

சம்மன், விசாரணை என காவல்துறை தரப்பில் அடுத்தடுத்த நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில் அருள் விக்னேஷ் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அதன்பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
எம்எல்ஏவிடம் நேரில் விசாரணை
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பிணையில் வெளிவர முடியாத 3 பிரிவுகள் உட்பட மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தீவிர விசாரணையை முன்னெடுக்கும் பணியில் இறங்கியுள்ளது காவல்துறை.
திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும் ஐ.ஜி. என்.காமினி விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சம்மன் வழங்கிய ஆய்வாளர்
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஷாநாஸின் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் முதற்கட்டமாக விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், கையில் கோப்புகளுடன் வந்த ஆய்வாளர் புவனேஸ்வரி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும் தெரிகிறது. தொடர்ந்து, மேலதிக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஆய்வாளர் புவனேஸ்வரி, அருள் விக்னேஷிடம் சம்மனை வழங்கியுள்ளார்.
போலீசார் குவிப்பு, பரபரப்பு
இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள 3 வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்கெனவே 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். அந்த விசாரணை தொடர்பான ஆவணங்களும் புதிய விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடைய, சம்மன்-விசாரணை என அடுத்தடுத்து சட்ட நடவடிக்கைகள் தொடர, தவெக தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர். இதனால், அருள் விக்னேஷ் வீடு மற்றும் அலுவலகம் முன்பு காலை முதலே போலீஸ் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
எம்எல்ஏ விவகாரத்தில் வலுவான ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்து வரும் நிலையில் அருள் விக்னேஷ் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஒருபுறம் காவல்துறை தங்கள் தரப்பு பணிகளை பம்பரமாய் சுழன்று செய்து வரும் நிலையில் மறுபுறம் அரசியல் அழுத்தம் காரணமாக அருள் விக்னேசும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எம்.எல்.ஏ.வாக இருக்கும்போது அருள் விக்னேஷ் கைது செய்யப்படுவதைவிட, அவர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் கைது செய்யப்பட்டால்தான் தவெகவிற்கான டேமேஜை ஓரளவுக்கு கன்ட்ரோல் செய்ய ஏதுவாக இருக்கும், இல்லாவிட்டால் விளைவு இடைத்தேர்தலில்கூட எதிரொலிக்கலாம் என நினைக்கிறதாம் கட்சித்தலைமை.
இதற்காகதான், கைது நடவடிக்கையும் காலம் தாழ்த்தப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதுஒருபுறமிருக்க, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட இடதுசாரி மாணவர் அமைப்பினர் பாலியல் புகாரில் சிக்கிய அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி முழக்கமெழுப்பினர்.
அதேபோல், அருள் விக்னேஷை கைது செய்யக்கோரி அவரது உருவபொம்மையை எரித்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடியோவைக் காணலாம்