தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு உரிமை இல்லையா? உச்சநீதிமன்ற சொல்வது என்ன?

தந்தைக்குக் கிடைத்த பங்கு அவரது தனிப்பட்ட சொத்தாக மாறிவிட்டால், அதில் பேரன் உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முழு விவரம்
உச்சநீதிமன்ற தீர்ப்புநியூஸ்தமிழ்24x7
Published on: 

’தாத்தாவின் சொத்து என்பதாலேயே பேரனுக்குப் பிறப்புரிமை வந்து விடாது. தாத்தா உயில் எழுதாமல் இறந்த பிறகு, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி அவரது சொத்துகள் வாரிசுகளுக்குப் பிரிக்கப்பட்டு, தந்தைக்குக் கிடைத்த பங்கு, அவரது தனிப்பட்ட சொத்தாக மாறிவிட்டால், அதில் பேரன் உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் 29 ஆண்டுகால சொத்துத் தகராறில் இந்த முக்கியத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956ன் பிரிவு 8ஐ விளக்கியுள்ள நீதிபதிகள், தந்தைக்குக் கிடைத்த சொத்தில் பேரனுக்குத் தானாகவே பிறப்புரிமை உருவாகாது என்றும், அந்தச் சொத்தை விற்பனை செய்வது உள்ளிட்ட முடிவுகளைத் தந்தை சுதந்திரமாக எடுக்கலாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தாத்தா சொத்து
உச்சநீதிமன்ற தீர்ப்புநியூஸ்தமிழ்24x7

தாத்தா சொத்து: இந்து வாரிசுரிமைச் சட்டம் சொல்வது என்ன?

இந்த வழக்கில் எழுப்பப்பட்ட முக்கியமான கேள்வி, தாத்தாவின் சொத்தில் தந்தைக்குப் பாகப்பிரிவினை மூலம் கிடைத்த நிலத்தில், தந்தையின் மகனான பேரனுக்குப் பிறப்புரிமை உண்டா? என்பதுதான்.

இதற்கு விளக்கமளித்த நீதிபதிகள், 1956ம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 8ஐ சுட்டிக்காட்டினர்.

ஒரு இந்து ஆண் உயில் எழுதாமல் இறந்தால், அவருடைய சொத்துகள் முதலில் சட்டப்படியான முதன்மையான வாரிசுகளுக்குச் சென்றடையும். இதில் மகன், மகள், மனைவி, தாய் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர். இறந்துபோன மகன் அல்லது மகளின் வாரிசுகளுக்கும் குறிப்பிட்ட நிபந்தனைகளின்படி உரிமை உண்டு.

ஆனால், தந்தை உயிருடன் இருக்கும்போது அவரது மகனான பேரன், தாத்தாவின் நேரடி முதன்மையான வாரிசாகக் கருதப்படுவதில்லை. இந்தச் சட்டத்தின்படி தாத்தாவின் சொத்துகள் அவரது முதன்மையான வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பங்குகள் ஒதுக்கப்பட்டுவிட்டால், அந்தப் பங்குகள் அவரவர் தனிப்பட்ட சொத்துகளாகி விடும்.

தந்தைக்குக் கிடைத்த சொத்தை அவர் தனது விருப்பப்படி விற்பனை செய்யலாம். அதில் தனது மகனுக்குப் பங்கு அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. தந்தையின் வாழ்நாளிலேயே அந்தச் சொத்தில் பேரன் பிறப்புரிமை அடிப்படையில் பாகப்பிரிவினை கோர முடியாது என்பதே சட்டத்தின் நிலைப்பாடு என்று நீதிபதிகள் விளக்கினர்.

பூர்வீக சொத்து
என்ன வேறுபாடு?நியூஸ்தமிழ்24x7

இந்து வாரிசுரிமை: தமிழகத்தின் சிறப்புச் சட்டமும் பொருந்தாது

தமிழகத்தில் 1989ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 29-ஏ, கூட்டுக் குடும்பச் சொத்தில் மகள்களுக்கும் மகன்களுக்கு இணையான பிறப்புரிமையை வழங்குகிறது.

