

வாகனங்கள் மோதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குடிகாடு பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற பின் குதிரைச்சந்தல் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஒரு சிறுவன் தாத்தா, பாட்டியை ஏற்றிக்கொண்டு சென்ற போது சாலையில் வாகனம் வருகிறதா? என்று கூட பார்க்காமல் திரும்பியதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய இளைஞர் வாகனம், சிறுவன் ஓட்டி வந்த வாகனம் மீது உரசி இரண்டு தரப்பினரும் கீழே விழுந்தனர்.
காலணியால் தாக்குதல், அதிர்ச்சி
எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் பைக் சாவியை எடுத்து கொண்டு இளைஞர்களை கீழே விழுந்த பாட்டி மிரட்டியதோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது மகன் வந்தால் தான் பைக் சாவியை தருவேன் என மிரட்டிய நிலையில், சிறிது நேரத்தில் வழக்கறிஞர் பழனிவேல் சம்பவ இடத்திற்கு வந்து நடந்தது என்ன? என்று கூட கேட்காமல் இளைஞர்களை காலணியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
பழனிவேல், பாமக வழக்கறிஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளராக இருந்து வருவதோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட பார் கவுன்சில் செயலாளராகவும் பதவி வகித்து வரும் நிலையில், சிக்கிய இளைஞர்களை எந்த ஊர்? என முதலில் கேட்டதோடு, பின்னர், ‘காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கள்’ என மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
பாண்டியன் குப்பம் கிராம என இளைஞர்கள் கூறியதும், ’பட்டியல் சமூகத்தினரா?’ என கேட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, ’உங்க ஊர் தலைவர் கிட்ட பேசட்டுமா?’ என மிரட்டியதாக கூறப்படுகிறது.
காலில் விழுந்து...
இதனால் செய்வதறியாது தவித்த இளைஞர்கள் மீண்டும் அவர் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. பின்னர் அந்த இளைஞர்களை அழைத்து சென்று, ’கீழே விழுந்த தாத்தா காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கள்’ என மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. பழனிவேல் உடன் இருந்தவர்களும் இதனை கூறவே இளைஞர்கள் செய்வதறியாது அவர்கள் என்ன சொன்னாலும் அதனை அப்படியே செய்தும் தங்களை தாக்கியதாக மனமுடைந்து கூறினர்.
போலீசார் முறையாக விசாரிப்பார்களா?
அங்கிருந்து தப்பிச்சென்ற இளைஞர்கள் சிறிது தூரத்தில் உள்ள மேம்பாலத்தின் மீது அமர்ந்திருந்த போது அங்கு வந்த இருவர் நீங்கள் இங்கிருந்து இன்னும் செல்லவில்லையா? என கேள்வி எழுப்பியதோடு, எங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்த உங்க ஊர் பகுதியை சேர்ந்த இளைஞரை தூக்கில் தொங்க விட்டதாகவும், போலீசாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை என பகிரங்கமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
தூக்கில் தொங்கவிடப்பட்ட இளைஞர் யார்? பாதிக்கப்பட்ட இளம்பெண் யார்? அப்போது இந்த வழக்கை விசாரித்த போலீசார் எடுத்த நடவடிக்கை தான் என்ன? என்ற பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. மேலும் இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
வக்கீல் மீது வழக்குப்பதிவு
இதனிடையே காயமடைந்த இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் பழனிவேல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்பாராத விபத்தில் சிக்கிய இளைஞர்களிடம் சரமாரியாக வழக்கறிஞர் பழனிவேல் கேள்வி எழுப்பிய நிலையில், சட்டம் அனைவருக்கும் சமம் என்பதால் இந்த விபத்துக்கு காரணமானதாக கூறப்படும் பைக்கை ஓட்டி சென்ற சிறுவன் மீது எடுக்கப்போகும் நடவடிக்கை தான் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சிறுவன் என்பதால் அவருடைய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.