துரைமுருகனின் பொ.செ., பதவி பறிப்பா? என்ன முடிவு எடுப்பார் மு.க.ஸ்டாலின்?

சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க ஆரிய வேத முறைப்படி, புரோகிதர்கள் முன்னிலையில் வைத்து அதி ஆடம்பரமாக பேத்திக்கு நடத்தி வைத்த திருமணம் மூலம் துரைமுருகனின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்து சேர்ந்திருக்கிறது. துரைமுருகனை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில், திமுக தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என அறிவாலய வட்டாரத்தில் அனல் பறக்க விவாதம் அரங்கேறி வருகிறது.
அறிவாலயம்
துரைமுருகன் பதவி தப்புமா?நியூஸ்தமிழ்24x7
Published on: 

கோலாகல திருமணம்

கல்யாணம் நடந்த வீடு கலகலனு இருக்கும்னு ஊர் பக்கம் சொல்வாங்க. ஆனால், துரைமுருகன் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் எதிர்மறையாக கவலை சூழ்ந்து விட்டது. ஆம், ஒரே ஒரு கல்யாணம் மூலம் ஊரெல்லாம் விமர்சனம், கடைசியில் பொதுச் செயலாளர் பதவி தப்புமா? தப்பாதா? என துரைமுருகனின் தலை உருள ஆரம்பித்திருக்கிறது.

சமஸ்கிருத ஒலி
திருமண விழாவில்...நியூஸ்தமிழ்24x7

துரைமுருகன் இல்ல திருமணத்தில்...

திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தியும், எம்.பி., கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், தொழிலதிபர் கண்ணன் ரவி மகன் தீபக் ரவிக்கும் கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 2 நாட்கள் ஆனாலும், எங்கு பார்த்தாலும் துரைமுருகன் வீட்டு கல்யாணம்

தான் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதற்கு முதல் காரணம் கல்யாணம் நடத்தப்பட்ட விதம்.

அதிபயங்கர ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில், மணப்பெண் அழைத்து வரப்பட்ட விதம், பாகுபாடு என விமர்சனத்தை சந்திக்க, புரோகிதர்களை வைத்து சமஸ்கிருத மந்திரம் முழங்க சடங்கு சம்பிரதாயத்துடன் நடந்தது துரைமுருகனுக்கு பெரும் சிக்கலை கொடுத்திருக்கிறது.

தி.க. கடும் கண்டனம்

கொள்கை பிடிப்பு கொண்ட திமுகவினரை துரைமுருகன் வீட்டு திருமணம் கடுமையாக காயப்படுத்த, கி.வீரமணி மாதிரியான பெரியாரிய உணர்வாளர்கள் வெளியிட்ட அறிக்கைகளும் கவனம் பெற்றிருக்கிறது.

அதாவது, பெரியார், அண்ணா, கலைஞர் புகைப்படத்துடன் அழைப்பிதழ் அச்சிட்டு, ஸ்டாலின் தலைமையில் திருமணம் எனக் கூறி விட்டு சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணம் நடத்தியிருப்பதாக சாடியிருக்கும் கி.வீரமணி, ’தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவை தலைவர்களாக கொண்ட திமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர் அந்த கொள்கையில் இருந்து விலகலாமா? எனவும், இனிமேல் இதுபோன்ற இரட்டை நிலை தொடராத வகையில் நடவடிக்கை எடுப்பது அவசியம் அவசரம்,’ எனவும் கூறியிருக்கிறார்.

பதவி தப்புமா?
திமுக பொதுச்செயலாளர் நியூஸ்தமிழ்24x7

2020ல் இருந்து பொதுச்செயலாளர்

அதாவது, கொள்கைக்கு மாறாக செயல்பட்ட துரைமுருகனை, ஏன் திமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தே நீக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்ப காரணமாகியிருக்கிறது இந்த திருமணம். துரைமுருகனை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கலகக் குரல் அவ்வப்போது திமுகவில் எழுந்து வந்த நிலையில், புரோகிதர்கள் முன்னிலையில் நடந்த இந்த திருமணம் அந்த கலகக் குரலுக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

திமுகவின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்த துரைமுருகன், அதற்கு பிறகு பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளை வகித்து திமுகவில் முக்கிய நபராக மாறினார்.

2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் துரைமுருகன்.

முட்டலும் மோதலும்

என்னதான், துரைமுருகனுக்கு கட்சியில் PROMOTION கிடைத்தாலும், பொதுச் செயலாளராக அவரது செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கிடையே, உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கிய விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் இடையே பனிப்போரே உருவானது.

உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் கொண்டு வந்ததை விரும்பாத துரைமுருகன், கிடைத்த நேரமெல்லாம் அதிருப்தியை வெளிக்காட்டிக் கொண்டே இருக்க, முட்டலும், மோதலும் தொடங்கியது.

