அமெரிக்காவின் வரிச்சலுகை - இந்தியாவுக்கான சவால் என்ன?

இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை கூடுதல் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
அமெரிக்காவின் வரிச்சலுகை - இந்தியாவுக்கான சவால் என்ன?
Published on: 

இந்தியாவின் உற்பத்தி ஊக்கத் திட்டங்கள் உலகச் சந்தையில் நியாயமற்ற போட்டியை உருவாக்குவதாக வாஷிங்டன் குற்றம்சாட்ட, டெல்லி திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்தெந்தத் துறைகள் பாதிக்கப்படும்? இது சாதகமா, பாதகமா? அமெரிக்காவின் ராஜதந்திரக் கணக்கு என்ன?

அமெரிக்க வர்த்தகம் பாதிப்பு

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அமைப்பான USTR எட்டு மாதங்களாக நடத்திய விசாரணையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. உலகின் 16 பொருளாதாரங்களை ஆய்வு செய்த இந்த விசாரணையில், இந்தியா உட்பட 14 நாடுகள் உற்பத்தித் துறையில் கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறனை உருவாக்கி, அமெரிக்க வர்த்தகத்தைப் பாதிப்பதாக வாஷிங்டன் குற்றம்சாட்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே உள்ள Section 301 வரிகளைக் கணக்கில் கொண்டு, 25 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டு, விசாரணையில் எழுப்பப்பட்டுள்ள வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டால், வரியை 17 சதவீதமாக நிர்ணயிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதிபர் டிரம்ப் விதித்த வரி

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி, அவசரகாலப் பொருளாதார அதிகாரச் சட்டமான IEEPAவின் கீழ் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதே காலகட்டத்தில், மாற்றுச் சட்ட அதிகாரங்களின் கீழ் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்த அமெரிக்கா, 2026 மார்ச் 11ஆம் தேதி Section 301 விசாரணைகளைத் தொடங்கியது.

இந்திய திட்டங்கள் மீது குறி

USTR அறிக்கையில் மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பார் பாரத், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டமான PLI ஆகியவை நேரடியாகக் குறிவைக்கப்பட்டுள்ளன. இவை சந்தைத் தேவையைவிட அதிக உற்பத்தியைத் தூண்டுவதாகவும், உபரிப் பொருட்கள் ஏற்றுமதி மூலம் அமெரிக்கச் சந்தையில் நுழைந்து உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதிப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவுக்கு எதிராக குற்றச்சாட்டு

எஃகு, சூரியசக்தி, சுகாதாரம், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் ஆகிய நான்கு துறைகளில் இந்தியக் கொள்கைகள் சந்தைப் போட்டியைச் சீர்குலைப்பதாகவும், இந்திய உற்பத்தியாளர்கள் சீனாவிலிருந்து இடைநிலைப் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்து செலவைக் குறைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, தொழிலாளர் பாதுகாப்பு, நிதிச் சந்தையில் அரசின் தலையீடு, வெளிநாட்டுப் பொருட்களுக்கான சந்தை அணுகல் தடைகள் ஆகியவற்றையும் இந்தியாவுக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளில் USTR இடம்பெறச் செய்துள்ளது.

இந்திய வர்த்தக அமைச்சகம் மறுப்பு

இந்திய வர்த்தக அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்தத் துறையிலும் கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறன் இல்லை என்று விசாரணையின்போதே தெளிவுபடுத்தியதாகவும், இந்த திட்டங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் முக்கிய உதிரிபாகங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உருவாக்கப்பட்டவை என்றும் வாதிட்டுள்ளது.

அதே நேரத்தில், 2026 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தக் கட்டமைப்பின் அடிப்படையில் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. 25 சதவீத வரியை 17 சதவீதமாகக் குறைப்பதே டெல்லியின் இலக்காக உள்ளது.

இந்தியாவுக்கு சாதகமா?

வங்கதேசம், கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்தால் 18 சதவீத வரியை எதிர்கொள்ளும். இந்தியா 17 சதவீதச் சலுகையைப் பெற்றால், இந்நாடுகளைவிட ஒரு சதவீதப் புள்ளி சாதகம் கிடைக்கும்.

வியட்நாமுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டால் 20 சதவீத வரி விதிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது. சீனாவைப் பொறுத்தவரை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஏற்பாட்டின் அடிப்படையில் பொதுவாக 20 சதவீத வரி கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், இந்தியா 17 சதவீதச் சலுகையைப் பெற்றால், இரு நாடுகளையும் ஒப்பிடும்போது மூன்று சதவீதப் புள்ளிகள் பலன் கிடைக்கும்.

ஒப்பந்தம் இல்லையெனில் வியட்நாமுக்கு 35 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம். ஆயினும், ஒவ்வொரு நாட்டின் தற்போதைய வரிகள், பொருள் சார்ந்த விலக்குகள், ஒப்பந்த நிபந்தனைகளைக் கணக்கில் கொண்டே உண்மையான பலனை மதிப்பிட முடியும்.

கூடுதல் வரிச்சுமை

ஸ்மார்ட்போன், சில செமிகண்டக்டர் பொருட்கள், குறிப்பிட்ட மருந்துப் பொருட்கள், ஏற்கெனவே Section 232 வரிக்கு உட்பட்ட சில பொருட்களுக்கு விலக்கு உண்டு. ஆனால், அனைத்து மின்னணுப் பொருட்களுக்கும், பொதுப் பயன்பாட்டு மருந்துகளுக்கும், எரிசக்திப் பொருட்களுக்கும் பொதுவான விலக்கு உண்டு எனக் கூற முடியாது.

விலக்கு பெறாத ஜவுளி, ஆயத்த ஆடை, ரத்தினம், ஆபரணம், கடல் உணவு, இறால், சூரியசக்தி உபகரணம், வேதிப்பொருள் ஏற்றுமதியாளர்கள் கூடுதல் வரிச் சுமையை எதிர்கொள்ளலாம். வரி அமலுக்கு வருவதற்கு முன் சரக்குகள் விரைந்து அனுப்பப்படுவதால் ஏற்றுமதி தற்காலிகமாக உயரலாம் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் சந்திப்பு

இந்த முன்மொழிவு உடனடியாக அமலுக்கு வராது. கருத்துகளைச் சமர்ப்பிக்க 2027 ஜனவரி 5 வரை அவகாசம் உள்ளது. 2027 ஜனவரி 25 முதல் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையத்தின் விசாரணை அரங்கில் Section 301 குழு பொதுக் கருத்துக் கேட்பைத் தொடங்கும். அதன் பிறகே இறுதி வரி குறித்து முடிவெடுக்கப்படும்.

இதற்கிடையே, டிசம்பர் 14, 15 தேதிகளில் புளோரிடாவின் மியாமியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் மோடியும் டிரம்பும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பில் ஒப்பந்தம் இறுதியாகி, 17 சதவீதச் சலுகை கிடைக்குமா? என்பதே சர்வதேசப் பொருளாதார வட்டாரங்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

வீடியோவைக் காணலாம்

அமெரிக்காவின் வரிச்சலுகை - இந்தியாவுக்கான சவால் என்ன?
25% வரி: 17 % சலுகை - யாருக்கு சாதகம்?