

அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசு ஆவணங்களை ஒப்படைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மலை கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
மலைவாழ் கிராமத்தில்...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்படி பாலக்காடு மலைக் கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், சுமார் 300 ஏக்கரில் வாழை, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து, அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
வேப்படி பாலக்காடு கிராம மக்கள் தங்களது விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்லவும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும், கோயில் திருவிழா மற்றும் மயானத்திற்குச் செல்லவும் தலைமுறை தலைமுறையாக ஒரே பொது வழித்தடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அருகிலுள்ள நில உரிமையாளர்கள் இந்தப் பாதை தங்களது பட்டா நிலத்தில் வருவதாகக் கூறி, வழித்தடத்தை அடைத்துள்ளனர்.
ஆட்சியர் வரை மனு அளித்தும்...
இந்த விவகாரம் தொடர்பாக, சேலம் மாவட்ட ஆட்சியர், ஆத்தூர் கோட்டாட்சியர் மற்றும் கெங்கவல்லி வட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
அரசுக்கு கோரிக்கை
வழித்தடப் பாதை அடைக்கப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள மலைவாழ் மக்கள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நூற்றாண்டு கால வழிப்பாதையை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழித்தட பாதை பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அரசு வழங்கிய அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் வேப்படி பாலக்காடு மலைக் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.