

கைதான அதிகாரிகளை பழிவாங்க பொய் வழக்குப்பதிவு செய்ய வைத்தது மட்டுமின்றி, அவர்களைக் கொ* செய்யவும் திட்டம் தீட்டிய அதிர வைக்கும் ஆடியோக்கள் வெளியாகி சேலம் மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச வழக்கில் கைது
சேலம் சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவில் பணியாற்றிய ஆய்வாளர் ராமராஜன், உதவி ஆய்வாளர்கள் சரவணன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ரேசன் அரிசி கடத்தல்காரனிடம் லஞ்சம் பெற்றதாக, கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த லஞ்ச வழக்கின் பின்னால், ரேசன் அரிசி கடத்தல் கும்பலும், சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவில் பணியாற்றிய சில காக்கிகளும் ஒளிந்திருப்பது அப்போது யாருக்கும் தெரியாது.
என்ன நடந்தது?
சேலம் சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவில் பணியாற்றிய முன்னாள் பெண் ஆய்வாளர் சங்கீதாவின் தூண்டுதலின் பேரில், அவரது கார் ஓட்டுநரான காவலர் புயல்ராஜன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மல்லசமுத்திரத்தை சேர்ந்த பிரபல ரேசன் அரிசி கடத்தல் மன்னனான வீரமணியுடன் சேர்ந்து, சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சக்திவேலு மூலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்க வைத்தது ஆடியோ உரையாடல் ஆதாரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
ஆடியோவால் அம்பலமான சதி
இந்த சதித்திட்டத்திற்கு பின்னால், மூளையாக செயல்பட்ட காவலர் புயல்ராஜனுடன் வீரமணியின் கார் ஓட்டுநரான கவுதம் பேசிய ஆடியோ உரையாடல் ஆதாரங்களை நமது நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், தற்போது மேலும் சில ஆடியோ ஆதாரங்களும் வெளியாகியுள்ளது.
லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், சரவணன் ஆகியோரை மீண்டும் யூனிபார்ம் போட விடக்கூடாது என்றும், அவர்கள் ஏதாவது செய்வதற்கு முன்பு நாம முந்திக்கொள்ள வேண்டும் என கவுதமுடன் வீரமணி பேசும் அதிரவைக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
ஆதாரத்துடன் புகார்
வீரமணி நெட் ஒர்க் ரெடி செய்து வைத்திருப்பதாகவும், அவன் கரு அறுத்திடுவான் என்றும் கவுதமனிடம் காவலர் புயல்ராஜன் பேசிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேசன் அரிசி கடத்தல் கும்பலால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், புனையப்பட்ட லஞ்ச வழக்கில் தாங்கள் சிக்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள், சேலம் மாநகர காவல் ஆணையாளர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு ஆடியோ ஆதாரங்களுடன் புகாரளித்துள்ளனர்.
புதிய ஆடியோ ரிலீஸ்
நியூஸ் தமிழில் வெளியான செய்தியை தொடர்ந்து, சதிச் செயலில் பங்கு வகித்த வீரமணியின் கார் ஓட்டுநரான கவுதமன், இவ்வழக்கில் உண்மையை ஒப்புக் கொள்வதாக கூறி, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
நியூஸ் தமிழில் வெளியான செய்தியை கேள்விபட்டு அச்சமடைந்த ரேசன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த சக்திவேலும், கவுதமை தொடர்பு கொண்டு பதற்றத்துடன் பேசிய ஆடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
சேலம் சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, சேலம் துணை ஆணையர் மகேந்திரன் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், திருச்சி லால்குடி டி.எஸ்.பி.யும் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, இந்த சம்பவங்களுக்கு பிதாமகனான ரேசன் அரிசி கடத்தல் மன்னனான ரவுடி வீரமணியை, நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீடியோவில் காண...