இனி, இலவசமாக விளையாட முடியாது - கனவில் மண் அள்ளிப் போடும் மேயர் பிரியா?

சென்னை மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விளையாட்டு திடல்களை தனியாருக்கு தாரை வார்க்க மேயர் பிரியா தலைமையிலான மாமன்றம் முடிவெடுத்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விளையாட்டுத்திடல்
சென்னை மாநகராட்சிநியூஸ்தமிழ்24x7
Published on: 

ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற வேண்டும் என கட்டப்பட்டவிளையாட்டுத் திடல்களை பராமரிக்க கூட முடியாத அளவுக்கு சென்னை மாநகராட்சியின் லட்சணம் இருப்பது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

தூய்மை பணியாளர் விவகாரம்
மேயர் பிரியா நியூஸ்தமிழ்24x7

தனியாரிடம் விளையாட்டுத் திடல்கள்

சென்னை மாநகராட்சிக்கும், மேயர் பிரியாவுக்கும், தனியார் நிறுவனங்கள் மீது அப்படி என்ன பாசமோ தெரியவில்லை. தொட்டதுக்கெல்லாம் தனியாரிடம் ஒப்படைப்பதிலேயே குறியாக இருக்கிறது. தூய்மை பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைக்கும் விவகாரத்திற்கு அடுத்தபடியாக விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு தாரை வார்க்க படு வேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி.

தனியாரிடம் 95 திடல்கள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மொத்தம் 253 விளையாட்டு மைதானங்கள், 316 சிறுவர் விளையாட்டு மைதானங்கள், 231 ஆண்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் 60 பெண்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன.

இந்த நிலையில், டென்னிஸ், உள் அரங்க இறகுப்பந்து, ஸ்கேட்டிங், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான திடல்களை தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. அதாவது, புதிதாக திறக்கப்பட்ட 58 விளையாட்டு திடல்களுடன் மொத்தமாக 95 திடல்களை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.

சென்னை  மாநகராட்சி
விளையாட்டுத்திடல்நியூஸ்தமிழ்24x7

இனி, சேவைக்கு கட்டணம்

ஏற்கெனவே, 2024ம் ஆண்டு முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்திற்கு 29 விளையாட்டுத் திடல்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதில், முதல் ஆண்டில் 37 லட்சமும், 2ம் ஆண்டில் 5 சதவீத உயர்வுடன் 39 லட்சமும் என மொத்தமாக 76 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்தது.

இந்த வரிசையில் தற்போது, மொத்தமாக 95 விளையாட்டுத் திடல்களை மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுவரைக்கும் இலவசமாக இருந்த விளையாட்டு மைதானங்களில் இனிமேல் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.

கட்டணமில்லா சேவை பறிமுதல்

இந்த வகையில், டென்னிஸ் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 2,950 ரூபாயும், ஷட்டில் பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட வரியுடன் சேர்த்து 1,475 ரூபாயும், ஸ்கேட்டிங் பயிற்சிக்கு

885 ரூபாயும் வசூலிக்கலாம் என மாநகராட்சி நிர்ணயம் செய்திருக்கிறது. ஏழை, எளிய மாணவர்கள் இலவசமாக விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வந்தது தற்போது பறிபோகும் நிலை உருவாகியிருக்கிறது.

அதோடு, தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கும் 95 விளையாட்டுத் திடல்களும், PRIME LOCATION, NON PRIME LOCATION என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அண்ணா நகர், பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், திருவான்மியூர், மந்தைவெளி போன்ற பிரைம் லொக்கேஷனில் இயங்கும் திடல்களுக்கான அடிப்படை மதிப்பு வெறும் 1 கோடியே 27 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு, முன்மொழியப்பட்ட ஒப்பந்த தொகை முதல் ஆண்டிற்கு 3 கோடியே 28 லட்சம் ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

