

ChatGPT செயலி மற்றும் கற்பனையான எழுத்தாளர் பெயர்களில் தரம் குறைந்த புத்தகங்களை அச்சிட்டு அரசுப் பணத்தை சுருட்டியதாக, பொது நூலகத்துறை அதிகாரிகள் மற்றும் அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழல் முறைகேடு அனைத்தும் திமுக ஆட்சிக் காலத்திலேயே அரங்கேறியிருப்பது லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு என பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் பற்ற வைத்த தீ, தமிழ்நாட்டின் அறிவுடைமை சமூகத்தை அதிர்ச்சியடை செய்துள்ளது.
இந்த முறைகேட்டிற்கு திமுகவும்- தவெகவும் நான், நீ என மாறிமாறி குற்றம் சாட்டிய நிலையில், கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி காமராஜர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலை அம்மாள் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்ட நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் கடிதத்தின் அடிப்படையில், பூர்வாங்க விசாரணையில் இறங்கியது தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை.
முதல் கட்ட விசாரணையில்...
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், பொது நூலக இயக்குனரகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் நூலகத்துறை அலுவலர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிப்படையான புத்தகக் கொள்முதல் கொள்கை மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முற்றிலுமாக மீறப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியானதாக தெரிவித்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.
அரசாணை வெளியீடு
கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் மின் நூல்கள் வாங்குவது தொடர்பாக, கடந்த திமுக ஆட்சியில் 2024 செப்டம்பர் 3ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, கொள்முதலுக்கான அரசாணையும் 2025 நவம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 2026 பிப்ரவரி 27ஆம் தேதி வெளியிட்ட அரசாணை மூலம் 50 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், ஒருங்கிணைந்த நிதியிலிருந்து 30 கோடி ரூபாய் முன்பணமாகவும் வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு
திமுக ஆட்சியில், 2025 நவம்பர் 18ஆம் தேதி பொது நூலக இயக்குநர் வெளியிட்ட செயல்முறை ஆணை மூலம் எஸ்.காமாட்சி, தினேஷ் குமார், எஸ்.சந்தன கார்த்திகேயன், எஸ்.சந்தன கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் 18ஆம் தேதி பதிப்பாளர்களை அழைத்து செய்திக்குறிப்பு வெளியிட்ட ஒருங்கிணைப்புக் குழு, கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்க 2026 ஜனவரி 5ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவித்துள்ளது.
2026 ஜனவரி 9ஆம் தேதி புத்தகத் தேர்வுக் குழு புத்தகங்களை பரிசீலித்த நிலையில், அதே மாதம் 24ஆம் தேதி, விலை நிர்ணயக்குழு கூடி புத்தகங்களுக்கான விலைகளையும் நிர்ணயித்துள்ளது.
ஊழல் முறைகேடு
தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், 2026 பிப்ரவரி 5ஆம் தேதி உயர்மட்டக் குழு முன்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான கொள்முதல் ஆணைகள் 2026 பிப்ரவரி 7ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளன. அதில், ஊழல் முறைகேட்டிற்கு ஆளான அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனங்களுக்கு பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
போலியான பதிவுகள்
பின்னர், 2026 பிப்ரவரி முதல் புத்தகங்கள் பெறப்பட்டு, மார்ச் 2026 முதல் TN-PFTS எனப்படும் தமிழ்நாடு பொது நிதி கண்காணிப்பு அமைப்பு வழியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
ஆனால், புத்தகப் பரிந்துரைக் குழு பரிந்துரைத்த 26 ஆயிரம் புத்தகங்களைத் தாண்டி, ஒருங்கிணைப்புக் குழு தன்னிச்சையாக பல புத்தகங்களை சேர்த்திருப்பதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஆர்.மோகன் என்பவருக்கு சொந்தமான 'அகல் விளக்கு பதிப்பகம்' மற்றும் 'பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ்' ஆகிய இரு நிறுவனங்களும் ஒரே முகவரியில் செயல்பட்டு, ஆயிரத்து 857 புத்தகங்களை விநியோகித்துள்ளன.
இந்தப் பதிப்பகத்தின் 418 எழுத்தாளர்களில், 6 எழுத்தாளர்கள் மட்டும் தொடர்பில்லாத பல்வேறு துறைகளில் 745 புத்தகங்களை எழுதியதாக போலிப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
பதிப்புரிமை மீறல்
இந்த மோசடியின் உச்சமாக, கற்பனையான எழுத்தாளர் பெயர்களில், இணையதளம் மற்றும் ChatGPT செயலி மூலம் தகவல்களைத் திரட்டித் தரம் குறைந்த புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI), புவிசார் அரசியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் குறித்து ஆய்வு செய்யும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் நினா ஷிக் (Nina Schick) எழுதிய "Deepfakes: The Coming Infocalypse" என்ற நூல், அகல் விளக்கு பதிப்பகத்தில் 'மனிஷா சரவணன்' பெயரிலும், பீனிக்ஸ் பதிப்பகத்தில் 'சாருலதா விவேக்' பெயரிலும் காப்பியடித்து பதிப்புரிமை மீறலும் நடந்துள்ளது.
இதுமட்டுமின்றி, தமிழ் பிரிவில் வைக்கப்பட்ட புத்தகங்களில் 'நாலடியார்' என்பதை ஒரு புலவர் என்றும், 'மதுரைக்காஞ்சியின்' ஆசிரியர் ஒரு மன்னர் என்றும் வரலாற்றுப் பிழைகளுடன் தவறான தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளன. பல புத்தகங்களுக்கு உரிய ISBN எண் கூட பெறப்படவில்லை.
இந்த கூட்டுச்சதி மூலம் தகுதியற்ற புத்தகங்களை கொள்முதல் செய்ததால், கோவை மற்றும் பிற பொது நூலகங்கள் வழியாக அரசுக்கு 1 கோடியே 74 லட்சத்து ஆயிரத்து 162 ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக, சென்னை பொது நூலக இயக்ககம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோவை பெரியார் அறிவுலகம் நூலக அதிகாரிகள் மற்றும் பதிப்பக உரிமையாளர் மோகன் மீது ஊழல் தடுப்புச் சட்டம், பதிப்புரிமைச் சட்டம், பி.என்.எஸ். சட்டம் என 9 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில், நூலக புத்தகங்கள் கொள்முதல் முறைகேடுகள் யாவும் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலேயே நடந்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
வீடியோவைக் காண...