அவற்றை நடுவானில் பிடிப்பதற்காக, சோதனைச் சாவடிகளுக்கு மேலே பல மீட்டர் உயரத்தில் வலுவான மீன்பிடி வலைகள் கட்டப்பட்டுள்ளன.
அணுஆயுத வல்லமை கொண்ட ஒரு நாட்டின் ராணுவம், ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பிக்க மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவது சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
காசா போருக்குப் பழிவாங்கவே தாக்குதல் - துணைவிமானி
காசா போருக்குப் பழிவாங்கும் நோக்கில், ஃப்ளைதுபாய் விமானத்தை மோதச் செய்ய முயன்றதாக அதன் துணை விமானி விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த மாதம் 30 ம்தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி யிடம் ஐக்கிய அரபு அமீரக விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர்களிடம் இந்த அதிர்ச்சி வாக்குமூலத்தை அவர் அளித்துள்ளார்.
மேலும் தாம் ஒரு தியாகியாக இறக்க இத்தாக்குதலைத் திட்டமிட்டதாகவும் துணை விமானி தெரிவித்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.