கட்டணம் வசூலிக்க முடிவு
தனியாரிடம் திடல்கள்நியூஸ்தமிழ்24x7

தனியாரிடம்... கடும் விமர்சனம்

கொளத்தூர், வியாசர்பாடி, மணலி புதுநகர், சௌகார்பேட்டை, போரூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட NON PRIME LOCATION திடல்களுக்கான அடிப்படை மதிப்பு 38 லட்சம் ரூபாயாகவும், முன்மொழியப்பட்ட தொகை 42 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மொத்தமாக 95 திடல்களுக்கு முதல் ஆண்டுக்கு 3 கோடியே 71 லட்சம் ரூபாயும், மொத்தமாக 3 ஆண்டுக்கு 11 கோடியே 70 லட்சம் ரூபாயும் மாநகராட்சிக்கு வருவாயாக கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்தமாக 11 கோடியே 70 லட்சம் மட்டுமே வருவாயை கிடைக்கும் என்ற நிலையில், அந்த வருவாய்க்காக விளையாட்டு திடல்களை தனியாரிடம் ஒப்படைப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

95 திடல்கள்
தனியார் வசம்நியூஸ்தமிழ்24x7

அப்படி என்ன ஆர்வம்?

சாதாரண விளையாட்டு திடலை கூட பராமரிக்க முடியாமல் தனியாருக்கு தாரை வார்ப்பது ஏன்? என்றகேள்வியும் எழுந்துள்ளது. ஒவ்வொரு திடலிலும் 1 பயிற்சியாளர், 2 பராமரிப்புப் பணியாளர்கள், 1 தூய்மைப் பணியாளர் மற்றும் 1 பாதுகாவலர் நியமிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள நிலையில் 95 திடல்களுக்கு கணக்கிட்டால் 475 பணியாளர்களை கூட மாநகராட்சியால் நியமிக்க முடியவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்டணம் செலுத்தி விளையாட முடியாத மாணவர்கள், இளைஞர்கள் தான் அரசு அமைத்திருக்கும் விளையாட்டுத் திடலை நோக்கி வருகிறார்கள் என்ற நிலையில், அந்த திடல்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதில் அப்படி என்ன மேயர் பிரியாவுக்கு ஆர்வம்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தனியாருக்கு முன்னுரிமை என புகார்

ஏற்கெனவே, மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இருக்கும்போது, அடிப்படைப் பராமரிப்பு மற்றும் மின்சாரக் கட்டணச் செலவுகளை எதிர்கொள்ள முடியவில்லை எனக் காரணம் காட்டி, பொதுமக்களின் விளையாட்டு உரிமையைப் பறித்துத் தனியாருக்கு லாபம் ஈட்டித் தரும் தரகராக மாநகராட்சி மாறலாமா? என்ற வினா எழுந்து உள்ளது.

ஆகையால், விளையாட்டுத் திடல்களை நேரடியாக மாநகராட்சியே நிர்வகித்து, குறைந்த கட்டணம் கூட நிர்ணயம் செய்யலாமே என்ற யோசனையும் முன் வைக்கப்படுகிறது. ஆனால், தனியார் ஒப்பந்ததாரர்களின் நலனுக்கே மேயர் பிரியா முன்னுரிமை அளிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மாநகராட்சி வட்டாரத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.

தனியாரிடம் ஒப்படைப்பு
ஆர்வம் ஏன்?நியூஸ்தமிழ்24x7

வணிக நோக்கமின்றி, சேவை நோக்கம்

ஒரு பக்கம் முதலமைச்சர் கோப்பை உட்பட பல போட்டிகளை நடத்தி ஏழை, எளிய மாணவர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு முரணாக இருக்கிறது மாணவர்களுக்கு பயன்படும் விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு ஒப்படைக்கும் மாநகராட்சியின் முடிவு.

ஆகையால், விளையாட்டுத் திடலை வணிக நோக்கமாக பார்க்காமல், சேவை நோக்கத்துடன் மாநகராட்சியே முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குற்றச்சாட்டு
தனியாருக்கு முன்னுரிமைநியூஸ்தமிழ்24x7

வீடியோவில் காணலாம்

விளையாட்டுத்திடல்
கனவில் மண் அள்ளிப் போடும் மேயர்?