’என்னுள் இருக்கும் அந்த குறைபாடு’ - மனம் திறந்த நடிகை பார்வதி

தென்னிந்திய திரையுலகில் தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்த நடிகை பார்வதி திருவோத்து, தனக்கு ADHD எனப்படும் கவனக்குறைவு மற்றும் அதிசெயல்பாடு குறைபாடு இருப்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
’என்னுள் இருக்கும் அந்த குறைபாடு’ - மனம் திறந்த நடிகை பார்வதி
Published on: 

தன் பணிச்சூழல், நேர மேலாண்மை மற்றும் வாழ்க்கை அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்து, தற்போது கவனம் பெற்றுள்ளன.

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை பார்வதி திருவோத்து. சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தன் சினிமா, நடிப்பு பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இங்கிலாந்து, ஹைதராபாத், பாலக்காடு எனத் தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வரும் பார்வதி, தனக்கு ADHD பாதிப்பு இருப்பதை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார்.

குறையாக பார்க்கவில்லை...

ஆனால், இதனை ஒரு பெரிய விஷயமாகவோ அல்லது குறையாகவோ தான் பார்க்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தனக்கு நேரம் என்பது ஒரு தடையல்ல என்றும், தேவைப்பட்டால் நேரத்தைத் தனக்கேற்ப வளைத்துக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ள அவர், அதற்காகத் தனது தூக்கத்தை ஒருபோதும் இழக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், புதிதாக ஒன்றை முயற்சிக்கும்போது தோல்வி ஏற்படுமோ? என்ற பயம் தேவையில்லை. தோற்றாலும் கம்பீரமாகத் தோற்போம் என்றும் தனது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பினால், யாருடனும் பேசாமல் தனிமையில் இருப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், அந்தக் காலகட்டம் தனக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்ததாகவும், ஆனால் தற்போது தனது அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை
தங்கலான் திரைப்படத்தில் பார்வதி

இப்போது படப்பிடிப்பு முடிந்து திரும்பினால் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுவதாகவும், வாழ்க்கையை எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ரசிப்பதாகவும் உற்சாகப்படுகிறார் பார்வதி.

பெண்ணுரிமைக்கு குரல்

2006ஆம் ஆண்டு 'அவுட் ஆஃப் சிலபஸ்' என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமான பார்வதி, தமிழில் பூ, மரியான், தங்கலான் மற்றும் மலையாளத்தில் பெங்களூர் டேஸ், சார்லி, டேக் ஆஃப், உயரே, உள்ளொழுக்கு உள்ளிட்ட படங்களின் மூலம் தேசிய விருது அங்கீகாரத்தையும், மாநில விருதுகளையும் வென்றவர்.

நடிப்பைத் தாண்டி, மலையாளத் திரையுலகில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பிற்காகக் குரல் கொடுக்கும் WCC அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

திரைப்படங்களில் துணிச்சலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது போலவே, நிஜ வாழ்க்கையிலும் தனக்கு இருக்கும் குறைபாடுகளைக் கடந்து, தோல்வி பயமின்றிப் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராகி உள்ளார்.

நடிகை பார்வதி திருவோத்துவின் இந்த வெளிப்படையான பேச்சு, ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில் காணலாம்

’என்னுள் இருக்கும் அந்த குறைபாடு’ - மனம் திறந்த நடிகை பார்வதி
"எனக்கு ADHD Diagnosis" மனமுடைந்த பார்வதி திருவோத்து