

ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் அளவிற்கு கடத்தல் கும்பலுக்கு துணிச்சல் வந்தது எப்படி? இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? சரபங்கா நதியில் நடந்த மண் கொள்ளையை நியூஸ் தமிழ் குழு அம்பலப்படுத்திய முழு விவரத்தை பார்க்கலாம்.
நள்ளிரவு - சினிமா பாணியில்...
இரவு 10 மணியை தாண்டினால் போதும், சேலம் மாவட்டம் தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகள் மயான அமைதிக்கு சென்றுவிடும். இந்த இருட்டை பயன்படுத்தி, இயற்கையின் உயிர்நாடியான சரபங்கா நதியின் மார்பை பிளந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கனிமவளங்கள் சூறையாடப்பட்டு கொண்டிருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அதுவும் காவல்துறையோ, கனிமவளத்துறையோ கண்டுபிடிக்காத இந்த மெகா கொள்ளையை தங்கள் உயிரை பணயம் வைத்து நள்ளிரவில் சினிமா பாணியில் துரத்தி பிடித்து அம்பலப்படுத்தியிருக்கிறது நியூஸ் தமிழ் செய்திக் குழு.
திட்டமிட்ட மண் கடத்தல்
தாரமங்கலத்தை அடுத்த கே.ஆர்.தோப்பூர் பகுதியில், சரபங்கா நதிக்கரையோரத்தில் இரவோடு, இரவாக கிராவல் மண் அள்ளப்படுவதாக பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். களத்தில் இறங்கிய செய்தி குழுவினர், நள்ளிரவில் புதர்களுக்கு இடையே மறைந்திருந்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, இரவு 10 மணிக்கு மேல், கனரக வாகனங்களும், லாரிகளும் ஆற்றுப் பகுதிக்குள் நுழைந்து, பெரிய இயந்திரங்கள் மூலம் கிராவல் மண் லாரிகளில் ஏற்றப்பட்டுள்ளது. இந்த கொள்ளைக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என செய்தி குழுவினர் நடத்திய முதற்கட்ட ஆய்வில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் பெயர் அடிபட்டது. சுமார் 30க்கும் மேற்பட்ட ஆட்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மிக திட்டமிட்ட நெட்வொர்க் மூலம் இந்த மண் கடத்தலை சக்திவேல் அரங்கேற்றி வந்ததும் தெரியவந்தது.
தலைதெறிக்க ஓட்டம்
மண் ஏற்றப்பட்ட 2 லாரிகள் ஆற்றிலிருந்து வெளியேறி, சேலம் - இரும்பாலை சாலையில் மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்தன. உடனடியாக, அப்பகுதி இரவு நேர ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நியூஸ் தமிழ் குழுவினர், சற்றும் தாமதிக்காமல் அந்த லாரிகளை பின்தொடர்ந்து துரத்த தொடங்கினர். இரும்பாலை சாலையில் அதிவேகமாக சென்ற முதல் லாரியை செய்தி குழுவினர் முந்தி சென்று வழிமறித்தனர்.
எதிர்பாராத விதமாக கேமரா வெளிச்சத்தை நேருக்கு நேர் கண்டதும், கடத்தல் கும்பல் லாரியை நடுவழியிலேயே நிறுத்திவிட்டு இருளில் தெறித்து ஓடியது. ஆனால், செய்தி குழுவினர் 2வது லாரியை மடக்க முயன்ற அந்த நொடியில், மர்ம நபர் ஒருவர் மீண்டும் அந்த முதல் லாரியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
லாரி பறிமுதல், போலீசார் விசாரணை
இருப்பினும் மனம் தளராத செய்தி குழுவினர், பின்னால் வந்துகொண்டிருந்த 2வது லாரியை விடாமல் துரத்தினர். ஆபத்தை உணர்ந்த அந்த லாரி ஓட்டுநர், பிரதான சாலையை தவிர்த்து குறுக்கு பாதைகளில் அதிவேகமாக வண்டியை செலுத்தி தப்பிக்க பார்த்தார். பல கிலோமீட்டர் தூரம் உயிரை பணயம் வைத்து துரத்திய செய்தி குழுவினர், ஒருவழியாக அந்த லாரியை மடக்கி பிடித்து இரவு நேர ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். பிடிபட்ட தகவலறிந்து அங்கு வந்த லாரி உரிமையாளர் வெங்கடேசன், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், இன்றைய தினம் மட்டும்தான் நான் இந்த கடத்தலில் ஈடுபட்டேன் என்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மண் கடத்தலுக்காக பாலம்
லாரியை பிடித்ததோடு நின்றுவிடாமல், மண் அள்ளப்பட்ட சரபங்கா நதி பகுதிக்குள் நியூஸ் தமிழ் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தபோதுதான் பேரதிர்ச்சி காத்திருந்தது. கனரக லாரிகள் எவ்வித தடையுமின்றி ஆற்றுக்குள் சென்று வர வேண்டும் என்பதற்காக, சரபங்கா நதியின் இயற்கையான நீரோட்டத்தையே மறித்து, ஆற்றின் குறுக்கே சட்டவிரோதமாக ஒரு தற்காலிக பாலத்தையே அமைத்திருந்தார்கள் கடத்தல்காரர்கள்.
ஒரு நதியின் குறுக்கே பாலம் போடும் அளவுக்கு இவர்களுக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? உள்ளூர் அதிகாரிகளின் ஆசி இல்லாமல் இது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தற்போது, கனிமவள துறை அதிகாரிகளும், போலீசாரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த கொள்ளை எத்தனை மாதங்களாக நடக்கிறது? எத்தனை ஆயிரம் யூனிட் மண் சூறையாடப்பட்டுள்ளது? என்பதை கண்டறிய சேலம் மாவட்ட நிர்வாகம் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும், முக்கியப் புள்ளியான சக்திவேல் மற்றும் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, அரசுக்கு ஏற்பட்ட பல லட்சம் ரூபாய் இழப்பை அவர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கிறது.
வீடியோவில் காணலாம்