ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ், தவெக எம்எல்ஏ மீது FIR - ஒரே நாளில் மாறிய காட்சி

பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உறுதியானதை அடுத்து, பணியிடத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எம்.எல்.ஏ. மீது வழக்குப் பாய்ந்திருக்கிறது. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக ஜூலை மாதமே ஆட்சியர் கொடுத்தது நீதிமன்றத்தின் மூலம் அம்பலமாகியிருக்க, எம்.எல்.ஏ. மீதான விசாரணையை கண்காணிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ், தவெக எம்எல்ஏ மீது FIR - ஒரே நாளில் மாறிய காட்சி
Published on: 

எம்எல்ஏவின் குருட்டு புத்தி

மாவட்டத்தின் ஆட்சியரான பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்.எல்.ஏ.வின் குருட்டு புத்தி நீதிமன்றம் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், மாவட்டத்தின் பெண் ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக தகவல் பரவிய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிய சொல்லி அதிமுக வழக்கறிஞர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது, ஆட்சியர் புகார் கொடுக்கவே இல்லை என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவிக்க, புகார் கொடுக்காத போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மீண்டும் ஒரு முறை ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. அத்துமீறினாரா? என்பது புரியாத புதிராக இருந்த நிலையில், ஒரே நாளில் மொத்தமும் தலைகீழாக மாறியிருக்கிறது.

ஒரே நாளில் அதிரடி திருப்பம்

திங்கட்கிழமை விசாரணையை வைத்து எம்.எல்.ஏ. மீது எந்த குற்றமும் இல்லை என்ற கண்ணோட்டமே இருந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை விசாரணையில் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வண்டவாளம் காற்றில் பறந்திருக்கிறது.

விசாரணை தொடங்கியதும் பெண் மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்த விபரங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர். அப்போது, ஆட்சியரிடம் இருந்து கள்ளக்குறிச்சி எஸ்.பி., மூலமாக முறைப்படி புகார் பெறப்பட்டுள்ளது எனவும், எம்.எல்.ஏ., அருள் விக்னேஷுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதல் தகவல் அறிக்கையை வாசித்து பார்த்த நீதிபதி, ஜூலை மாதமே பெண் ஆட்சியர் புகார் அளித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி அதிர வைத்தார்.

விசாரணை அதிகாரி யார்?

நீதிமன்றம் மூலமாக தான் பெண் ஆட்சியர் ஜூலை மாதமே புகார் கொடுத்திருக்கிறார் என்பதே வெளியுலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. தலைமைச் செயலாளர், தூய்மை பணியாளர், ஆட்சியர் என யாராக இருந்தாலும் பாலியல் அத்துமீறலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற

நீதிபதி, வழக்கில் விசாரணை அதிகாரி யார்? என கேள்வி எழுப்பினார். அதற்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி. தான் விசாரணை அதிகாரி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, எம்.எல்.ஏ.வுக்கு எதிரான புகார் என்பதால் ஐஜி அல்லது டிஐஜி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை

பெண்களுக்கு எதிரான புகார் குறித்து மாநில அளவில் ஏன் குழுக்கள் அமைக்கவில்லை? என்ற நீதிபதி, பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு எதிராக பதிவிடப்பட்ட கருத்துக்களை ஏன் இன்னும் நீக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆட்சியருக்கு எதிரான பதிவுகளை நீக்கி விட்டதாக காவல்துறை கூறிய நிலையில், அதனை ஏற்க மறுத்த நீதிபதி, அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டு முடிந்த பிறகு தான் பதிவுகள் நீக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அதோடு, எம்.எல்.ஏ.வுக்கு எதிரான பாலியல் புகாரில் அரசு யாரையாவது காப்பாற்ற முயற்சிப்பது தெரிந்தால் என, ’க்’ வைத்த நீதிபதி லட்சுமி நாராயணன், அதற்கு மேல்அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என முடித்துக் கொண்டார். அப்போது, வழக்கில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது

அரசியலாக்க வேண்டாம்

வழக்கில் தனது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பெண் ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா கோரிக்கை வைக்க, மாவட்ட ஆட்சியரையும் ஒரு வாதியாக சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, உத்தரவை வாசிக்க தொடங்கிய நீதிபதி, வழக்கை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதோடு, டிசம்பர் 22ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

விசாரணையின் முன்னேற்றம் குறித்து இன்னும் மூன்று நாட்களில் அதாவது நவம்பர் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

ஐந்து பிரிவுகளில் வழக்கு

இதனிடையே, பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்திற்கு விவகாரம் வந்த பின்பே, பணியிடத்தில் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

வீடியோவில் காணலாம்

ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ், தவெக எம்எல்ஏ மீது FIR - ஒரே நாளில் மாறிய காட்சி
ஆபாச மெசேஜ், சிக்கிய தவெக MLA