குரல்வளையை நெரிக்கும் தீண்டாமைச்சுவர் நூற்றாண்டு கால போராட்டம், பலன் கிடைக்குமா?

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரத்தில் பட்டியலின மக்களின் குரல்வளையை கட்டிப்போட்டதுபோன்று 15 அடி உயரத்திற்கு எழுப்பட்டுள்ள தீண்டாமைச்சுவரை அகற்ற வேண்டும் என அந்த மக்கள் நூற்றாண்டு காலம் தவித்து வரும் நிலையில் அதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்திக்குழுவிடம் மாற்று சமூக மக்கள் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பலன் கிடைக்குமா?
தீண்டாமைச்சுவர்நியூஸ்தமிழ்24x7
Published on: 

சாந்தலிங்கபுரமாகுமா சங்கரலிங்கபுரம்?

பட்டியலின மக்களின் 100 ஆண்டுகால வலியை உலகுக்கு காட்டும் நோக்கில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்திக்குழுவிடம் ’எங்கள் கோவிலை வீடியோ எடுக்கக்கூடாது’ என கூடி நின்று ரகளை செய்த மாற்று சமூக மக்களுக்கு, அந்த பெருமாள் கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது, அங்கு அனைத்து சமுதாய மக்களும் வழிபாடு செய்யலாம், சாதியும் இல்லை ஒரு மண்ணும் இல்லை என்பதை யார்தான் புரிய வைப்பது?

பலன் தருமா?
சங்கரலிங்கபுரம்நியூஸ்தமிழ்24x7

பொறுமைக்கும் எல்லை உண்டு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது சங்கரலிங்கபுரம் கிராமம். இங்கு 250க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினரும், 200க்கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 30 ஏக்கர் நத்தம் அரசு புறம்போக்கு நிலம் உள்ள நிலையில் அதில் 29 ஏக்கர் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பாட்டிலும், மீதமுள்ள ஒரு ஏக்கர் நிலம் மட்டும் பட்டியலின மக்களின் பயன்பாட்டிலும் உள்ளன.

அந்த 1 ஏக்கர் நிலத்தில் 1920ஆம் ஆண்டு கல்மண்டபமும், காளியம்மன் கோவிலையும் உருவாக்கிய பட்டியலின மக்கள் ஆண்டுதோறும் கொடை விழாவும் நடத்தி வந்தனர். இதனை விரும்பாத மாற்று சமூகத்தினர் சாதிய வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததாக தெரிகிறது. மாற்று சமூகத்தினரின் விவசாய தோட்டங்களில் கூலி வேலை செய்த பட்டியலின மக்கள் ஆரம்பத்தில் அமைதி காத்தனர். ஆனால், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுதானே?

தூய சகாய அன்னை

அந்த கூலி வேலையையே தூக்கி எறிந்துவிட்டு கல் உடைக்கும் தொழிலுக்கு மாறியதாக கூறப்படுகிறது. ”நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தால் வீண்போகாது“ என்பதுபோல் வருமானமும் வளத்தையே கொடுத்துள்ளது. அவர்கள் பொருளாதார ரீதியாக வளர்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தொடர்ச்சியாக சாதிய கலவரங்களில் ஈடுபட்டதாகவும், அதனால் கடந்த 1935ஆம் ஆண்டு பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரது உயிரும் காவு வாங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த விரக்தியில் பட்டியலினத்தை சேர்ந்த பெரும்பகுதி மக்கள் ஆர்.சி.கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். தொடர்ந்து, கல்மண்டபத்தில் தூய சகாய அன்னை ஆலயத்தை அமைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்.

இதனால், ஏற்கெனவே காளியம்மன் கோவில் அமைத்து வழிபாடு செய்த அதே சமூக மக்கள் கோவிலை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

அதிர்ச்சி
தடுப்புச்சுவர்நியூஸ்தமிழ்24x7

1940ஆம் ஆண்டு ஆதிக்க சாதியினரின் தெருவில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் பட்டியலின மாணவர்களை சமமாக அமர்ந்து படிக்கவிடாமலும் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாய்ப்பு கிடைக்கவில்லையா? அதனை உருவாக்குவோம் என வெகுண்டெழுந்த பட்டியலின மக்கள், கடந்த 1948ஆம் ஆண்டு தங்கள் குடியிருப்புக்கு அருகிலேயே ஆர்சி தொடக்கப்பள்ளியை எழுப்பினர்.

அதேபோல், தங்கள் சமுதாய மாணவர்கள் விளையாடுவதற்கும், பள்ளி நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் குறிப்பிட்ட அந்த ஒரு ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் 80 சென்ட்டை பயன்படுத்தி உள்ளனர். மீதமுள்ள 20 சென்ட் நிலத்தில்தான் வழிபாட்டு தலங்கள் உள்ளன.

15 அடி உயர தடுப்புச்சுவர்

இந்நிலையில், கல்மண்டபத்தில் இயங்கி வந்த தூய சகாய அன்னை ஆலயத்தை புனரமைக்க முடிவு செய்த பட்டியலின மக்கள், கடந்த 1955 ஆம் ஆண்டு அதற்கான பணிகளை துவங்கினர். நினைத்தபடியே ஆலயத்தை கட்டியெழுப்பி 1965ஆம் ஆண்டு திறப்பு விழாவும் நடத்தினர். அந்த, ஆலயத்தின் முன்பகுதியை பட்டியலின மக்கள் ஆக்கிரமித்து விடுவார்களோ? என முந்திக்கொண்ட மாற்றுசமூகத்தினர், மேற்குபக்கத்தில் 15 அடி உயரத்திற்கு மிகப்பெரிய தடுப்புச்சுவரை எழுப்பினர். அதனையும், எடுத்தவுடனேயே எல்லாம் எழுப்பிவிடவில்லை

மெல்ல மெல்ல தங்களின் சாமர்த்தியத்தில்தான் கட்டி உள்ளனர். ஆனால், அந்த தடுப்புச்சுவர்தான் நூறாண்டுகால போராட்டமாக மாறும் என அப்போது பட்டியலின மக்கள் கொஞ்சம்கூட நினைத்து பார்க்கவில்லை.

