வரும் 16-18ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது
அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி, 18ஆம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை விலக வாய்ப்பு என்றும், அதே கால கட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 - 18ஆம் தேதிக்குள் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை, தமிழகத்தில் பெய்ய வேண்டிய இயல்பான அளவு 33 செமீ. அதனை ஒட்டியே மழை பெய்துள்ளது.
சென்னையில், பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 45 செ.மீ. கிடைத்த மழை அளவு 58 செ.மீ. இது இயல்பை விட 29 சதவீதம் அதிகம்.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16 - 18ல் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அமைந்துள்ளன.
வழக்கமாக, அக்.1 முதல் - டிச. 31 வரை தான் வடகிழக்கு பருவமழை காலம். கடந்த 15 ஆண்டுகளில் அனைத்து ஆண்டுகளிலும் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. அநேக வருடங்களில் இயல்பை விட அதிகமாக மழை இருந்துள்ளது. 2 ஆண்டுகளில் மட்டும் இயல்பை விட குறைவாக உள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் வடகிழக்கு பருவமழை பதிவாக வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பை விட குறைவாகவும் வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில் 92 நாட்களில் இயல்பாக 44 செ.மீ. மழை பதிவாவது வழக்கம். இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
சுமாராக 50 செ.மீ. வரை மழை பதிவாக வாய்ப்பு உள்ளது. அக்.1 முதல் தற்போது வரை தமிழகத்தில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த மாதம் 17 செ.மீ. மழை கிடைக்க வேண்டும்.
அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இவ்வாறு வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறினார்.
