

திருவிழாவின் சிகர நிகழ்வாக, வானளாவிய மலை உச்சியில், லட்சக்கணக்கான பக்தர்களின் 'அரோகரா' முழக்கம் விண்ணதிர, மகா தீபம் ஜெகஜோதியாய் ஏற்றப்பட்டது. அந்தப் புனிதச் சுடர் ஒளிர்ந்த நொடியில், திரும்பும் திசையெங்கும் சிவனடியார்களின் பக்தி முழக்கம் அலைகடலென எழுந்து, திருவண்ணாமலை நகரமெங்கும் எதிரொலித்தது.
அக்னி தலம் திருவண்ணாமலை
’தீப தரிசனம் கண்டால் தீவினைகள் அகலும்,’ என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அந்த வகையில், பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாய் ஒளிரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாய் அரங்கேறியது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை ஈசனின் தீபத் திருவிழாவை தரிசிக்க, உலகின் எட்டுத்திக்கும் இருந்தும் சிவபக்தர்கள் அலைகடலெனத் திரண்டு வருவது வழக்கம்.
மலை உச்சியில் மகா தீபம்
ஆண்டுதோறும் தீபத் திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலை உச்சியில் சுடர்விடும் மகா தீபத்தைக் காணக் கண்கோடி வேண்டும் என்பார்கள். தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாய் ஜொலிக்கும் அண்ணாமலையாரைக் கண்டு பக்தர்கள் பக்திப் பரவசத்தில் திளைப்பார்கள்.
இந்த அற்புதக் காட்சியைக் காணத் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால், திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது.
செம்பினால் ஆன மகா தீபக் கொப்பரை
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்வான பத்தாம் நாளில், அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. கருவறையிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித அக்னியால், ஐந்து மடக்குகளில் நெய் ஊற்றி, வேத மந்திரங்கள் விண்ணை பிளந்திட பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை தயார் செய்யும் பணி தொடங்கியது. கோவிலிலிருந்து அம்மணி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மலையேறும் பாதைக்குச் செம்பினால் ஆன மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது.
ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கொப்பரையை சுமந்து சென்று மலை உச்சியில் நிலைநிறுத்தினர். சுமார் ஏழு அடி உயரமுள்ள அந்தச் செப்புக் கொப்பரையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 3 டன் பசு நெய் ஊற்றப்பட்டு, அதில் ஆயிரம் மீட்டர் நீளமுடைய காடா துணி திரியாகத் திரித்து, அதில் சுமார் இரண்டு கிலோ கற்பூரமும் சேர்க்கப்பட்டது.
இதையடுத்து, பஞ்சமூர்த்திகள் சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் தரும் அர்த்தநாரீஸ்வரர், சன்னிதியிலிருந்து ஆடியபடியே கொடிமரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
எம்பெருமான் சிவபெருமான் ஜெகஜோதி
சரியாக மாலை ஆறு மணிக்கு, கோவிலுக்குள் பரணி தீபம் சுடர்விட்டுக் காட்சி கொடுத்தது. அடுத்த நொடியே, சிவனடியார்கள் மலை உச்சியில் உள்ளவர்களுக்கு அக்னி மூலம் மகா தீபத்தை ஏற்றுமாறு உத்தரவிட, உடனடியாக கற்பூரம் பற்றவைக்கப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. எம்பெருமான் சிவபெருமான் ஜெகஜோதியாய் காட்சியளித்தார்.
மகா தீபம் ஏற்றப்பட்ட அந்த நொடியில், பக்தர்கள் எழுப்பிய 'ஓம் நமச்சிவாயா அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி முழக்கம் விண்ணை முட்டியது. பட்டாசுகள் வெடிக்க, வாணவேடிக்கைகள் முழங்க, திருவண்ணாமலை நகரமே ஒளி வெள்ளத்தில் திளைத்து விழாக்கோலம் பூண்டது.
மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம், பதினோரு நாட்களுக்குத் தொடர்ந்து சுடர்விட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளது.
வீடியோவைக் காணலாம்