குமுறும் அரசு அதிகாரிகள்.. அடுக்குமாடி குடியிருப்பின் அவலம்
லட்சக்கணக்கில் செலவிட்டு கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி கட்டடம் வாழவே முடியாத அளவுக்கு பாழடைந்து விரோதிகளின் கூடாரமாகவே மாறியிருக்கிறது.
கரூர் தாந்தோணி பகுதியில் இயங்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுடன் அமைந்த அடுக்குமாடி குடியிருப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்குடியிருப்பில் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் முதல் அரசு அலுவலக ஊழியர்கள் வரை குடியிருந்து வந்தனர். காலப்போக்கில் பணியிட மாற்றத்தாலும், சொந்த வீடு கட்டி சென்றதாலும் மக்கள் வீடுகளை விட்டு சிறுக சிறுக வெளியேற தொடங்கினர்.
வீடுகளை விட்டு குடியிருப்பாளர்கள் வெளியேற இதுமட்டும் தான் காரணமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குடியிருப்பில் பராமரிப்பு பணி சரிவர நடைபெறாததாலும், வீட்டு வசதி அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளாததாலும் தொடர்ச்சியாக குடியிருப்பாளர்கள் வீடுகளை காலி செய்ய தொடங்கினர். குடியிருப்பில் உள்ள A பிளாக், B பிளாக் தவிர மற்ற அனைத்து பிளாக்குகளிலும் மேற்கூரை இடிந்தும், தேன் கூடுகள் கட்டியும், கரையான் புற்றுடன் பயனற்ற வகையில் காட்சி அளிக்கிறது.
அரசு பல்வேறு துறை ஊழியர்கள் சிரமமின்றி பணிக்கு சென்று வர ஏதுவாக இருந்த குடியிருப்பு தற்போது பாழடைந்த கட்டடமாகவும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதியின்றி செயலிழந்தும் காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மது அருந்திவிட்டு பாலியல் தொழில் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொசுக்கடியில் வீடுகளில் வாழவே முடியாத நிலையில் குடியிருப்புகளில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அங்கு மூன்றாண்டுகளாக வசித்து வரும் பெண் ஒருவர் வேதனையுடன் கூறினார்.
குடியிருப்பில் செடிகள் முளைத்து மேற்கூரை இடிந்து விழுவதாகவும் விரைந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

