

நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் ரசிகர்கள், தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி
நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளியை ஒட்டி இன்று திரையரங்குகளில் வெளியான ‘சீன்’ திரைப்படம், வெளியான சில மணி நேரங்களிலேயே சட்டவிரோதமாக இணையதளங்களில் முழுப் படமாக வெளியானதால் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீன்’.
இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர்.
உலகம் முழுவதும் இன்று வெளியான இத்திரைப்படம் தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 700-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியானதாகக் கூறப்படுகிறது.
சூர்யாவின் ‘கருப்பு’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களுக்குப் பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இதற்கிடையே, ‘சீன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கும், திரையரங்குகளில் படத்தின் காட்சிகளைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வதற்கும் தடை விதிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டுடியோஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி, தடை உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, படத்தை அனுமதியின்றி நகலெடுப்பது, பதிவு செய்வது, பதிவேற்றம் செய்வது, பதிவிறக்கம் செய்வது
இணையத்தில் ஒளிபரப்புவது மற்றும் சட்டவிரோத இணையதளங்கள், மாற்று இணையதள இணைப்புகள் வாயிலாகப் பரப்புவது உள்ளிட்ட செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
மேலும், படத்தின் காப்புரிமையைப் பாதுகாக்கும் வகையில் சட்டவிரோதமாகப் படத்தை வெளியிடும் இணையதளங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தடை உத்தரவு அமலில் இருந்தபோதிலும், இன்று திரையரங்குகளில் வெளியான ‘சீன்’ திரைப்படம் இணையதளங்களில் முழுப் படமாக இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது.
இதனால் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் தயாரிப்பு நிறுவனத்தினரிடையே ஏற்பட்டுள்ளது.
மேலும், திரையரங்குகளில் படம் பார்த்து ரசிக்கக் காத்திருந்த ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி திரைப்படம் இணையத்தில் கசிந்தது எப்படி? இதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார்? சட்டவிரோதமாகப் படத்தைப் பதிவேற்றிய இணையதளங்கள் மீது சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
திரைப்படத்தின் காப்புரிமையை மீறி இணையத்தில் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாகப் பதிவேற்றப்பட்ட படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் திரையுலகினர் வலியுறுத்தி வருகின்றனர்.