சடலத்தை வைத்து கதறும் குடும்பம், என்னதான் செய்கிறார்கள் அதிகாரிகள்?

கள்ளக்குறிச்சி அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலை புதைக்கக் கூட இடம்கொடுக்க மறுத்ததால் அந்த குடும்பமே என்ன செய்வதென தெரியாமல் கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி
ஊர்க்கட்டுப்பாடு நியூஸ்தமிழ்24x7
Published on: 

மனிதர்கள் சந்திக்கக்கூடாத பேரவலத்தை நியூஸ் தமிழில் செய்தியாக்கிய நிலையில், 48 மணி நேரத்திற்கு பின் அவர்களது சொந்த இடத்திலேயே உடல் புதைக்கப்பட்டது. ஊர் மக்கள் யாரும் துக்கத்தில் பங்கெடுக்காத நிலையில், உறவினர்கள் மட்டும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அவலம் ஏற்பட்டது.

ஊர் கட்டுப்பாடு
கள்ளக்குறிச்சியில்நியூஸ்தமிழ்24x7

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள தாழ்வாழப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னையன்-தனபாக்கியம் தம்பதி. இவர்களுக்கு செந்தில்குமார், பாலகிருஷ்ணன் ஆகிய 2 மகன்களும் செல்வி என்ற மகளும் உள்ளனர். இதில், மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வரும் நிலையில் மகன்கள் உள்ளூரில் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஊரில் உள்ள ஏதேனும் பொது இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

ஆழ்துளை கிணற்றில்...

ஆனால், சின்னையனுக்கு சொந்தமான இடத்தை தவிர மற்ற எந்த இடத்திலும் தண்ணீர் இல்லை என தெரிகிறது. அதனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சின்னையனுக்கு சொந்தமான இடத்தில் கிராமத்தினர் ஆழ்துளை கிணறு அமைத்தனர். அந்த கிணற்றை 30 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென மோட்டார் பழுதாகி கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்தது.

இதனிடையே, அந்த கிணற்றை சரி செய்து சின்னையனும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட தேவைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், ஊரில் உள்ள மக்களும் தண்ணீர் எடுக்க வந்ததாக தெரிகிறது.

சின்னையன்
ஆழ்துளை கிணறுநியூஸ்தமிழ்24x7

ரூ.3 லட்சம் அபராதம்

அப்போது, தனது சொந்த செலவில் கிணற்றை சீர்செய்து பயன்படுத்தி வருவதாகவும், அதனை சீர் செய்ய யாரும் முன்வராதபோது சரியானபிறகு தண்ணீர் கேட்பது எப்படி நியாயம்? எனவும் கூறி தண்ணீர் எடுக்க சின்னையன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஊரில் உள்ள பெரிய தலைகள் தலையிட்டு பொதுக்கிணற்றில் உள்ள நீரை எப்படி தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்? யாரிடம்கேட்டு கிணற்றை சரிசெய்து பயன்படுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பியதோடு அதற்கு 3 லட்சம் அபராதம் மற்றும் 3 சென்ட் நிலத்தை ஊருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என கட்டளைபோட்டதாக கூறப்படுகிறது.

ஊரை விட்டு ஒதுக்கி வைத்து...

அதற்கு, கிணறு அமைந்துள்ள இடமே தனக்கு சொந்தமானது, அதில் கிணறு அமைக்க ஊர் மக்களுக்காக சம்மதித்ததே நான்தான், அந்த கிணறு பராமரிப்பின்றி கிடந்ததால் சீர்செய்து பயன்படுத்தி வருகிறோம்? இதில் என்ன தவறு உள்ளது எனக்கூறி அபராதம் கட்ட மறுத்த சின்னையன் 3 சென்ட் நிலத்தை எழுதிக் கொடுப்பதற்கும் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சின்னையன் வழிக்கு வருவதுபோல் இல்லாததால் அவரையும், அவரது குடும்பத்தினரையும் ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த ஊர் பெரிய தலைகள் கிராம மக்கள் யாரும் அவர்களுடன் அன்னம் தண்ணீர் புழங்க கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்தனர்.

