

திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கும் மிரட்டல் விடுத்ததோடு, குடும்பத்தை மீண்டும் ஊர் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ள 50 ஆயிரம் ரூபாய் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
சாதிய கோர முகம்
பெற்றோரின் சம்மதம், பெரியோர்களின் ஆசி, அப்புறம் என்ன குறை? காதலித்து கரம்பிடித்தது தப்பா? ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாசலில் நின்று ஒரு தாயின் நெஞ்சை பிளக்கும் இந்த அழுகுரல், இன்றளவும் பல கிராமங்களில் வேரூன்றியுள்ள சாதிய பூதத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள லட்சுமிபுரம் மேலத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். BBA பட்டதாரியான இவர், தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், பாம்பன் தெற்குவாடி பகுதியை சேர்ந்த B.com பட்டதாரியான சங்கீதாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும், தங்களது காதலை வீட்டில் தெரிவிக்க, இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
பொதுவாக கிராமங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தும்போது, ஊர் கூட்டத்தில் முறைப்படி பத்திரிகை வைத்து ஊர் மக்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம்.
அழைத்தது குற்றமா?
இதன்படி, கார்த்திக் குடும்பத்தினரும் தங்களது திருமணத்திற்கு ஊர் மக்களை அழைத்திருக்கிறார்கள். பெண் வீட்டு தரப்பில் உறவினர்கள் பலரும் திருமணத்தில் கலந்துகொண்ட நிலையில், மாப்பிள்ளை வீட்டு தரப்பில் உறவினர்களை தவிர ஊர் மக்கள் ஒருவர் கூட திருமணத்தில் பங்கேற்கவில்லையாம்.
கலப்பு திருமணம் என்பதால் ஊர் நிர்வாகிகள் சிலர் திருமணத்துக்கு செல்லக்கூடாது என மிரட்டியதாக கார்த்தி தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
அதையும் மீறி திருமணத்துக்கு சென்றவர்களிடமும் ஏன் அந்த திருமணத்துக்கு போனீர்கள்? என கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
ரூ.50,000 கொடுத்தால்...
திருமணம் முடிந்து 2 மாதங்களை கடந்தும் கார்த்திக் குடும்பத்தினரை ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார்கள். வழக்கம்போல ஊர் மக்களுடன் இணைந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தங்களது குடும்பம் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்து, கார்த்திக்கின் தாய் கண்ணீர்மல்க குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு இடையே, மீண்டும் ஊர் கூட்டத்தில் குடும்பத்தை சேர்த்துக் கொள்ள 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியதாக புகார் எழுந்திருக்கிறது.
தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என கார்த்திக்கின் பெற்றோர் கெஞ்சியதோடு, 25 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் கூறியிருக்கிறார்கள். ஆனால், அதையும் ஏற்காமல் 50 ஆயிரம் ரூபாய் முழுமையாக கொடுத்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
காவல் அதிகாரியிடம் புகார் மனு
இதனால், கடந்த 2 மாதங்களாக நிம்மதியின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக கார்த்திக்கின் தாயார் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்திருக்கிறார். ஊர் மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி வருவதாகவும், தங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து கார்த்திக் தனது பெற்றோருடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷை நேரில் சந்தித்து புகார் மனு அளித்திருக்கிறார்.
கடும் நடவடிக்கை வேண்டும்
தங்களது குடும்பத்தை ஒதுக்கிவைக்கும் நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கேதான் சில கேள்விகள் எழுகின்றன. இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வது இருவரின் தனிப்பட்ட உரிமை. அவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பதை வைத்து, அவர்களுடன் பழகுவதையும் திருமணத்தில் பங்கேற்பதையும் தடுக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது?
திருமணத்திற்கு சென்றவர்களையே அழைத்து விசாரிப்பதும், ஒரு குடும்பத்தை ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பதும் எந்த வகையில் நியாயம்? அதிலும், மீண்டும் ஊர் கூட்டத்தில் சேர 50 ஆயிரம் ரூபாய் கேட்பதாக எழுந்துள்ள புகார் கொந்தளிக்க வைத்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்துள்ள புகார் மீது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.