

அம்பாசமுத்திரத்தில் வெள்ளதுரையை போட்டியிட வைக்கும் எடப்பாடி பழனிசாமியின் வியூகம் பலிக்குமா? தவெகவின் இசக்கி சுப்பையாவுக்கு TOUGH கொடுப்பாரா வெள்ளதுரை?
அம்பாசமுத்திரத்தில்...
என்ன தான் புயலும், மழையும் வந்தாலும், தாராபுரம், மதுராந்தகம் இடைத் தேர்தலின் சூடே இன்னும் தமிழ்நாட்டில் தணியவில்லை. அப்படி இருக்க, அடுத்தபடியாக கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் விரைவிலேயே வரவிருக்கிறது என்ற தகவல் தான் அரசியல் கட்சிகளை பம்பரமாக சுழல வைத்திருக்கிறது. இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை என்றாலும், கள வேலைகள் என்னவோ வேகமெடுத்திருக்கின்றன.
விராமலிமலை தொகுதியை குறி வைத்து முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டைக்கு பயணமாகியிருக்க, அடுத்த SCHEDULE அம்பாசமுத்திரத்திற்கும் போடப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளராக...
அம்பாசமுத்திரத்தில் தாம் களமிறங்க இருப்பதாக அறிவித்திருக்கும் சீமான், பசியோடு இருக்கும் தனக்கு பிரியாணி கிடைத்தால் விடுவேனா? என்றார். அதாவது, இன்னும் ஒரு தேர்தலிலேயே வெல்லாத தன்னை
அதிமுகவும், திமுகவும் இணைந்து ஆதரவு கொடுத்து, பொது வேட்பாளராக நிற்க வைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார். அம்பாசமுத்திரத்தில் வெற்றி பெற்று எப்படியாவது சட்டமன்றம் செல்ல வேண்டும் என சீமான், அதிமுக, திமுகவின் ஆதரவை மிகுந்த ஆசையுடன் எதிர்நோக்க, அதிமுகவோ வேறொரு கணக்கில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதாவது, அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் முன்னாள் காவல்துறை அதிகாரியான வெள்ளதுரையை போட்டியிட வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஏதுவாக, அதிமுகவில் இணைந்திருக்கிறார் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை.
வெள்ளதுரை ஸ்பெஷலிஸ்ட்
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டை சேர்ந்தவர் வெள்ளதுரை. முதன்முதலில் 1997ஆம் ஆண்டு புதுக்கோட்டை கீரனூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்து, பின்னர் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கோ.சி.ஜான் என்ற பிரபல ரவுடியை என்கவுன்ட்டர் செய்தார். இதுதான் வெள்ளதுரையின் முதல் என்கவுன்ட்டர்.
அதற்கு பிறகு சென்னையில் அயோத்திகுப்பம் வீரமணி என்கவுன்ட்டர், 2004ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டர் குழுவில் முக்கிய பொறுப்பு என 12க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்களை நடத்தி என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்றவர்.
எடப்பாடி பழனிசாமி வியூகம்
ஓய்வுக்கு பிறகு அரசியல் ஆர்வம் எட்டிப்பார்க்க, சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க. சார்பில் 2026 தேர்தலில் நாங்குனேரி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், வெறும் ஆயிரத்து 048 வாக்குகள் மட்டுமே பெற்றார். காவல்துறை அதிகாரியாக இருந்த போதும், அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று முகம் தெரிந்த காவல் அதிகாரியாக வெள்ளதுரை பார்க்கப்பட்ட பின்னணியில் சசிகலாவின் கைங்காரியமும் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் தான், ஓய்வுக்கு பிறகு சசிகலா கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் தான், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அதாவது, அதிமுக சார்பில் வெள்ளதுரையை களமிறக்கும் முடிவில் முக்கிய வியூகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதிமுக கணக்கு
அம்பாசமுத்திரம் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர், நாடார் சமூகத்தினர் வசித்து வரும் நிலையில், அதிமுகவின் முகமாக அம்பாசமுத்திரத்தில் இருந்த இசக்கி சுப்பையா தவெகவுக்கு மாறியதால், அதிமுகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அங்கு பெரிய நிர்வாகிகள் யாரும் இல்லை.
இதனால், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் காவல் அதிகாரியான வெள்ளதுரைக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறலாம் என எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.
வாக்குவங்கியை கவர முடியுமா?
வெள்ளதுரையின் மனைவி கடந்த 2021 தேர்தலில் அமமுக சார்பில் அம்பை தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த நிலையில், தற்போது வெள்ளதுரைக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமா? என்ற
எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தவெக சார்பில் போட்டியிடும் இசக்கி சுப்பையா அம்பை தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தின் முகமாக பார்க்கப்படும் நிலையில், இசக்கி சுப்பையாவை தாண்டி முக்குலத்தோர் வாக்கு வங்கியை வெள்ளதுரையால் கவர முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சீமான் கரை சேர்வாரா?
அதிமுகவும், திமுகவும் சேர்ந்து பொது வேட்பாளராக தன்னை அறிவிக்கும் என மனக் கோட்டை கட்டிக் கொண்டிருந்த சீமானின் கனவுக்கு ஆரம்பத்திலேயே அதிமுக அதிர்ச்சி கொடுத்திருக்க, அடுத்தபடியாக திமுக என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
நாடார் சமூக வாக்குகளை நம்பி களமிறங்கும் சீமான் நட்டாற்றில் நிற்பாரா? அல்லது கரை சேர்வாரா? என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியும்.