அறிவாலயம்
ஸ்டாலின் உடன் துரைமுருகன்நியூஸ்தமிழ்24x7

துரைமுருகனுக்கு ’பிளாக் மார்க்’

அதோடு, 4,370 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆற்று மணல் கொள்ளை விவகாரத்தில் துரைமுருகன் பெயர் அடிபட்டதும் அவருக்கு பிளாக்மார்க்காக மாறியது. மணல் கொள்ளை கும்பலுடன் துரைமுருகனுக்கு தொடர்பு இருந்தது என்ற புகார் காட்டுத் தீயாக பரவி கடும் விமர்சனத்தை தேடிக் கொடுக்க, வேறு வழியில்லாமல் துரைமுருகன் வசம் இருந்த கனிமவளத் துறை பறிக்கப்பட்டு, ரகுபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்சி ரீதியிலான முக்கிய முடிவுகளை எடுக்கும் போது துரைமுருகனிடம் ஆலோசனை நடத்துவதை கூட தவிர்த்தார் மு.க.ஸ்டாலின். பொதுச் செயலாளர் பெயரில் வெளியாகும் பல அறிவிப்புகள், தலைவர் பெயரில் வெளியாக ஆரம்பித்தது.

சொந்த தொகுதியிலேயே...

அப்போதே, பொதுச் செயலாளர் பதவி துரைமுருகனிடம் இருந்து பறிக்கப்படுமா? என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால், எக்காரணம் கொண்டும் பொதுச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது துரைமுருகன் வீம்பு பிடித்து வருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தலின் போது, துரைமுருகனுக்கு சீட்டு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது கூட கடைசி வரைக்கும் சஸ்பென்ஸாக இருந்தது. வயது மூப்பை காரணம் காட்டி ஒதுங்கிக் கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தியும் காட்பாடி தொகுதியில் விடாப்பிடியாக நின்று தோற்றுப் போனார் துரைமுருகன்.

இது சொந்த தொகுதியிலேயே துரைமுருகனின் செல்வாக்கு சரிந்து போனதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக இருந்தது.

கடும் கண்டனம்
திக தலைவர் கி.வீரமணிநியூஸ்தமிழ்24x7

தலைமைக்கு பயன் இல்லை

கட்சிக்கு பொதுச்செயலாளராக இருந்து கொண்டு, சொந்த மாவட்டத்தில் உட்கட்சி பூசலுக்கு காரணமாக இருப்பதாக துரைமுருகன் மீது எழுந்த புகார்களை திமுக தலைமை சுத்தமாக ரசிக்கவே இல்லை.

அதோடு, வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த துரைமுருகன், தாம் சார்ந்த சமூகத்தின் வாக்குகளையே முழுமையாக ஒருங்கிணைத்து திமுகவுக்கு வாங்கிக் கொடுத்தது இல்லை. உடல் ஒத்துழைக்காமல் இருந்தாலும், நாற்காலியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற துரைமுருகனின் பதவி வெறி, திமுகவை தான் பலி கொடுக்கிறது.

கட்சியினர் எழுப்பும் கேள்வி

ஏனென்றால், திமுகவை கொள்கை ரீதியாக இளைய சமூகத்தினரிடம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருப்பதால், ஆ.ராசா மாதிரியான துடிப்பாக களத்தில் நிற்பவர்களுக்கு வழிவிட்டு துரைமுருகன் ஒதுங்கிக் கொள்ளலாம் என்பதே பெரும்பாலான உடன்பிறப்புகளின் உள்ளார்ந்த எண்ணமாக இருக்கிறது.

பொதுச் செயலாளர் பதவி என்பது வெறும் நாற்காலி அலங்காரம் மட்டுமல்ல என்பதை துரைமுருகன் உணர வேண்டும் எனக் கூறும் திமுகவினர், தகுதி வாய்ந்த எத்தனையோ பேர் இருக்கும் போது பொதுச் செயலாளர் பதவியை விட்டு கொடுக்காமல் வீம்பு பிடித்து வருவது எப்படி சரியாக இருக்கும் என வினா எழுப்புகின்றனர்.

பதவி தப்புமா?
துரைமுருகன்நியூஸ்தமிழ்24x7

பதவி தப்புமா? தலை உருளுமா?

தேர்தல் தோல்விக்கு பிறகு, பல நிலைகளில் திமுகவில் மாற்றம் செய்து வரும் மு.க.ஸ்டாலினால், துரைமுருகனின் பொதுச் செயலாளர் பதவியில் மட்டும் கை வைக்க முடியாமல் போனது. ஆனால், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகனை தூக்க புரோகிதர்கள் முன்னிலையில் வைத்து நடந்த திருமணம் லட்டு போன்ற காரணமாக கிடைத்திருக்கிறது.

ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார்? துரைமுருகனின் பதவி தப்புமா? தலை உருளுமா? என்பதெல்லாம் அடுத்தடுத்த நகர்வுகளில் தெரியவரும்.

அறிவாலயம்
துரைமுருகன் வீட்டு விழாவில் சமஸ்கிருதம் - ஊருக்கு நாத்திகர், உள்ளுக்குள் ஆத்திகர்?