

வட்டிக்கு வாங்கிய கடனின் சுமை ஒருபுறம் வாட்ட, மறுபுறம் தன் மகன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்றுகூட தெரியாமல் தவிக்கும் தாயின் கண்ணீர் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும் என்றும், மாயமான இளைஞரை மீட்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துபாய் டூ ஈரான்... எப்படி?
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவரது 23 வயது மகன் நவீன் குமாருக்கு கப்பலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் கனவு. அந்த கனவை நனவாக்குவதற்காக குடும்பமே பெரும் பொருளாதார சுமையை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
கடல்சார் பயிற்சிக்காக மட்டும் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருக்கிறார்கள். இதையடுத்து, மும்பையை சேர்ந்த லாஸ்கர் மரைன் என்ற நிறுவனம் மூலம் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் நவீனுக்கு கப்பலில் வேலை கிடைத்திருக்கிறது.
துபாயில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நவீன், பணியில் சேர்ந்த ஒரு வாரத்தில் ஈரானில் இருப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
தொடர்பு எல்லைக்கு அப்பால்...
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், போர் தீவிரமடைவதற்கு முன்பே மகனை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவர முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அதற்குள் நவீனுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
எத்தனை முறை செல்போனில் அழைத்தாலும் பதில் இல்லை. தாய் அனுப்பும் குரல் பதிவுகளுக்கும் எந்த பதிலும் கிடைக்கவில்லையாம். ஒருபக்கம் மகனை பற்றிய தகவல் கிடைக்காத வேதனை, இன்னொரு பக்கம் வாங்கிய 15 லட்சம் ரூபாய் கடன்.
முதல்வருக்கு கோரிக்கை
இந்த சூழலில், நவீன் பேசிய பழைய குரல் பதிவுகளையே மீண்டும் மீண்டும் கேட்டு அழுதுகொண்டிருக்கிறார் தாய் பாண்டிச்செல்வி. என் மகன் எங்கே இருக்கிறான்? கப்பலில்தான் இருக்கிறானா? உயிரோடுதான் இருக்கிறானா?
எங்களுக்கு உண்மையை சொல்லுங்கள் என்றும், ’இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலையிட்டு என் மகனை மீட்டு கொடுக்க உதவ வேண்டும்,’ என கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
மாயமான கப்பல்...
இந்த சம்பவத்தின் பின்னணியை பார்த்தால் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நவீன் குமார் பணியாற்றியதாக கூறப்படும் பிரிட்ஜ் 1, பிரிட்ஜ் 2 ஆகிய 2 சரக்கு கப்பல்களும் கடந்த மே 9ம் தேதி ஈரான் கடல் பகுதியில் மாயமாகியிருக்கின்றன.
ஈரானின் கிஷ் தீவிலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில், மாலை 4.50 மணியளவில் இந்த கப்பல்களின் தானியங்கி அடையாள அமைப்பான ஏ.ஐ.எஸ். கடைசியாக தகவலைப் பதிவு செய்திருக்கிறது. அதன்பிறகு கப்பல்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டாலும், கப்பல்கள் குறித்த எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.
கை விரித்த கப்பல் நிறுவனம்
இந்த 2 கப்பல்களிலும் பணியாற்றிய 6 மாலுமிகள் மாயமாகியிருக்கிறார்கள். அவர்களில் 3 பேர் ஈராக்கியர்கள், ஒருவர் பாகிஸ்தானியர், 2 பேர் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல்கள் கடலில் மூழ்கிவிட்டனவா? அல்லது ஏதேனும் ஒரு நாட்டால் கைப்பற்றப்பட்டு மாலுமிகள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்களா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கு இடையே, நவீனை பணிக்கு அனுப்பிய லாஸ்கர் மரைன் நிறுவனத்தின் மீதும் புகார்கள் எழுந்துள்ளன. முதலில் நவீன் விரைவில் திரும்பிவிடுவார் என நிறுவனம் உறுதியளித்ததாகவும், பின்னர் அவரை பற்றிய தகவல் தங்களிடம் இல்லை என கூறியதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆறு மாதங்களாக விடை தெரியவில்லை
போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் பதற்றம் அதிகரித்த நிலையில், அந்த பகுதியில் குறைந்தது 25 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், கடலில் மாயமான 2 கப்பல்களின் நிலை என்ன? அந்த 6 மாலுமிகளும் எங்கே இருக்கிறார்கள்? நவீன் குமார் உயிருடன் இருக்கிறாரா? என்று எந்த தகவலும் இல்லை.
6 மாதங்களாக விடை தெரியாத கேள்விகளுடன், மகனின் பழைய குரலை கேட்டுக்கொண்டே காத்திருக்கிறார் தாய் பாண்டிச்செல்வி. இனியாவது மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, மாயமான மாலுமிகள் குறித்த உண்மையை வெளிக்கொண்டு வந்து, அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.
வீடியோவைக் காண...