அறிவுக்கூடமா? ஊழல் கூடமா? நூலகங்களில் என்ன நடக்கிறது?

கோவையில் போலி நூல்கள் விநியோகிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடரும் நிலையில், ஏற்காடு கிளை நூலகங்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான பழைய பதிப்புகளை புதிய நூல்களாக கொள்முதல் செய்ததாக அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.
நூலக சர்ச்சை
ஏற்காடு, சேலம்நியூஸ்தமிழ்24x7
Published on: 

புத்தக கொள்முதலில் முறைகேடு, கமிஷன் கணக்கில் குளறுபடி என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் நூலக கொள்முதலின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்காடு நூலகம்
கொள்முதல் முறைகேடுநியூஸ்தமிழ்24x7

ஏற்காடு கிளை நூலகங்களில்...

புத்தகங்களை படித்தால் அறிவு வளரும் என்பார்கள். ஆனால், நூலகத்துக்கே போலி புத்தகங்கள் வந்தால் என்ன செய்வது? அறிவு கருவூலமாக இருக்க வேண்டிய நூலகங்கள், தற்போது முறைகேடு புகார்களின் மையமாக மாறியிருக்கின்றன. முதலில் கோவை பெரியார் அறிவுலகம். இப்போது சேலம் மாவட்டம் ஏற்காடு கிளை நூலகங்கள்.

ஒரு பக்கம் போலி நூல்கள் என்ற புகார். இன்னொரு பக்கம் 10 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய பதிப்புகளை புதிய நூல்களாக கொள்முதல் செய்ததாகக் குற்றச்சாட்டு என அரசு நூலகங்களின் புத்தக கொள்முதலை சுற்றி அடுத்தடுத்து வெடிக்கும் சர்ச்சைகள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

புதிய பதிப்பாக கணக்கு காட்டி...

சேலம் மாவட்டம், ஏற்காடு கிளை நூலகங்களுக்கு 2024-25ம் பதிப்பாண்டு நூல்களாக கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள், 2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த புத்தகங்களில் பல ஆண்டுகளுக்கு முந்தைய பழைய பதிப்புகள் இடம் பெற்றிருப்பதாக தமிழ்நாடு நூலகர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் துரை தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக, உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மதராஸ் மண்ணும் கதைகளும் என்ற நூல் 2022ம் ஆண்டு பதிப்பாகும். இதன் விலை 135 ரூபாய். 2024-25 பதிப்பாண்டு நூல்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருக்கும்போது, 2022ம் ஆண்டு பதிப்பான இந்த நூல் புதிய பதிப்பாண்டு நூலாக கணக்கு காட்டி விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

முறைகேடு
உயிர்மை பதிப்பகம்நியூஸ்தமிழ்24x7

பட்டியல் வெளியீடு

இதேபோல், உயிர்மை பதிப்பகத்தின் அவரும் நானும், எல்லோரும் சமம்தானே டீச்சர், காதல் இன்று என்னவாக இருக்கிறது? உள்ளிட்ட 2018ம் ஆண்டு பதிப்பு நூல்களும் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், 2012ம் ஆண்டு வெளியான ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்த நூல், 2015ம் ஆண்டு வெளியான பிக் மேஜிக், 2016ம் ஆண்டு வெளியான மகாத்மா நூல், 2017ம் ஆண்டு வெளியான வேனல், 2019ம் ஆண்டு வெளியான சூரியன் பதிப்பகத்தின் சுலபமாக செய்யலாம் சுயதொழில், ரகசிய விதிகள், தியா வெளியீட்டில், என் நெஞ்சில் உறைந்தவனே உள்ளிட்ட பல்வேறு நூல்களும் பழைய பதிப்புகளாகவே நூலகங்களுக்கு வந்திருப்பதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

30 சதவீத கமிஷன் தொகை எங்கே?

அதாவது, 2024-25 பதிப்பாண்டு நூல்களாக கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பட்டியலில், 2012 முதல் 2022 வரையிலான பழைய பதிப்புகள் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதில் கமிஷன் தொகை தொடர்பாகவும் துரை தியாகராஜன் எழுப்பியிருக்கும் கேள்வி கவனிக்கத்தக்கது.

வழக்கமாக 30 சதவீத கமிஷனும், 2 புள்ளி 5 சதவீத நலவாரிய பங்களிப்பும் வழங்கப்படும் நிலையில், 60 சதவீத கமிஷனும் 2 புள்ளி 5 சதவீத நலவாரிய பங்களிப்பும் கணக்கிடப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அப்படியானால், கூடுதலாக கூறப்படும் 30 சதவீத கமிஷன் தொகை எங்கே சென்றது? என்பதுதான் அவரது கேள்வி.

குற்றச்சாட்டு
அவரும் நானும்நியூஸ்தமிழ்24x7

விரிவான விசாரணை தேவை

பழைய புத்தகங்களை திருப்பி அனுப்புவதற்கான தெளிவான நிபந்தனைகள் இல்லாததால், நூலக நிர்வாகத்தால் அவற்றை திருப்பி அனுப்ப முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 2026 பிப்ரவரி 15ம் தேதி, அடுத்த பதிப்பாண்டுக்கான நூல்களையும் அவசர அவசரமாக இணையவழியில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதிலும் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நூலகர் சங்கத்தின் கோரிக்கையாக இருக்கிறது.

உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் விவகாரம் ஒருபுறம் இருக்க, ஏற்காடு கிளை நூலகங்கள் சுற்றி சர்ச்சை வெடித்திருக்கிறது. ஏற்காட்டில் பழைய பதிப்பு நூல்கள், பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் என்ற புகார்.

அரசு நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்களின் தரத்தை சரிபார்ப்பது யார்? பதிப்பாண்டை உறுதி செய்வது யார்? விலையை நிர்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா? மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்படும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் முறையான கணக்கு இருக்கிறதா? நூலகங்கள் என்பவை அறிவை வளர்க்கும் இடங்கள். அங்கேயே கொள்முதல் தொடர்பான முறைகேடு புகார்கள் எழுவது கவலைக்குரிய விஷயம்.

முறைகேடு புகார்
சரமாரி கேள்வி நியூஸ்தமிழ்24x7

எனவே, 2 விவகாரங்களிலும் ஆவணங்களின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது.

நூலக சர்ச்சை
நூலகங்களில் என்ன நடக்கிறது?