தனிஷ்க் கடை கொள்ளைக்காரன் எங்கே? தனி ஆளா? கேங்கின் மாஸ்டர் பிளானா?

மதுரை தனிஷ்க் ஜுவல்லர்ஸில் 15 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு எஸ்கேப் ஆன பலே திருடனை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.
தனிஷ்க் கடை கொள்ளைக்காரன் எங்கே? தனி ஆளா? கேங்கின் மாஸ்டர் பிளானா?
Published on: 

எந்த தடயத்தையும் விட்டு வைக்காத கொள்ளையன், போலீசாரை குழப்பும் வகையில் வீதி வீதியாக சுற்றியதன் சிசிடிவி காட்சி அடுத்தடுத்து வெளியாகி உள்ள நிலையில் தனிநபர் கொள்ளையா? அல்லது கும்பல் பின்னணியா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புத்தம் புதுக்கடையில்...

தனிஷ்க் ஜூவல்லர்ஸின் மதுரை கிளையில், கடந்த 12ஆம் தேதி அதிகாலை 3 முதல் 4 மணியளவில் 15 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வைர நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கட்டுமான பணி நிறைவடையாமல் அரைகுறையாக இருந்த கட்டடத்தின் சாரத்தில் ஏறி லிப்ட் வழியாக சென்ற கொள்ளையன், மூன்றாவது மாடியில் இருந்த தங்கத்தை பார்த்து பார்த்து கொள்ளையடித்தது தெரிய வந்திருக்கிறது.

கொள்ளையடிப்பதில் நுணுக்கம்

ஸ்டோன் இல்லாத தங்க நகைகள், 916 ஹால்மார்க் நகைகளை மட்டுமே சாக்குப்பைக்குள் அள்ளிப் போட்டுக்கொண்டதாக கூறப்படும் நிலையில் சைரன் அடிக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டகத்துக்குள் இருந்த தங்க நகைகளின் பக்கமே கொள்ளையன் செல்லவில்லை என சொல்லப்படுகிறது.

ஷோகேஸில் இருந்த மொத்த நகைகளையும் வாரி சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகியிருக்கிறான். இந்நிலையில் கடையின் பின்பகுதியில் உள்ள பாதையில் 3.30 மணியளவில் கொள்ளையன் தப்பி சென்ற காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

பலே பலே திருடன்

கருமை நிறத்தில் பேண்ட் சட்டை, ஷூ, தொப்பி, முகமுடியை அவர் அணிந்திருந்ததாக சொல்லப்படும் நிலையில் போலீசாரை குழப்புவதற்காக பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் மதுரை நகரையே கொள்ளையன் சுழன்றதாக சொல்லப்படுகிறது. நேரு நகரில் உள்ள இந்த தங்கநகை கடையிலிருந்து மாடக்குளம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் வழியாக சிசிடிவி கேமராவில் பதிவாகும் வகையில் சுற்றி இருக்கிறான்.

இதனால் கொள்ளையன் எவ்வழியின் வந்தான் எவ்வழியில் சென்றான் என்பதே போலீசாருக்கு புரியாத புதிராகிவிட்டது. எங்கெல்லாம் சிசிடிவி கேமரா உள்ளது, எவ்வழியில் சென்றால் போலீசாரை குழப்பலாம் என பல நாள் அக்கொள்ளையன் திட்டமிட்டிருக்கலாம்? என்றும், மதுரை சாலைகளே அக்கொள்ளையனுக்கு அத்துபடியாக இருக்கலாம்? என்றும் யூகிக்கப்படுகிறது.

ஒத்திகை பார்த்த கொள்ளையன்

9 தனிப்படைகள் அமைத்தும் கடை கடையாக ஏறியும், காவல்துறையின் கண்காணிப்பு கேமராக்கள், சிக்னலில் உள்ள சிசிடிவி என எதிலும் கொள்ளையன் இருக்கும் இடத்தை போலீசாரால் நெருங்கவே முடியவில்லை. இக்கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன்பாக கடந்த 5ஆம் தேதி ஒரு trail பார்த்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை தனிஷ்க் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் அதிகாரிகள் கவனிக்காமல் கோட்டை விட்டதே இந்த பெரும் கொள்ளைக்கு வழிவகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பக்கத்து மாநிலங்களிலும்...

கொள்ளையனை பற்றிய எந்த துப்பும் கிடைக்காததால் ஏஐ மூலம் அவனது உடல் தோற்றம் மூலம் அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது. ரயில் மூலமாக அவன் கேரளாவிற்கோ, வடமாநிலத்திற்கோ தப்பித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையன் வடமாநிலத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என்ற அடிப்படையில் வடமாநில காவல்துறை உதவியை தமிழக போலீசார் நாடியுள்ளனர். மேலும் ஹைதராபாத்துக்கும் மதுரை தனிப்படை போலீசார் விரைந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வீடியோவைக் காண...

தனிஷ்க் கடை கொள்ளைக்காரன் எங்கே? தனி ஆளா? கேங்கின் மாஸ்டர் பிளானா?
தனிஷ்க் கடை கொள்ளைக்காரன் எங்கே?