

தமிழகத்தில் மட்டும் 484 இடங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க GTS அளவீட்டு மையங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில் ஒன்றுதான் இன்று சர்ச்சையில் சிக்கியிருக்கும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள நில அளவை கல் தூண். பல்வேறு சாதனைகள், சோதனைகள் நிறைந்த இந்திய நில அளவீட்டின் வியக்கத்தக்க வரலாற்றை பார்க்கலாம்.
நில அளவீடு குறிப்புகள்
நிலத்தை அளப்பது என்பது வெறும் எல்லைகளை நிர்ணயிப்பதற்கான பணி மட்டுமல்ல. அரசின் வருவாய், விவசாயம், நிர்வாகம் என அனைத்திற்கும் அடிப்படையானது. பண்டைய இந்தியாவில் வேதகாலம் தொடங்கி, சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் வரை நில அளவீடு குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் 'உலகளந்த கோல்' போன்ற அளவுகோல்களை பயன்படுத்தி நிலங்கள் அளவிடப்பட்டு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
பின்னர், ஷெர்ஷா சூரி, முகலாயப் பேரரசர் அக்பரின் அமைச்சர் தோடர்மால் ஆகியோர் நில அளவீடு மற்றும் வருவாய் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். ஆனால், இந்திய நில அளவீட்டில் புதிய அறிவியல் அத்தியாயத்தைத் தொடங்கியது 19ஆம் நூற்றாண்டின் மாபெரும் முக்கோணவியல் ஆய்வுதான்.
கன்னியாகுமரி முதல் இமயமலை வரை
1802ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி, சென்னையின் பரங்கிமலையில் இருந்து வில்லியம் லாம்டன் தலைமையில் Great Trigonometrical Survey தொடங்கியது. பரங்கிமலையில் இருந்து பெரும்பாக்கம் குன்று வரை சுமார் 12.1 கிலோ மீட்டர் தூரம் இரும்புச் சங்கிலிகளால் அளவிடப்பட்டு முதல் அடிப்படைக் கோடு உருவாக்கப்பட்டது.
நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சங்கிலியால் அளப்பது சாத்தியமில்லாததால், முக்கோணவியல் முறையில் தூரங்களும் உயரங்களும் கணக்கிடப்பட்டன. இதற்காக அரை டன் எடையுள்ள பிரம்மாண்டமான தியோடோலைட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
லாம்டனுக்குப் பிறகு ஜார்ஜ் எவரெஸ்ட் இந்த ஆய்வைத் தொடர்ந்து விரிவுபடுத்தினார். கன்னியாகுமரி முதல் இமயமலை வரை நீண்ட இந்த மாபெரும் ஆய்வுப் பணி சுமார் 70 ஆண்டுகள் நடைபெற்றது.
கோள முக்கோணவியல் கணக்கீடு
இந்த வரலாற்றின் மிக முக்கியமான இந்திய ஆளுமை, கணித மேதை ராதாநாத் சிக்தர்.
1831ஆம் ஆண்டு சர்வே ஆஃப் இந்தியாவின் கணிப்பாளராக பணியில் சேர்ந்த இவர், கோள முக்கோணவியல் கணக்கீடுகளில் தனித்திறன் பெற்றிருந்தார்.
1852ஆம் ஆண்டு, இமயமலையில் உள்ள சிகரம் 15 தான் உலகின் மிக உயரமான சிகரம் என்பதைத் தமது கணக்கீடுகள் மூலம் கண்டறிந்தார் ராதாநாத் சிக்தர்.
அதன் உயரம் சுமார் 29 ஆயிரம் அடி எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் ஆண்ட்ரூ வா என்ற ஆங்கிலேய அதிகாரி 29,002 அடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்தச் சிகரத்திற்கு ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பெயர் சூட்டப்பட்டது.
இதேபோல், நைன் சிங் ராவத், கிஷன் சிங் போன்ற இந்திய ஆய்வாளர்கள் திபெத் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாறுவேடத்தில் பயணம் செய்து, துல்லியமான புவியியல் தகவல்களை சேகரித்துள்ளனர்.
இவர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த மாபெரும் ஆய்வை நிறைவு செய்திருக்க முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் உண்மை.
இந்திய நில அளவீட்டு வரலாற்றில் தமிழ்நாட்டிற்கும் மிக முக்கியமான இடம் உண்டு.
சென்னையின் பரங்கிமலை, பெரும்பாக்கம் குன்று, மதுரையின் திருப்பரங்குன்றம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள உதயத்தூர், நீலகிரி மலைத்தொடர் எனப் பல பகுதிகளில் பழமையான GTS அளவீட்டு மையங்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தியோடோலைட் கல் மற்றும் பாறையில் பொறிக்கப்பட்ட வட்டத்திற்குள் புள்ளி போன்ற அடையாளங்கள், அக்கால நில அளவீட்டுப் பணிகளின் வரலாற்றுச் சான்றுகளாக கருதப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட 484 GTS மையங்களை ஐந்து தொகுதிகளாக ஆவணப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கற்கள் அல்ல... காலத்தின் சாட்சி
ஒரு காலத்தில் இரும்புச் சங்கிலிகளாலும், பிரம்மாண்டமான தியோடோலைட் கருவிகளாலும் அளக்கப்பட்ட இந்திய நிலப்பரப்பு. இன்று செயற்கைக்கோள்களின் உதவியுடன் டிஜிட்டல் வரைபடங்களாக மாறியிருக்கிறது.
ஆனால், இந்த அறிவியல் வளர்ச்சியின் அடித்தளத்தில் உழைத்த இந்திய மேதைகளின் வரலாற்றையும், தமிழகத்தின் பல்வேறு மலை உச்சிகளில் இன்றும் அமைதியாக நிற்கும் GTS கல் தூண்களையும் நாம் மறந்துவிடக் கூடாது.
இவை வெறும் கற்கள் அல்ல. இந்தியாவின் அறிவியல் வரலாற்றைச் சொல்லும் காலத்தின் சாட்சிகள்.
இந்த சாட்சிகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள நில அளவை தூணிற்கு வந்த சோதனை காலம்தான் இன்று. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தாலும் மறைக்கலாமே ஒழிய, வரலாற்றை எந்த மூடி போட்டும் மூட முடியாது என்பது காலத்தின் விதி.
வீடியோவைக் காணலாம்