இன்ஸ்டா பிரபலம் தற்கொ* சைபர் புல்லிங்கால் விபரீத முடிவு?
நிதி ஆலோசனை தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமான இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், சைபர் புல்லிங் செய்ததால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் எடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை கூட்டியுள்ளதோடு, அதில் பேசியது என்ன? குற்றம்சாட்டப்பட்ட யூடியூபர் யார்?
27 வயதேயான இளைஞர்
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட 27 வயது ஹரிஷ் என்ற இளைஞர் கடந்த 4 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
’பைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வந்த ஹரிஷிற்கு 1.3 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்.
சைபர் புல்லிங்
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி யூடியூபர் ஜேசன் சாமுவேல் என்பவர் அவருடைய முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் ஹரிஷ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி ஹரிஷுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்பி சைபர் புல்லிங் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு பேசுபொருளான நிலையில், 1.3 மில்லியன் பாலோவர்ஸ் கொண்ட ஹரிஷின் ’பைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது.
இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், பல யூடியூபர்கள் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர்.
உயிரை மாய்த்த விபரீதம்
இதனிடையே, கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ஹரிஷ் முட்டுக்காட்டில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை, தமது உயிரை மாய்த்துக் கொண்டார்.
அதற்கு முன்பு அவர் பதிவு செய்திருந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூடியூபர் ஜேசன் சாமுவேல் தன்னிடம் 3 கோடி ரூபாய் பணம் கேட்டதாகவும், கொடுக்கவில்லை என்றால் சமூக வலைதள கணக்குகளை முடக்குவேன் என்று மிரட்டியதாகவும் ஹரிஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், புதுச்சேரியில் எம்.எல்.ஏ., முதலமைச்சர் என அனைவரையும் தனக்கு தெரியும் என்றும், பணம் கொடுக்கவில்லை என்றால் பெற்றோரை தூக்கி விடுவேன் என்றும் ஜேசன் சாமுவேல் மிரட்டியதாக கூறும் ஹரிஷ், தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்ததால் தான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
தந்தை குமுறல்
இதனிடையே, ஹரிஷின் தந்தை விநாயகம் சென்னை அடுத்த கானத்தூர் காவல் நிலையத்தில் ஜேசன் சாமுவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார்.
மேலும் ஜேசன் சாமுவேலின் சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஹரிஷின் தற்கொ*யை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய கானத்தூர் போலீசார், அதனை தற்கொ*க்கு தூண்டுதல் என்ற பிரிவிற்கு மாற்றியுள்ளனர்.
யூ டியூபர் ஜேசன் சாமுவேல் கைது
ஹரிஷின் மரண விவகாரத்தில் மூன்று பேர் வரை சம்பந்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பிறகு அவர்கள் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஃபைனான்ஸ் வித் ஹரீஷ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஹரீஷ் மரண வழக்கில், தற்கொ*க்கு தூண்டிய புகாரில், புதுச்சேரியில் பதுங்கி இருந்த யூ-டியூபர் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டார்.