இந்தப் பிரிவை முன்வைத்தும் உச்சநீதிமன்றத்தில் பேரன் தரப்பில் வாதிடப்பட்டது. தாத்தாவின் சொத்தில் தந்தைக்குப் பங்கு ஒதுக்கப்பட்டபோது தான் பிறந்துவிட்டதால், கூட்டுக் குடும்பச் சொத்தில் தனக்கிருந்த உரிமை பாதிக்கப்படாது என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கில் தாத்தாவின் சொத்துக்கான வாரிசுரிமை நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்றும், அந்தச் சொத்துகள் சட்டப்படியான வாரிசுகளுக்குப் பிரிக்கப்பட்டுவிட்டன என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, தமிழகத்தின் பிரிவு 29-ஏ மற்றும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 6 ஆகியவற்றின் அடிப்படையில் பேரன் உரிமை கோர முடியாது என்று தீர்மானித்தனர்.

மேலும், 1994ம் ஆண்டு செய்யப்பட்ட சமரசப் பாகப்பிரிவினைத் தீர்ப்பையும், 1997ம் ஆண்டு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரங்களையும் நேரடியாக எதிர்த்து பேரன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.

பேரனுக்கு உரிமையில்லை
தாத்தாவின் சொத்துநியூஸ்தமிழ்24x7

பூர்வீகச் சொத்து - வாரிசுரிமை சொத்து: என்ன வேறுபாடு?

இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவம், பூர்வீகச் சொத்து, வாரிசுரிமை மூலம் கிடைக்கும் சொத்து ஆகியவற்றுக்கு இடையிலான சட்ட வேறுபாட்டைத் தெளிவுபடுத்தியிருப்பதில் தான் இருக்கிறது.

ஒரு சொத்து பல தலைமுறைகளாகக் குடும்பத்தில் இருப்பதாலேயே அது தானாகவே பேரன், பேத்திகளுக்குப் பிறப்புரிமை அளிக்கும் கூட்டுக் குடும்பச் சொத்தாகிவிடாது.

உண்மையான கூட்டுக் குடும்பச் சொத்தில், கூட்டுரிமையாளராக இருக்கும் ஒருவரின் குழந்தைக்குப் பிறப்பின் அடிப்படையில் உரிமை ஏற்படலாம். ஆனால், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 8ன் கீழ் தந்தைக்குத் தனிப்பட்ட முறையில் வாரிசுரிமையாகக் கிடைத்து, பின்னர் பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்தில் அதே விதி பொருந்தாது.

சொத்தில் பங்கு
தீர்ப்பு சொல்வதென்ன?நியூஸ்தமிழ்24x7

எனவே, தாத்தாவின் சொத்து என்ற ஒரே காரணத்தைக் காட்டி பேரன் உரிமை கோர முடியாது. சொத்து எந்த வழியில் தந்தைக்குக் கிடைத்தது, அது கூட்டுக் குடும்பச் சொத்தாகத் தொடர்கிறதா அல்லது சட்டப்படி தனிப்பட்ட சொத்தாக மாறிவிட்டதா என்பதுதான் முக்கியம்.

இந்தச் சட்ட வேறுபாட்டை உறுதிப்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், தந்தைக்குக் கிடைத்த சொத்தில் பேரன் சரிபாதிப் பங்கு கோர முடியாது என்ற கீழமை நீதிமன்றங்களின் முடிவை உறுதி செய்துள்ளது. 29 ஆண்டுகளாக நீடித்த இந்தச் சொத்துத் தகராறுக்கு இதன் மூலம் முடிவு ஏற்பட்டுள்ளது.

தீர்ப்பு சொல்வதென்ன?
உச்சநீதிமன்றம் விளக்கம்நியூஸ்தமிழ்24x7

தந்தைக்குக் கிடைத்த தாத்தாவின் சொத்தில் பேரனுக்குப் பங்கில்லை

இந்தத் தீர்ப்பை, தாத்தாவின் சொத்தில் பேரன், பேத்திகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று பொதுவாகப் பொருள் கொள்ளக் கூடாது. உண்மையான கூட்டுக் குடும்பப் பூர்வீகச் சொத்தில் பேரன், பேத்திகளுக்குப் பிறப்புரிமை இருக்கலாம். ஆனால், தாத்தா உயில் எழுதாமல் இறந்த பிறகு, 1956ம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 8-ன்படி தந்தைக்குக் கிடைக்கும் சொத்து, அவரது தனிப்பட்ட சொத்தாகக் கருதப்படும்.

அந்தச் சொத்தில் பேரனுக்குத் தானாகப் பிறப்புரிமை உருவாகாது. எனவே, தந்தைக்குக் கிடைத்த தாத்தாவின் சொத்தில் பேரன் பங்கு கோர முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தும் சட்டக் கருத்தாகும்.

வீடியோவில் காண...

முழு விவரம்
தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு உரிமை இல்லையா?