முதல்வர் விஜய்-ன் ‘கொளத்தூர்’ தளபதி வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம்

72 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மாரடைப்பு காரணமாக மறைவுற்ற நிலையில், அவரது மரணச் செய்தி ஒட்டுமொத்த தவெக தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதல்வர் விஜய்-ன் ‘கொளத்தூர்’ தளபதி வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம்
Published on: 

மருத்துவமனையில் வி.எஸ்.பாபு

நுரையீரல் தொற்று காரணமாக செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ் பாபு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். சிகிச்சை 72வது நாளை எட்டிய நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் மறைவுற்றதாக அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை நிர்வாகம்.

இப்போதைய ஜென்ஸி தலைமுறையினர் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை வி.எஸ்.பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணத்தை உற்று நோக்க வேண்டியுள்ளது.

நீண்டகால அரசியல் பயணம்

நீண்ட காலமாகவே அரசியலில் இருந்தாலும் 2026 தேர்தலில் வி.எஸ்.பாபு தேர்ந்தெடுத்த கட்சியும், கைகோர்த்த தலைவரும்தான் அவர் பட்டிதொட்டி எங்கும் சென்று சேர காரணமாக இருந்தன. வட சென்னையை சேர்ந்த வி.எஸ்.பாபு, அடிப்படையில் தனது அரசியல் பயணத்தை திமுகவில் இருந்து தொடங்கினார்.

வடசென்னை மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தவர், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

திமுகவில் தளபதி...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முக்கிய தளபதியாக இருந்தவர் 2008ம் ஆண்டு கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு, அவரது வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். பிற்காலத்தில் திமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகினார்.

தவெகவில் வி.எஸ்.பாபு

கடந்த பிப்ரவரியில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்த நிலையில், வடசென்னையில் தவெகவின் முக்கிய முகமாக மாறினார்.

தேர்தலின்போது அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று தொகுதியை கேட்டுப் பெற்றவர், பரப்புரையின்போது விஜய்யை அழைத்து மிகப்பெரிய எழுச்சியைக் காட்டியிருந்தார்.

தேர்தல் முடிவில் கவனம் ஈர்த்தவர்

2026 சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான போது திமுக வசம் இருந்த ஆட்சிப்பீடம் தவெக வசம் மாறிக்கொண்டிருந்த நேரத்தில், தனது கொளத்தூர் வெற்றியால் நாடு முழுவதும் அறியப்பட்டார் வி.எஸ்.பாபு. ஆம், தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்தே தொடர் வெற்றிபெற்று வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, அவரது சொந்த தொகுதியில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார் வி.எஸ்.பாபு.

வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டு ஸ்டாலினின் காட்டிய சைகையை அவருக்கே செய்துகாட்டி ‘Finish' என்று சொன்ன வீடியோ காட்சி மிகவும் கவனம் ஈர்த்தது.

அதிர்ச்சி தந்த மறைவு

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பதவியேற்பதற்கு முன்பாக பேரவையில் தனக்கு வாய்ப்பு வழங்கிய முதலமைச்சர் விஜய்யை கட்டியணைத்து நன்றி சொன்னார் வி.எஸ்.பாபு. தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெற்றிபெற்ற தவெக எம்.எல்.ஏக்களில் தனியாக கவனம் பெற்ற வி.எஸ்.பாபு, உடல்நலக்குறைவால் மறைவுற்றிருப்பது தவெகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நெகிழ்ந்த வி.எஸ்.பாபு

தேர்தல் வெற்றிக்குப்பிறகு அளித்த பேட்டி ஒன்றில், அரசியல் வாழ்க்கையில் கடந்த 15 ஆண்டுகளாக திமுக, அதிமுக என இரு கட்சிகளிலும் பெரும் இன்னல்களை சந்தித்து வந்ததாக கூறியவர், முதலமைச்சர் விஜய்யால் தான் பெற்ற வெற்றி வாழ்க்கையையே மாற்றியதாக நெகிழ்ந்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் தான், அவரது மறைவைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் உருக்கம்

முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரதுபிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

2006 தேர்தல் வெற்றிக்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் சட்டமன்றத்தில் நுழைந்த வி.எஸ்.பாபு வெற்றிபெற்ற 6 மாதத்தில் மறைவுற்றிருப்பது தவெகவினரை மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோவைக் காண...

முதல்வர் விஜய்-ன் ‘கொளத்தூர்’ தளபதி வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம்
திமுக TO தவெக - வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம்