செக்கானூரணி ஸ்டேஷனில் நடந்தது என்ன? உடற்கூராய்வு ரிப்போர்ட் சொல்லும் உண்மை

மதுரை செக்கானூரணி காவல் நிலைய மரண வழக்கில், லாரி ஓட்டுநரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
செக்கானூரணி ஸ்டேஷனில் நடந்தது என்ன? உடற்கூராய்வு ரிப்போர்ட் சொல்லும் உண்மை
Published on: 

கழுத்தில் கயிற்றை வைத்து அழுத்திய தடம், நுரையீரலில் வீக்கம் இருந்ததோடு, முதுகில் 5 இடங்களில் ரத்தக்கசிவு காயங்கள் இருந்ததாக கூறப்படுவது, லாரி ஓட்டுநரின் மர்ம மரண வழக்கை சூடுபிடிக்க வைத்துள்ளது. காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொ* செய்து விட்டதாக குடும்பத்தினர் கூறும் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

காவல் நிலையத்தில் மரணம்

தேனி மாவட்டம் அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநரான பாலகிருஷ்ணன், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். புகார்தாரராக விசாரணைக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக, காவல் ஆய்வாளர் முத்து, தலைமை காவலர் பழனிவேல் ராஜன், பெண் காவலர் கலைச்செல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

காவல் நிலையத்தில் நிகழ்ந்த மரண வழக்கை சிபிசிஐடி கையிலெடுத்திருக்கும் நிலையில், பாலகிருஷ்ணன் உடலுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக முழு வீடியோ பதிவுடன் நீதிபதி முன்பாக நடந்த பிரேத பரிசோதனையின் அறிக்கை வெளியாகி போலீஸ் மீதான சந்தேகத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.

வெளியானது அறிக்கை, அதிர்ச்சி

பாலகிருஷ்ணனின் கழுத்தில் 27 செமீ நீளத்திற்கு கயிறு வைத்து அழுத்திய தடம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதோடு, கழுத்தில் குறிப்பிட்ட இடத்தில் கயிறு தடம் இல்லாமலும் இருந்திருக்கிறது. கழுத்தின் வலது பக்கத்தில்

கயிறு தடத்திற்கு கீழே சிராய்ப்புக் காயங்களும் இருந்திருக்கிறது. பாலகிருஷ்ணன் தாம் அணிந்திருந்த சட்டையாலேயே தூக்கிட்டு தற்கொ* செய்து கொண்டதாக போலீஸ் கூறிய நிலையில், எப்படி கயிறு தடம் வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், பாலகிருஷ்ணனின் உடலில் கை, கால், தோள்பட்டை, மார்பகம் என 5 இடங்களில் ரத்தக்கசிவு காயங்கள் இருந்திருக்கிறது. இதன் மூலம் பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தப்பட்டிருக்கக் கூடும் என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.

ரத்தக்கசிவு காயங்கள் எப்படி?

மேலும், பாலகிருஷ்ணனின் மூளையும், நுரையீரலும் வீக்கம் அடைந்த நிலையில் இருந்திருக்கிறது. இதய நாளத்தில் ரத்தக்கசிவும் ஏற்பட்டிருக்கிறது. நுரையீரலில் நுரை கலந்த திரவமும் இருந்திருக்கிறது. கழுத்து இறுக்கப்பட்டு தான் பாலகிருஷ்ணன் உயிர் பிரிந்திருக்கிறது என்பது, பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து நிரூபணமாகியிருக்கிறது.

போலீசார் சொல்வது போல பாலகிருஷ்ணன் தற்கொ* செய்து கொண்டார் என்றால், எப்படி ரத்தக் கசிவு காயங்கள் வந்தன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முதல் கட்ட அறிக்கையே...

முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியிருக்கும் நிலையில், இறப்புக்கான முழு காரணத்தை கண்டுபிடிக்க அடுத்தக்கட்ட பரிசோதனையில் இறங்கியிருக்கிறது மருத்துவக் குழு. பாலகிருஷ்ணனின் இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து மதுரை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதயம், நுரையீரல், கணையம், மண்ணீரல் மட்டுமல்லாமல் மூளையின் திசு மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆய்வு முடிவுகள் கிடைத்த பின்னர் தான் இறப்புக்கான முழு காரணம் தெரியவரும் என்றாலும், முதற்கட்ட அறிக்கையே போலீசாருக்கு எதிராக தான் வந்திருக்கிறது.

அடுத்தகட்ட விசாரணையில்...

குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பி சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், புகார் கொடுத்து 10 நாட்களுக்கு பிறகு விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்? விடிய விடிய காவல் நிலையத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? யாருடைய தூண்டுதலில் பாலகிருஷ்ணன் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்? என்பதெல்லாம் சிபிசிஐடியின் அடுத்தடுத்த கட்ட விசாரணையில் தான் தெரியவரும்.

காவல் நிலைய மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பது இன்னும் வாயளவிலேயே இருக்கிறது என்பதை தான் செக்கானூரணி சம்பவமும் உணர்த்தியிருக்கிறது.

தொடரும் போராட்டம்

இதனிடையே, பாலகிருஷ்ணன் மரணத்திற்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்களும் தீவிரமாகி வருகின்றன. ராஜாஜி மருத்துவமனையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் கைது செய்ய முயன்ற போதும் கலைந்து செல்ல மறுத்து விடாப்பிடியாக போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.

அப்போது, பாலகிருஷ்ணனின் மகன் வாகனத்தில் ஏற மறுத்து கீழே படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோவைக் காண...

செக்கானூரணி ஸ்டேஷனில் நடந்தது என்ன? உடற்கூராய்வு ரிப்போர்ட் சொல்லும் உண்மை
மதுரை காவல் நிலைய மரணம் - Post Mortem Report