

"தவெக ஆட்சியில் ஆட்சியருக்கு கூட பாதுகாப்பு இல்லை," என திமுக எம்.பி., கனிமொழி வெகுண்டெழுந்த நிலையில், தனக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக எம்.எல்.ஏ., விளக்கம் அளித்துள்ள பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சமூக வலை தளங்களில்...
ஒரு பக்கம் தினம் தினம் பாலியல் குற்றங்களின் பட்டியல் அதிகரித்து வர, பெண் ஆட்சியருக்கு தகாத முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தான் சோஷியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ். விஜய் கட்சி தொடங்கியதும் தவெகவில் இணைந்து மாவட்ட மாணவரணி பொறுப்பை பெற்ற அருள் விக்னேஷ், அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கள்ளக்குறிச்சி தொகுதியில் வென்று எம்.எல்.ஏ. ஆனார்.
வட்டமடிக்கும் விபரீத புகார்
இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது விபரீத புகார் ஒன்று வட்டமடித்து வருகிறது. அதாவது, கள்ளக் குறிச்சி பெண் ஆட்சியருக்கு தகாத முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்பட்டது. இதுமட்டுமல்லாமல், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாக பகீர் கிளப்பப்பட்டது. எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் பெண் ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம், தலைமையின் காதுகளுக்கு செல்ல, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அழைத்து கண்டித்ததாகவும் சொல்லப்பட்டது.
’ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை’
ஒரு மாவட்டத்தின் உச்ச உயர் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியிடம் எம்.எல்.ஏ., தவறான விதத்தில் பேசியதாக எழுந்த புகார் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது.
இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள திமுக எம்.பி., கனிமொழி, தமிழகம் முழுவதும் கொ*, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என கண்டனம் தெரிவித்ததோடு, தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் பெண் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது என விமர்சித்துள்ளார். மேலும், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் தொந்தரவு காரணமாக, ஆட்சியருக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கும் கனிமொழி, இதற்கெல்லாம் முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? என சாடியிருக்கிறார்.
தவெக எம்எல்ஏ விளக்கம்
இந்த நிலையில், தன் மீதான புகார் குறித்து தவெக எம்.எல்.ஏ, அருள் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். பெண் ஆட்சியருக்கு தொந்தரவு கொடுத்ததாக தன் மீது திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி வருவதாக முடித்துக் கொண்டார்.
ஆனாலும், செய்தியாளர் தொடர்ந்து துருவி துருவி கேள்வி எழுப்ப, நேரில் வந்து பேசுங்கள் என்றவர், ஆட்சியர் வீட்டுக்கு நேரில் சென்று தொந்தரவு கொடுத்திருந்தால் சிசிடிவியில் பதிவாகியிருக்குமே? எனக் கூறி விட்டு ஆதங்கத்தை பகிர்ந்தார்.
வீடியோவைக் காண...