

வலிமைபெறும் விண்வெளித் தொழில்நுட்பம்
புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக NVS-03 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை இஸ்ரோ அறிவியலாளர்கள் வெளிப்படுத்தினர்.
என்விஎஸ்-03 செயற்கைக்கோள் மூலம் மூன்றாவது உள்நாட்டு அணு கடிகாரத்தை இஸ்ரோ செலுத்தியது.
பிராந்திய வழிகாட்டல் சேவைக்கு தேவையான 7 செயற்கைக் கோள்களில், நான்காவது செயற்கைக்கோள் ஏவப்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறி உள்ளார்.
உள் நாட்டில் தயாரிக்கப்பட்டது
மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த திட்டமிட்டு, கடந்த 2023ல் என்விஎஸ் 01 மற்றும் 2025ல் என்விஎஸ் 02 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.
தற்போது, இவற்றுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன என்விஎஸ் 03 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முடிவு செய்தனா். இதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.
தொடா்ந்து, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
நிலை நிறுத்தப்பட்ட செயற்கை கோள்
தரையில் இருந்து புறப்பட்ட 18.40 நிமிடத்தில், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டா் தொலைவும், அதிகபட்சம் 37,023 கிலோ மீட்டா் தொலைவும் கொண்ட நிா்ணயிக்கப்பட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, இந்த திட்டம் வெற்றிபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனா்.
என்விஎஸ் 03 செயற்கைக்கோளானது 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5 எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டா்கள், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ரூபிடியம் அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன.
பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது;
அதி நவீன என்விஎஸ் 03 செயற்கைகோளை ஏந்திச் சென்ற ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிா்ணயிக்கப்பட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த திட்டம், நமது உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான 'நேவிக்'-ஐ வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல். மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட அதிநவீன என்விஎஸ் 03 செயற்கைக்கோள், முக்கியமான தொழில்நுட்பங்களில் தற்சார்பு நிலையை அடைவதற்கான நமது முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதோடு, மக்களுக்குப் பயனளிக்கும் வழிகாட்டுதல் சேவைகளுக்கும் உறுதுணையாக இருக்கும். நமது விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு, அறிவுத்திறனை தொடர்ந்து நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.