

உயிர்நாடியான பொதுத்தமிழ் முதல் காலங்காலமாக படித்துவரும் வரலாறுவரை ஏனோதானோவென கேள்விகள், லாஜிக்கே இல்லாத பதில்கள் நிறைந்து கிடப்பதாக அழாதகுறையாக பயிற்றுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
போட்டித் தேர்வுகளில்...
டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை, தேர்வாணையத்தின் செயல்பாடுகள் மீது இளைஞர்களுக்கு இருந்த நம்பிக்கையே போய்விட்டது என தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்கள் தரப்பில் ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
'திரிஷா விஜய்' என்ற போலி எழுத்தாளரின் படைப்பு என கூறப்படும் புத்தகத்தில் இருந்து தேர்வில் கேள்வி கேட்டால் என்ன பதிலை எழுதுவது? தயிர்சாதம் தொடர்பான கேள்விக்கும் அரசு நிர்வாகத்திற்கும் என்ன சம்மந்தம்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
வெளியான விடைக்குறிப்பு
இதற்கு மத்தியில்தான், TNPSC குரூப் 2, குரூப் 2A முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு நவம்பர் 10 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் வெளியிடப்பட்டது. அந்த விடைத்தாள் தங்களுக்கு ரத்தக்கண்ணீரைதான் வரவழைக்கிறது என்பதே பயிற்றுநர்களின் ஆதங்கம்.
சில கேள்விகளே தவறாக கேட்கப்பட்டுள்ளதோடு, பல கேள்விகளுக்கு விடையே தவறாக உள்ளதாக கவலை தெரிவிக்கும் பயிற்றுநர்கள், அதிர்ஷ்டம் உள்ளவர்கள் அரசு வேலைக்கு செல்லலாம், இல்லாதவர்கள் ஏதோ ஒரு வழியில் பிழைத்துக் கொள்ளுங்கள் என்ற நடைமுறையைதான் TNPSC பின்பற்றுகிறதா? இது போட்டித்தேர்வா அல்லது சூதாட்டமா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
பொறுப்பு வேண்டாமா?
காரன்வாலிஸ் பிரபு நிலவரிச் சீர்திருத்த முறைகளை 1793ஆம் ஆண்டு கொண்டு வந்தார் என்பதை காலங்காலமாக படித்து வருகிறோம், ஆனால் அதற்கு 1973 தான் பதில் எனக்கூறுவது வேடிக்கையாக உள்ளது எனக்கூறும் பயிற்றுநர்கள், நமக்கு சுதந்திரம் கிடைத்ததே 1947, அப்படியானால் காரன் வாலிஸ் அதற்குபிறகுதான் ஜமீன்தார் முறையை கொண்டு வந்தாரா? இந்தியாவிலேயே மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா? இது கேவலம் இல்லையா?
போட்டித்தேர்வில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையையே தீர்மானிக்கும்போது அந்த பொறுப்பு TNPSCக்கு வேண்டாமா? என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
யார்தான் அமைச்சர்?
ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டு, அந்த கேள்விக்கு சரியான பதிலை எழுதிய பாவத்திற்காக ஒன்றரை மார்க் கைவிட்டுப்போனால் அந்த இளைஞரின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் எனக்கூறிய பயிற்றுநர்கள், வேளாண்மை அமைச்சகம் மற்றும் விவசாயிகள் நலவாரியம் எதனை உள்ளடக்கியது? என்ற கேள்விக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை எப்படி பதிலாக இருக்க முடியும்?
அப்படியென்றால் வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத்திற்கு கீழ்தான் பால்வளம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு வருகிறதா? அப்படியானால் அமைச்சர்கள் கமலி, ஸ்ரீநாத், விஜயலட்சுமிக்கு என்ன வேலை? என்ற கேள்வி எழுவதாகவும் கூறி உள்ளனர்.
கேள்வியே தவறு? அப்படி என்றால்...
மத்தியிலும் கூட, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சராக உள்ள சிவ்ராஜ் சிங் சௌஹானுக்குகீழ்தான் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் வருகிறாரா? அடிப்படை அறிவுகூட இல்லாமல் எப்படி ஒரு கேள்வியை கேட்க முடியும்? அந்த கேள்விக்கு பதிலையும் வேறு கொடுப்பதும் பெரும் அபத்தம் எனவும் குற்றம்சாட்டி உள்ளனர்.
வரலாறு படித்தார்களா?
அதேபோல் காந்தி இர்வின் ஒப்பந்தம் நடந்தது 1931 மார்ச். அவர் 2ஆம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டது 1931 செப்டம்பர்-அக்டோபரில் தான். அப்படியென்றால் காந்தி இர்வின் ஒப்பந்தப்படி சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் காந்தி 2ஆம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டது எப்படி பதிலாக இருக்க முடியும்?
6 மாதம் கழித்து நடந்த ஒரு நிகழ்வு எப்படி கூற்றுக்கான காரணமாக இருக்க முடியும்? காலமுறை வரிசையே மாற்றியுள்ள இந்த கேள்வி வரலாறு படித்த ஒரு பேராசிரியரால்தான் எடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறுகின்றனர்.
வரலாறு முக்கியம்...
அதேபோல், பொருத்துக கேள்வியில் நேரு, காந்தி, அம்பேத்கர், K.T.ஷா உள்ளிட்டோர் எழுதாத புத்தகங்களை எல்லாம் எழுதியதுபோன்றும், எழுதிய புத்தகங்களை எல்லாம் எழுதாததுபோன்று கேள்விகள் கேட்டுள்ளது நியாயமா? எனக்கூறும் பயிற்றுநர்கள், வரலாறும் தெரியவில்லை, அமைச்சகமும் தெரியவில்லை என மனம்நொந்துள்ளனர்.
முதலமைச்சரின் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பசுமை இல்லம் திட்டம், பொதுத்தமிழ், பொருந்தாத சொல்லை எழுதுக என பல கேள்விகள், படித்த தங்களுக்கு தலைசுற்றலை ஏற்படுத்துவதாக கூறும் பயிற்றுநர்கள், கேள்வி கேட்பது தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையமா? அல்லது தயிர்சாத அரசுப்பணி தேர்வாணையமா? என்ற சந்தேகம்தான் எழுவதாக கூறுவதோடு மாணவ, மாணவிகளின் வாழ்க்கையோடு விளையாடும் இத்தகைய விபரீத விளையாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களின் கோரிக்கைக்கு TNPSC செவிசாய்க்குமா? அல்லது கண்டும்காணாமல் இருந்துகொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.