திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - ஸ்தானிக பட்டர்களுக்கு அழுத்தமா?

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததற்கு இதுதான் காரணம் என கோவில் அறங்காவல் குழுவினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஸ்தானிக பட்டர்கள் ஒருவரையொருவர் மாறி மாறி கை காட்டி உள்ளது தீப விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - ஸ்தானிக பட்டர்களுக்கு அழுத்தமா?
Published on: 

கோவில் அறங்காவல் குழுவினர் ரகசிய ஆலோசனை நடத்துவதற்கு முன், நடத்தியதற்கு பின் என ஸ்தானிக பட்டர்கள் எழுதிய 2 கடிதங்களையும் வட்டம்போட்டு காட்டி வருகின்றனர்.

உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டது.

இது, இந்து அமைப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் கோவிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், ஆகம விதிமுறைகள், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் ஸ்தானிக பட்டர்களின் கருத்துகளின் அடிப்படையிலேயே உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்பட்டதாக கோவில் துணை ஆணையர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

மன்னிப்பு கேட்டார் ஆட்சியர்

இதற்கு மத்தியில், உச்சநீதிமன்றத்தில் 17 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா. கல் தூணில் தீபம் ஏற்றத் தேவஸ்தானம் குழு அமைத்துப் பெயர்களைப் பரிந்துரைக்கவில்லை, நீதிமன்ற உத்தரவுகளை மீற வேண்டும் என நான் ஒருபோதும் நினைத்தது இல்லை, தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கும் கடும் முயற்சிகளை மேற்கொண்டும் நடக்கவில்லை, அதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாக கூறியிருந்தார் மாவட்ட ஆட்சியர்.

இது ஒருபுறமிருக்க, தீபம் ஏற்றுவது தொடர்பாக தங்களிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை என மறுப்பு தெரிவித்த ஸ்தானிக பட்டர்கள் சுவாமிநாதன், சுப்ரமணியன், சொக்கு சுப்ரமணியன், சண்முகசுந்தரம் ஆகியோர் கோவில் துணை ஆணையரிடம் கடிதம் கொடுத்ததோடு மறுப்பு அறிக்கை வெளியிடவும் வலியுறுத்தினர்.

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

இந்த விவகாரத்தை, அமைதியாக்க அறநிலையத்துறை துணை ஆணையர் செல்வி, கோவில் கண்காணிப்பாளர் ரஞ்சனி உள்ளிட்டோர் ஸ்தானிகப்பட்டர் சுவாமிநாதனிடம் ஆதரவு கடிதம் வாங்கும் நோக்கில் அவரது வீட்டில் ரகசிய ஆலோசனை நடத்துவதாக ஒரு தகவல் வெளியானது. இதனால், அங்கு திரண்ட கிராம மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இதனால், அறங்காவலர் குழுவினர் சுவாமிநாதபட்டர் வீட்டில் இருந்த ஒரு அறையில் உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், வாக்குவாதம் செய்த 5 பேரை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். அதோடு, ஸ்தானிக பட்டர்களின் வீடுகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

கல் தூணில் தீபம் ஏற்ற...

ஸ்தானிகர்களின் கருத்துப்படிதான் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்பட்டதாக கோவில் துணை ஆணையர் அவர்களை நோக்கி கை காட்ட, தனது முயற்சிக்கு செவிமடுக்கவில்லை என தேவஸ்தானத்தை நோக்கி மாவட்ட ஆட்சியர் அறிக்கையை சமர்ப்பிக்க, சம்மந்தமே இல்லாமல் தங்கள் பெயரை குறிப்பிடுவது மனவேதனையளிப்பதாக ஸ்தானிக பட்டர்களும் கடிதம் கொடுக்க திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? யார்தான் கேம் ஆடுகிறார்கள்? என்ற கேள்வி எழ ஆரம்பித்தது.

இந்நிலையில், நியூஸ் தமிழுக்கு ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன் பேட்டி அளித்துள்ளார். அதில், மலைமேல் இருக்கக்கூடிய தீபத்தூணுக்கு செல்ல சரியான பாதை இல்லை, கோவில் நிர்வாகமும் தொல்லியல் துறையும் இணைந்து சரியான பாதை அமைத்து கொடுத்தால்தானே கல்தூணில் தீபம் ஏற்ற முடியும் என தெரிவித்தார்.

தீபத்தூணுக்கு செல்ல வசதிகள் வேண்டும்

மேலும், கோவில் நிர்வாகம் சொல்லக்கூடியதைத் தானே நாங்கள் செய்ய முடியும் எனக்கூறிய ஸ்தானிக பட்டர், முருகனுக்கு சேவை செய்யத்தான் நாங்கள் காத்திருக்கிறோம், உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் ஏற்றும் தீபத்தை கல்தூணில் ஏற்றமாட்டோமா?

தங்கள் மீது சிலர் வேண்டுமென்றே பரப்பும் அவதூறுக்கெல்லாம் செவி சாய்க்க விரும்பவில்லை, தீபத்தூண் இருக்கும் பகுதிக்கு முறைப்படி படிக்கட்டு, 2 பக்கமும் கைப்பிடி மற்றும் மின்விளக்குகள் வசதிகள் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

இரண்டு கடிதங்கள்...

இதற்கு மத்தியில், ஸ்தானிக பட்டர்கள் நவம்பர் 24ஆம் தேதி கோவில் துணை ஆணையரிடம் கொடுத்த கடிதத்தையும், நவம்பர் 25ஆம் தேதி அவர்கள் கைப்பட எழுதியுள்ள கடிதத்தையும் ஒப்பீடு செய்து வருகின்றனர்.

24ஆம் தேதி எழுதிய கடிதத்தில் தங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை எனக்கூறியுள்ள ஸ்தானிக பட்டர்கள், 25ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் தங்களின் கருத்துப்படியும், சைவ சமய வழிபாட்டு நெறிமுறைகள் படியும்தான் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றியதாக கூறி உள்ளனர்.

இப்படி அவர்களின் கருத்துக்களிலேயே முரண் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கு பின்னால் என்ன உள்ளது? கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுபோன்று உள்ள 2ஆவது கடிதம் ஸ்தானிக பட்டர்கள் அவர்களாகவே தாமாக முன்வந்துதான் எழுதி கொடுத்தார்களா? அல்லது கோவில் நிர்வாகம் தரப்பில் ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

வீடியோவைக் காணலாம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - ஸ்தானிக பட்டர்களுக்கு அழுத்தமா?
தீப விவகாரம் - மாறி மாறி கை காட்டும் 3 தரப்பு