

ஹோமம் நடத்தினால் வழக்கு குறையும் எனக்கருதி போலீஸ் ஸ்டேஷனை, ஆய்வாளர் புகை மண்டலமாக மாற்றி வைத்திருந்ததை பார்க்க நகைப்பாக தான் இருந்தது.
செஞ்சி சிறுமி மாயமாகி...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 40 நாட்கள் கடந்து விட்டது. சிறுமிக்கு என்ன நடந்தது? என இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கை சிபிசிஐடி கையில் எடுத்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுமி வசித்து வந்த ஆலம்பூண்டி கிராமத்தில் ஒருவர் விடாமல் விசாரணை நடத்தியும் காவல் துறையால் சிறுமி மிஸ்ஸிங் வழக்கை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.
காவல் நிலையத்தில் ஹோமம்
சிறுமி மாயமான வழக்கு காரணமாக ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்ட போலீசும் தூக்கம் தொலைத்து ஏதாவது துப்பு கிடைக்குமா? என தேடி வரும் நிலையில், சிறுமி வசித்து வந்த ஆலம்பூண்டி கிராமத்திற்கு அருகே இருக்கும் சத்தியமங்கலம் காவல் நிலைய போலீசார் ஹோமம் நடத்தி சிக்கலில் சிக்கியிருக்கிறார்கள்.
சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு ஏற்பாட்டில் காவல் நிலையத்திலேயே கணபதி ஹோமம் நடத்தப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் பாரம்பரிய உடையாக சேலை அணிந்து வந்திருக்க, காவலர்களும் கையெடுத்து கும்பிட்டவாறு ஹோமத்தில் அமர்ந்திருந்தனர்.
இதில் ஹைலைட் என்னவென்றால், காவல் ஆய்வாளர் மனைவியும் கணபதி ஹோமத்தில் இருந்தது தான். ஆய்வாளரும், அவரது மனைவியும் தம்பதி சகிதமாக ஹோமத்தில் பங்கேற்க, அந்த பக்கமாக ஒரு காவலர் பூசணிக்காய் உடைக்க குங்குமத்தை கொட்டி தயார் செய்து கொண்டிருந்தார்.
சிறுமி கிடைக்க வேண்டும்
காவல்நிலையத்தின் கதவை பூட்டிக் கொண்டு நடத்தப்பட்ட ஹோமத்தின் வீடியோ, வெளியிலும் உலா வர, என்ன காரணத்திற்காக ஹோமம் நடத்தப்பட்டது என விவாதம் எழுந்துள்ளது. சிறுமி மாயமான வழக்கில் இருந்து சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் மர்மமான நிகழ்வுகள் அரங்கேறியதாக சொல்லப்படுகிறது. சிறுமியை தேடும் போது, எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
அதோடு, 80 வயது முதியவர் ஒருவர் கிணற்றுக்குள் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அடுத்தடுத்து மர்மமான சம்பவங்கள் நடந்ததால், கணபதி ஹோமம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, காணாமல் போன சிறுமி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மனைவியுடன் சேர்ந்து யாகம் வளர்த்திருக்கிறார் ஆய்வாளர் சுரேஷ்பாபு.
அசர வைக்கும் நம்பிக்கை
குற்றம் நடந்தால் கண்டு பிடிப்பதை விட்டு விட்டு, கணபதி ஹோமம் நடத்திய ஆய்வாளரின் INTELLECTUAL மைண்ட்-ஐ பார்த்து வியந்து போவதை தவிர வேறு வழியில்லை. உடல் ரீதியிலும், மன ரீதியிலும் பலமாக இருக்க வேண்டும் என டிரெயினிங் எடுத்து இன்ஸ்பெக்டர் ஆகியும் இன்னும் யாகம், ஹோமத்தை நம்பி இருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
மூடநம்பிக்கையில் யாகம் வளர்த்தால் சிறுமி கிடைத்து விடுவார் என்ற ஆய்வாளரின் அசட்டுத்தனமான நம்பிக்கை அசர வைக்கிறது.