

தளபதி விஜய் கல்வி விருது
பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கான தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தமக்கே உரித்தான பாணியில் பேச்சை தொடங்கினார்.
இங்கு நான் உங்களின் முதலமைச்சராக வரவில்லை; உங்களின் அண்ணனாக வந்திருக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பேச்சை தொடங்கினார்.
உங்களைத் தான் நம்பி...
மாணவர்களின் எதிர்காலமே தமிழகத்தின் எதிர்காலம் என்பதை தமது உரையில் ஆழமாக பதிவு செய்த முதலமைச்சர் விஜய், உங்களைத்தான் உங்கள் பெற்றோர் நம்பியிருக்கிறார்கள்; நான் நம்பியிருக்கிறேன்; இந்த ஒட்டுமொத்த தமிழ்நாடே உங்களைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறது என்று கூறி, மாணவர்களின் தோள்களில் இருக்கும் சமூகப் பொறுப்புணர்வை உணர்த்தினார்.
மாணவர்களுக்கு உத்வேகம்
மாணவர்கள் தங்களுக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றவர், எப்போது உங்கள் அடையாளத்தை எதிர்க்கிறார்களோ அன்று நீங்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.
உங்களைச் சுற்றி இருப்பவர்களே உங்களை ஊக்கமிழக்கச் செய்யப் பார்த்தாலும், உங்களது வெற்றியைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள் மத்தியில், உங்களுடைய இலக்கில் பிடிவாதமாகவும், உறுதியாகவும் நிற்க வேண்டும் என்று மாணவர்களுக்கு உத்வேகம் உரமூட்டினார் முதலமைச்சர் விஜய்.
மாணவர்களுக்கு எச்சரிக்கை
சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய முதலமைச்சர், எந்தவொரு சூழ்நிலையிலும் லஞ்சம், ஊழல், மற்றும் போதைப்பொருள் போன்ற தவறான பாதைக்கு சென்றுவிடக் கூடாது என எச்சரித்தார். எந்த தவறான பழக்கத்திற்கும் அடிமையாகிவிடக் கூடாது என்றார்.
மாணவர்களிடையே ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், "உங்களோடு நான் இருக்கிறேன்; என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள்; இந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பு எப்போதும் தொடரும்," என மாணவ- மாணவிகளுக்கு தமது மனப்பூர்வமான ஆதரவை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
இவ்விழாவில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் ஒவ்வொருவருக்கும் பொன்னாடை போர்த்தி விருதினை வழங்கி பாராட்டுதலை தெரிவித்த முதலமைச்சர் விஜய், அவர்களது பெற்றோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.