ஊர்க்கட்டுப்பாடு
ரூ.3 லட்சம் அபராதம்நியூஸ்தமிழ்24x7

மனைவி இறந்த நிலையில்...

இந்த வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும் தன்பக்கம் நியாயம் உள்ளது என்பதில் உறுதியாக இருந்த சின்னையன் ஊருக்கு கட்டுப்பட்டு தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில்தான், அவரது மனைவி தனபாக்கியம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். துக்கம் விசாரிக்கவோ, சடலத்தை எடுக்கவோ யாரும் செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் ஊர் மக்கள் சின்னையன் வீட்டிற்கு சென்று எட்டிக்கூட பார்க்கவில்லை. அதேபோல், சடலத்தை புதைப்பதற்கு இடம் வழங்கமாட்டோம் எனவும் ஊர் பெரியவர்கள் கூறிவிட்டதால் சின்னையனும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்வதென தெரியாமல் அழுது கொண்டிருக்கின்றனர்.

இதற்கு மத்தியில், இரவில் சின்னையன் வீட்டுக்கு திரண்டு சென்ற ஊர் மக்கள் தங்களை மீறி சடலத்தை எப்படி எடுக்கிறாய் என பார்க்கிறோம்? எங்களை பகைத்துக் கொண்டால் இப்படிதான் ஆகும் என பகீர் மிரட்டலிலும் ஈடுபட்டுள்ளனர். அதிலும், துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவோம், குடிக்கவே கூழ் இல்லையாம் கொப்பளிக்க பன்னீரா? என பெண் ஒருவரே காதுகூசும் ஆபாச வார்த்தைகளால் மிரட்டுவது பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது.

ஒதுக்கி வைக்கப்பட்ட அவலம்
ஊர்க் கட்டுப்பாடு நியூஸ்தமிழ்24x7

இதென்ன நியாயம்?

சின்னையன் தரப்பில் தவறே இருந்தாலும் முடிவெடுக்க வேண்டியது யார்? ஊர் பெரியவர்கள் என்ன அரசு அதிகாரிகளா? சடலத்தை ஊரில் புதைப்பது சின்னையனின் அடிப்படை உரிமை, அதனை தடுப்பதற்கு ஊரில் உள்ள பெரியவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

எது சரி, எது தவறு, யாருக்கு என்ன தண்டனை என்பதையெல்லாம் ஊரில் பெரியவர்களே முடிவெடுத்துவிட்டால் காவல்துறையும் நீதிமன்றங்களும் எதற்கு? அதிலும் வீட்டுக்கே சென்று மிரட்டுவது எந்தவகையில் நியாயம்?

யார் கொடுத்த தைரியத்தில் ஊரோடு சென்று மிரட்டுகிறார்கள்? எதிரியாகவே இருந்தாலும் இறப்பு வீட்டிற்கு சென்று மிரட்டுவது மனிதத்தன்மையா? என சரமாரியாக கேள்வி எழுப்பும் பலரும் காவல்துறை உயரதிகாரிகள் தான் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் இனிமேல் இதுபோன்று யாரையுமே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்காதவாறு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் முடிவை எடுத்த அந்த பெரியவர்கள் முதல் வீடுதேடி சென்று மிரட்டிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

கண்ணீர்
கடும் கட்டுப்பாடு நியூஸ்தமிழ்24x7

மனமிறங்காத ஊர்மக்கள்

சின்னையன் குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் குறித்து நமது நியூஸ் தமிழில் செய்தி வெளியான நிலையில், பல மணி நேரம் காத்திருந்தும் சடலத்தை புதைக்க இடம் தர ஊர்மக்கள் மனமிறங்காததால், அவர்களது சொந்த நிலத்திலேயே தனபாக்கியத்தின் உடல் புதைக்கப்பட்டது.

மனிதாபிமான அடிப்படையில் கூட உள்ளூர் மக்கள் ஒருவரும் வராத நிலையில், வெளியூரில் இருந்து வந்த சின்னையனின் உறவினர்கள் மட்டுமே இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

வீடியோவை காண...

கள்ளக்குறிச்சி
சடலத்துடன் கதறிய குடும்பம் -மனமிறங்காத ஊர்மக்கள்