

15 கிலோ நகைகளை ஒற்றை நபர்தான் முகமூடி அணிந்து கொள்ளை அடித்துள்ளதாகவும், முடிந்தும் முடியாமலும் கிடக்கும் கட்டுமான பணிகளே கொள்ளையனுக்கு கைகொடுத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படும் நிலையில் தனிப்படை போலீசார் தேடுதல்வேட்டையில் இறங்கி உள்ளனர்.
நகை கடை திறப்பு
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் உள்ள நேரு நகர் பகுதியில் நாட்டின் முன்னணி நிறுவனத்திற்கு சொந்தமான தனிஷ்க் நகைக்கடை உள்ளது. 3 மாடி கொண்ட இந்த கடையின் எலிவேஷன் மற்றும் தரை தளப் பணிகள் மட்டுமே முழுமையாக நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள தளங்களில் கட்டுமான பணிகள் மற்றும் லிப்ட் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும், தீபாவளி வியாபாரத்தை முன்வைத்து கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி கடை திறக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தி தரைத்தளத்தில் நகைகளை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடையை திறந்த போது அதிர்ச்சி
இந்த நிலையில், இரவு கடையை மூடிவிட்டு சென்ற ஊழியர்கள் மறுநாள் காலையில் வழக்கம்போல கடையை திறந்து பார்த்தபோது ஷோகேஸில் இருந்த மொத்த நகைகளும் வாரி வழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு அரக்கபறக்க அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க காவல் ஆணையர் ராஜேந்திரனே காவலர்களுடன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
ஒற்றை நபராக துணிகரம்?
கடையில் நடந்து கொண்டிருக்கும் அரைகுறை பணிகளைதான் முகமூடி கொள்ளையன் ஆயுதமாக பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருக்கும் சாரம் வழியாக ஏறி, லிஃப்ட்டின் நடுப்பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் வலிமையான இரும்பை பிடித்து கீழே இறங்கிதான் கொள்ளையன் தரைத்தளத்திற்கு சென்றிருக்க முடியும் எனவும் நகைகளை கொள்ளையடித்த பின்பும் அதே இரும்பு பைப் வழியாகதான் தப்பி சென்றிக்க முடியும் எனவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
அதேபோல், நகைக்கடைக்குள் நுழைவது ஒரு நபராக இருந்தாலும் சிசிடிவி இல்லாத இடங்களில் கூட்டாளிகள் நகைளை கொண்டு செல்வதற்காக காத்திருந்திருக்கலாம் எனவும் சொல்கிறார்கள். லிஃப்டும்கூட கை வைத்தாலே திறக்கும்நிலையில்தான் இருந்தது என்பதால் கொள்ளையனுக்கு கூடுதல் வசதியாகிவிட்டது.
ஆறு தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை
இதுஒருபுறம் இருந்தாலும், கடையின் முன்பக்கம் 2 செக்யூரிட்டிகள், கடையின் பின்பக்கம் 2 செக்யூரிட்டிகள் என மொத்தம் 4 பேர் இரவுப்பணியில் இருந்தும் அவர்களின் கண்ணை மறைத்து கொள்ளையன் எப்படி இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்க முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கு மத்தியில் கட்டுமான பணி மற்றும் லிஃப்ட் அமைக்கும் பணிகளுக்காக கடையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருவதால் அவர்களின் கை ரேகைகளையும் பதிவு செய்து விசாரணையில் இறங்கி உள்ள போலீசார் கடைக்குள் பணிபுரியும் ஊழியர்கள், செக்யூரிட்டி ஆகியோரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது, காளவாசல் சாலையில் உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் இன்ஞ் பை இன்சாக ஆய்வு செய்து வருகின்றனர். கடை திறந்த ஒரே மாதத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ள நிலையில் கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
வீடியோவை காண...