சேதுபதி மன்னர் குடும்பத்தில் மோதல்
சேதுபதி மன்னர் குடும்பத்தில் மோதல்

தெய்வத்திற்கு முன் யாருக்கு முதல் மரியாதை?

மன்னர் பரம்பரையினர் இடையே முதல் மரியாதை வழங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, விஜயதசமி விழா பாதிக்கப்பட்டது.
Published on: 

ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில், மன்னர் பரம்பரையினர் இடையே முதல் மரியாதை வழங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, விஜயதசமி விழா பாதிக்கப்பட்டது.

சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் ராஜராஜேஸ்வரி அம்மன் ஊர்வலம், அரச குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் சலசலப்பால் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு...
ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளன்று அரண்மனையில் இருந்து மகர்நோன்பு பொட்டலுக்கு ஊர்வலமாகச் சென்று, அங்கு அம்பு விடும் நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்.

300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் பாரம்பரிய நிகழ்ச்சியில், சேதுபதி சமஸ்தானத்துக்கு சொந்தமான கோயில்களின் உற்சவ மூர்த்திகள் மற்றும் நகரில் உள்ள ஆலயங்களில் இருந்து சாமிகள் அரண்மனை முன்பு சங்கமித்து ஊர்வலமாக செல்வது இதன் சிறப்பம்சம்.

பொது மக்கள் தரிசனம்
அப்போது, மன்னர் கால வாத்தியக் கருவிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் செல்வதை ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார ஊர்களில் இருந்து வரும் பொதுமக்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், சேதுபதி குடும்பத்தை சேர்ந்த ராஜராஜேஸ்வரி நாச்சியார் மற்றும் குமரன் சேதுபதி குடும்பத்தினர் இடையே முதல் மரியாதை பெறுவது தொடர்பாக பிரச்னை நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

இருதரப்பினர் வாக்குவாதம்
விஜயதசமி நாளன்று சேதுபதி அரண்மனையான ராமலிங்க விலாஸில் இருந்து ராஜராஜேஸ்வரி அம்மன் சிலை ஊர்வலமாக புறப்பட்டபோது, அம்மனுக்கு யார் மலர் தூவி வழிபாட்டை தொடங்கி வைப்பது என்பதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஆனது.

இருதரப்பு ஆதரவாளர்களும் மாறிமாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அம்மனை எடுத்துச் செல்வதில் முட்டுக்கட்டை போட்டதால், ஊர்வலத்தைத் தொடராமல் ராஜராஜேஸ்வரி அம்மன் மீண்டும் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அரண்மனை வளாகத்திற்குள்ளேயே அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொது மக்கள் ஏமாற்றம்
ராமலிங்க விலாசத்திற்கு வெளியே அம்மனை காண்பதற்காக காத்திருந்த பொதுமக்களுக்கு வழக்கமான ஊர்வலத்தைக் காண முடியாத ஏமாற்றம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கூடியிருந்த பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ரத்து ஏன்? விளக்கம்
இதனிடையே, ஊர்வலம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்த ராமநாதபுரம் சேதுபதி ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார், தங்கத்தால் ஆன அம்மன் சிலை மற்றும் நகைகளுடன் ஊர்வலம் செல்லும்போது, அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஊர்வலத்தை ரத்து செய்ததாக கூறினார்.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு வருத்தம் தெரிவித்த ராஜேஸ்வரி நாச்சியார், இனிவரும் ஆண்டுகளில் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, வழக்கம்போல் அம்மன் ஊர்வலம் நடைபெற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஏமாற்றம், வேதனை
தெய்வத்திற்கு முன்னால் முதல் மரியாதை என்பது கிடையாது என உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், மன்னராட்சி நடைமுறையை கெட்டியாக பிடித்துள்ள சேதுபதி மன்னர் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள ஈகோ பிரச்னையால்,

மூன்று நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த விஜயதசமி ஊர்வலம் தடைபட்டது ராமநாதபுரம் மக்களிடம் பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

newstamil.tv