தூத்துக்குடி
சுவருக்கு பட்டாநியூஸ்தமிழ்24x7

பொதுப்பாதை மூடல்

தூய அன்னை ஆலயத்தின் மேற்கு பக்கத்தில் வசித்து வந்த ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம், 1977ல் ஆலய வாசலை மறைத்து பனை மட்டையால் மாட்டுத்தொழுவம் ஒன்றை அமைத்து தங்கள் மாடுகளை கட்டி உள்ளனர். அதன்பிறகு 1989ல் 3 அடி உயரத்திற்கு மண்சுவர் எழுப்பினர்.

இதனால், பட்டியலின மாணவர்கள் செல்லும் பள்ளி மைதான பாதை அடைபட்டது. மேலும், அவர்கள் நாகலாபுரம், புதூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்கான பொதுப்பாதையும் மூடப்பட்டது. அப்படி ஒரு பொதுப்பாதை இருந்தது என்பது தற்போது வரைபடத்தில் மட்டும்தான் உள்ளது.

தீண்டாமைச் சுவர்...

மாட்டுத் தொழுவம், மண்சுவர் என நேக்காக காய் நகர்த்திய அந்த மாற்று சமூக குடும்பத்தினர், பட்டியலின மக்களின் எதிர்ப்பையும்மீறி கடந்த 1994ஆம் ஆண்டு நத்தம் நிலவரித் திட்டத்தில் முறைகேடாக அந்த சுவருக்கு பட்டா வாங்கியதாக தெரிகிறது. அப்போதைய விளாத்திகுளம் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா கொடுக்க, வெறும் மூன்றடி மண் சுவரை 200 அடி நீளம் மற்றும் 15 அடி உயர கல்சுவராக மாற்றினர் மாற்று சமூக மக்கள்.

அந்த சுவர்தான் தற்போது தீண்டாமை சுவராக உருவெடுத்து நிற்கிறது. இந்த சுவரை அகற்றவும், அதற்கான பட்டாவை ரத்து செய்யவும் வலியுறுத்தி 1997ல் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் அப்போதைய மாவட்ட ஆட்சியருக்கு மனுவும் கொடுத்தனர். அதன்பிறகுதான், இருசமூக மக்களுக்குமான சாதிப்பகை இன்னும் அனலாக மாறியது.

அதிர்ச்சி
இது தான் சுவர்நியூஸ்தமிழ்24x7

சூறையாடி வெறியாட்டம்

இதேபோல், 2002ஆம் ஆண்டு விளாத்திகுளம்-அருப்புக்கோட்டை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. அப்போது, ஆதிக்க சாதியினரும் காவல் துறையோடு கூட்டு சேர்ந்து பட்டியலின மாணவர்களின் கல்விச் சான்றுகள், சொத்து பத்திரங்கள், ஆடை, அணிகலன்களை சூறையாடி வெறியாட்டம் கண்டதாக புகார் எழுந்தது.

அதோடு, மாதக்கணக்கில் கிராமத்திற்குள் யாரையும் நுழையவிடாமல் ஒட்டுமொத்த கிராமத்தினரும் சிறைபடுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அந்தநேரத்தில், சங்கரலிங்கபுரம் வந்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மக்கள் தங்கள் மனக்குமுறலை முறையிட, தீண்டாமைசுவர் அகற்றப்படும் என அவர் வாய்மொழியாக உறுதியளித்தார். ஆனாலும் அகற்றப்படவில்லை.

தவெக அரசுக்கு கோரிக்கை

2024 ஜூன் 24 முதல் உள்ளூரில் உள்ள புத்தர் திடலில் தினம்தோறும் போராடி வரும் பட்டியலின மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலைகூட புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். அப்படி இருந்தும் அவர்களின் கோரிக்கைக்கு யாரும் செவி சாய்க்கவில்லை.

அவமான சின்னமாக நிற்கும் தீண்டாமைச்சுவருக்கு பட்டா கொடுத்துள்ளதே விசித்திரமான ஒன்றுதான் எனக்கூறும் பட்டியலின மக்கள் அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும், தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும், திராவிட கட்சிகள் செய்ய முடியாததை தவெக அரசு செய்து காட்டி சங்கரலிங்கபுரத்தை சாந்தலிங்கபுரமாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி
சங்கரலிங்க புரம்நியூஸ்தமிழ்24x7

பரவும் வீடியோ

இதனிடையே, சமீபத்தில் கைது செய்யப்பட்ட நாதகவை சேர்ந்த கார்த்திகாவும் கூட சங்கரலிங்கபுரம் தீண்டாமைசுவரை அகற்றிக்காட்டுங்கள் என அமைச்சர் வன்னி அரசுவிற்கும், தவெக அரசுக்கும் சாவல் விட்டிருந்தார்.

கார்த்திகா தற்போது தாராபுரத்தில் இருந்தாலும் அவரது கணவர் வீடு சங்கரலிங்கபுரம் தூய அன்னை ஆலயத்திற்கு எதிரில்தான் உள்ளது. அதனால்தான், அவரும் நூறாண்டுகால போராட்டத்தில் வலியை வெளிப்படுத்தி இருந்தார். அந்த வீடியோவும் ஒருபக்கம் பரவி வருகிறது.

பலன் கிடைக்குமா?
குரல்வளையை நெரிக்கும் தீண்டாமைச்சுவர்