உலக அமைதிக்காக கைகோர்த்த டிரம்ப், ஜின்பிங், புதின்?

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய மூவரும் ஒரே மேசையில் அமர்ந்து நடத்திய சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
உலக அமைதிக்காக கைகோர்த்த டிரம்ப், ஜின்பிங், புதின்?
Published on: 

முப்பெரும் தலைவர்கள்...

உலகின் மூன்று மிகப்பெரிய வல்லரசுகளின் தலைவர்கள். மூவருமே அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளின் தலைவர்கள். உலகப் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம், எரிசக்தி, ராணுவ வலிமை, போர் மற்றும் அமைதி எனப் பல தளங்களில் உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் செல்வாக்கைக் கொண்டவர்கள்.

உலகின் பல்வேறு பகுதிகளில் போர்களும் ராணுவ மோதல்களும் தீவிரமடைவதற்குப் பின்னணியில் இருக்கும் வல்லரசுகளின் தலைவர்களே, இப்போது உலக அமைதியைப் பற்றிப் பேசுவது எந்த அளவுக்கு நம்பகமானது? உலக அமைதிக்கான உண்மையான முயற்சியா இது? அல்லது தங்களுடைய வல்லரசு ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான புதிய அரசியல் கணக்கா?

சந்திப்பு திடீரென்று உருவானதல்ல

சீனாவின் ஷென்சென் நகரில், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டையொட்டி, வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்கா, சீனா, ரஷ்ய அதிபர்கள் முத்தரப்புச் சந்திப்பை நடத்தியிருக்கிறார்கள். 'உலக அமைதி மற்றும் அணு ஆயுத அபாயங்களைக் குறைப்பது' இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக முன்னிறுத்தப்பட்டது. இந்தச் சந்திப்பு திடீரென்று உருவானதல்ல.

சர்வதேச அரசியலில் தற்போது நிலவும் மூன்று முக்கியமான நெருக்கடிகள் இதற்குப் பின்னணியாக இருக்கின்றன. அதில் முதன்மையானது, அணு ஆயுதப் போட்டியைக் கட்டுப்படுத்துவது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் கையிருப்பைக் கொண்ட நாடுகள். சீனாவும் தனது அணு ஆயுத வலிமையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அணு ஆயுத அபாய குறைப்பு

அமெரிக்கா, ரஷ்யா இடையே அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் இருந்த New START ஒப்பந்தம் 2026 பிப்ரவரியில் காலாவதியாகி விட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டுக்கான முக்கியமான சட்டரீதியான கட்டமைப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தச் சூழலில், சீனாவையும் உள்ளடக்கிய புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்பது டிரம்பின் விருப்பம்.

ஆனால், சீனாவுக்கு இதில் தயக்கம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் அணு ஆயுதக் கையிருப்பும் சீனாவைவிடப் பல மடங்கு அதிகம். சம அளவிலான கட்டுப்பாடுகளை விதிப்பது தங்களுக்கு நியாயமானதல்ல என்பது சீனாவின் வாதம். எனவே, மூன்று நாடுகளும் அணு ஆயுத அபாயத்தைக் குறைப்பது குறித்து பேசியிருப்பது முக்கியமானது.

கூட்டறிக்கை கூறுவதென்ன?

ஆனால், இதற்கான காலக்கெடு, ஆயுதக் குறைப்பு அளவு, கண்காணிப்பு முறை போன்ற எந்த உறுதியான திட்டமும் உருவாகவில்லை. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது, இதேபோல மத்திய கிழக்கில் நடைபெறும் ஈரான் போரும் இந்தச் சந்திப்புக்கான மற்றொரு முக்கியமான பின்னணி.

சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற முத்தரப்பு சந்திப்புக்குப் பிறகு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஐ.நா. அமைப்பைச் சீரமைக்க வேண்டும், அணு ஆயுதங்கள் அணு ஆயுதப் போரைத் தவிர்க்கவும் அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்தவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி, விநியோகத்தை அதிகரிக்க வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்த வேண்டும் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

சந்திப்பால் என்ன லாபம்?

இதைத் தாண்டி இந்தச் சந்திப்பால் மூவருக்கும் என்ன லாபம்? என்ற கேள்வியும் தவிர்க்க இயலாமல் எழுகிறது.

டிரம்பின் அரசியல் பாணியே தனித்துவமானது. பேச்சுவார்த்தை, வர்த்தக பேரம், தனிப்பட்ட உறவுகள் ஆகியவற்றின் மூலம் உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்திருக்கும் சூழலில், சர்வதேச அரங்கில் ஒரு பெரிய ராஜதந்திர வெற்றியைப் பெற்றதாகக் காட்டிக்கொள்வதும் அவருக்கு அரசியல் ரீதியாகப் பயனளிக்கும். உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வருகிறார் புதின். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது ஆணையும் அவருக்கு எதிராக இருக்கிறது.

ரஷ்யாவா? சீனாவா?

இத்தகைய சூழலில், அமெரிக்க அதிபரும் சீன அதிபரும் ஒரே மேடையில் தன்னுடன் அமர்ந்திருப்பது புதினுக்கு மிகப்பெரிய அரசியல் வெற்றி. ரஷ்யா சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படவில்லை; உலகின் மிகப்பெரிய வல்லரசுகளுடன் சமமான நிலையில் பேச்சுவார்த்தை நடத்தும் வல்லமை கொண்ட நாடு என்பதை உலகுக்கு உணர்த்த அவர் விரும்புகிறார். இருப்பினும், சீன அதிபர் ஜின்பிங் தான் இந்தச் சந்திப்பில் மிகப்பெரிய ராஜதந்திர ஆதாயம் பெற்றிருப்பவர்.

உலகின் இரண்டு முக்கிய அணு ஆயுத வல்லரசுகளின் தலைவர்களையும் ஒரே இடத்தில் சந்திக்கச் செய்திருப்பதன் மூலம், உலக அரசியலில் சீனாவின் செல்வாக்கை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தைவான் விவகாரம், தொழில்நுட்ப ஆதிக்கம், வர்த்தகத் தடைகள் போன்ற பிரச்சினைகளில் அமெரிக்காவுடன் சீனாவுக்கு அடிப்படையான முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தச் சந்திப்பில் அந்தப் பிரச்சினைகளைத் தீவிரமாக முன்னிறுத்தாமல், உலக அமைதி, ஒத்துழைப்பு, ஐ.நா. சீர்திருத்தம் போன்ற பொதுவான அம்சங்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவுக்கு எதிரான ஒரு மாற்று உலக அதிகார மையமாகச் சீனாவை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நீண்டகால நோக்கத்துக்கு இந்தச் சந்திப்பு ஜின் பிங்கிற்கு உதவியிருக்கிறது.

சாத்தான் வேதம் ஓதுகிறது?

உலக அமைதியைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக இந்த மூன்று தலைவர்களும் கூறுகிறார்கள். ஆனால், உலகில் நடைபெறும் போர்களுக்கும் ராணுவப் பதற்றங்களுக்கும் இந்த வல்லரசுகளின் கொள்கைகளும் நடவடிக்கைகளுமே காரணமாக இருக்கின்றன.

எனவே உலகின் மூன்று வல்லரசுத் தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து உலக அமைதியைப் பற்றிப் பேசுவதைப் பார்க்கும்போது, 'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்ற விமர்சனம் இயல்பாகவே எழுகிறது.

வீடியோவை காணலாம்

உலக அமைதிக்காக கைகோர்த்த டிரம்ப், ஜின்பிங், புதின்?
கைகோர்த்த டிரம்ப், ஜின்பிங், புதின்