

அப்பாவி போன்று இருந்துகொண்டு அடப்பாவி என சொல்லும் அளவுக்கு எல்லை மீறியதாக ஆதாரத்துடன் இளம்பெண் புகார் அளித்துள்ள நிலையில் யாரைத்தான் நம்புவது? எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ? என வலைதளவாசிகளும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
கவிதை சொல்ல ஆரம்பித்தால்...
”என் பேரு கோபால், எங்கள் ஊரில் உள்ளவர்கள் தன்னை கோபால் என்றுதான் அழைப்பார்கள்,” என இதுவரை கண்டிராத அளவுக்கு விநோத இன்ட்ரோ கொடுக்கும் இவரை கையில் செல்போன் வைத்திருக்கும் அத்தனை பேருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இவர் கவிதை சொல்ல ஆரம்பித்தாலே வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் வரும் காட்சி போன்று தான், ”எப்படியாவது தப்பிச்சி ஓடிவிடு,” என பலரும் ஓட்டம் பிடிப்பார்கள்.
ஒருவேளை தொலைக்காட்சிகளில் நடக்கும் இதுபோன்ற விவாத நிகழ்ச்சியாக இருந்தால் அங்கிருந்து எழுந்து ஓடுவது அவ்வளவு நாகரிகம் இல்லையெனக்கருதி, தலையில் கட்டாயத்திற்கு கைகளை வைத்தபடியும், சிரித்து மழுப்பியும் கடுப்பை அடக்கிக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.
பழக்கடை மூர்த்தியா?
ஆனாலும், தன்னை கவிராட்சசர் ஒட்டக்கூத்தர் என மனதுக்குள் நினைத்துக்கொண்டு, ஜெயிலர் 2 படத்தில் வரும் பழக்கடை மூர்த்தி கதாபாத்திரம் போன்று கான்ஃபிடன்ட் லெவல் கொஞ்சமும் குறையாமல் கண்களை மூடியபடியே கவிதைகளை சொல்லி முடித்துவிட்டுதான் மைக்கை மற்றவர்களுக்கே கொடுப்பார். சோஷியல் மீடியாவில் பிரபலமாக இதுபோன்று கோமாளித்தனமாக நடந்து கொண்ட கவிதை கோபாலா இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்? என நினைக்க வைத்துள்ளது ஒரு இளம்பெண் ஆதாரத்துடன் அளித்துள்ள புகார்.
கவிதையால் பிரபலம்
நெல்லை மாவட்டம் வெள்ளப்பனேரி என்ற சிறு கிராமத்தில் பிறந்த கோபால், "கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான் கண்மணி உன்னை காதலித்ததே தப்புதான்," என்ற ஒற்றை கவிதையால் ஓவர் நைட்டில் வைரலானார். அதன்பிறகு, ’நோய் வந்தால் வைத்தியம், காதல் வந்தால் பைத்தியம், தூண்டிலில் சிக்கிய மீனும், உன் காதலில் சிக்கிய இந்த கோபாலும் ஒன்றுதான், காட்டில் இருப்பது பருத்தி
வீட்டில் இருப்பது செம்பருத்தி, என் மனதில் இருப்பது பெண்ணே நீ ஒருத்தி ஒருத்தி ஒருத்தி,’ என அடுத்தடுத்து கவிதைகளை வெளியிட்டு ஃபேமஸ் ஆனார்.
’முதலமைச்சரே அசந்தார்’
அடுத்து, வெறும் பப்ளிசிட்டியை வைத்து என்ன செய்வது? பாக்கெட்டில் பத்து பைசாகூட இல்லையே என சினிமாவில் நடிப்பதற்காக ஊரைவிட்டே ஓடிவந்த கவிதை கோபாலுக்கு மாஸ்டர், துணிவு, வாரிசு ஆகிய படங்களில் கூட்டத்தில் ஒரு ஆளாய் தலையை காட்டும் வாய்ப்பு கிடைத்தது. அந்தநேரம், முதலமைச்சர் விஜய்யிடமே தனது கவிதையை சொல்லி அசர வைத்ததாக கவிதை கோபால் சில யூடியூப் வீடியோக்களிலும் சிலாகித்ததுண்டு.
அதேபோல், ’நான் தனியாக இருக்கும்நேரத்தில்தான் கவிதையை வடிப்பதற்கான வார்த்தைகளே வந்து விழும், பெரும்பாலும் கழிவறையில்தான் கவிதைகளையே யோசிப்பேன்,’ எனவும் கூறியதுண்டு. ’அடடா, கவிதை கோபாலின் கழிவறை கவிதைகளே சோஷியல் மீடியாவை கட்டிப்போட்டு வைத்துள்ளது என்றால் பக்கா செட்டப்பில் எழுதினால் பாரதியாரே தோற்றுப்போவாரா?’ என பலர் கலாய்த்தனர்.
இளம்பெண்ணுக்கு தொந்தரவு
இப்படி, பலர் கேலி கிண்டல் செய்தாலும், கவிதைதானே எழுதுகிறார், அதில் என்ன தவறு உள்ளது? அது அவர் விருப்பம் என ஆதரவும் தெரிவித்து வந்தனர். இதற்கு மத்தியில்தான், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான 22 வயது இளம்பெண்ணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவிதை கோபால் தொடர்பு கொண்டதாகவும், திரைப்படங்களில் நடிக்க விருப்பம் உள்ளதா? என கேட்டதாகவும் தெரிகிறது.
அதன்பிறகு, கோபால் கேட்ட வார்த்தைதான் அந்த பெண்ணையே தூக்கி வாரிப்போட்டுள்ளது. தயாரிப்பாளர், இயக்குநர் இருவரிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் படத்தில் வாய்ப்பு கன்ஃபார்ம், கூடவே தனக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் அந்த வாய்ப்புக்கே வழிவிடுவேன் எனவும் டிமாண்ட் வைத்ததோடு உடனே சென்னைக்கு கிளம்பி வருமாறு வீடியோ காலில் தொந்தரவு செய்ததாகவும் தெரிகிறது.
போலீசில் புகார்
மேலும், ’அண்ணா என்று மட்டும் அழைக்காதே, வா போ என அழைத்தாலே போதும்,’ என காதல்ரசம் சொட்ட கவிதை கோபால் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு, சினிமாவில் நடிக்க நான் வாய்ப்பு கேட்டேனா? என கொந்தளித்த அந்த இளம்பெண் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுபோன்று அத்துமீறும் கவிதை கோபால் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள இளம்பெண், இதேபோன்று அவர் வேறு பெண்களிடமும் எல்லைமீறியுள்ளாரா? என்பதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என்ன சொல்கிறார் கவிதை கோபால்?
இதனிடையே, நியூஸ் தமிழ் செய்தியாளர் ராஜா கவிதை கோபாலை தொடர்பு கொண்டு புகார் குறித்து விளக்கம் கேட்டபோது, இயக்குனர் பகவதி பாலா என்பவர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கு தயாராகி வருவதாகவும், அதில் நடிப்பதற்குதான் இளம்பெண்ணை தொடர்பு கொண்டதாகவும், வேறு எந்த உள்நோக்கத்துடனும் தான் பேசவில்லை எனவும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே, அந்த படத்தில் தான் பாடலாசிரியர் என்ற புதுத்தகவலையும் கூறினார்.