ரத்த உறவில் திருமணம் செய்வதை தடுக்க சட்டம்? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரத்த உறவில் திருமணம் செய்வதை தடுக்க சட்டம்? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Published on: 

உச்சநீதிமன்றத்தின் இந்த தலையீட்டின் பின்னணி என்ன? ரத்த உறவுத் திருமணங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? தமிழ்நாட்டில் இதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது? ரத்த உறவு திருமணங்களைத் தடை செய்வதுதான் இதற்குத் தீர்வா?

ஒரு இளம் பெண்ணின் வழக்கு எழுப்பிய தேசியப் பிரச்சினை

பெங்களூருவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி சார்வி தாக்கல் செய்த பொதுநல மனுவே இந்த விவாதத்துக்குக் காரணம். அவருடைய பெற்றோர் நெருங்கிய ரத்த உறவினர்கள். இவர்களுக்குப் பிறந்த சார்விக்கு 40 சதவீத பார்வைக் குறைபாடு இருப்பதாகவும், இந்தப் பாதிப்பு பெற்றோருக்கு இடையிலான ரத்த உறவுத் திருமணத்தால் ஏற்பட்ட மரபணுக் காரணிகள் தொடர்புடையவை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்கு ஏற்பட்ட பாதிப்பை முன்வைத்து, நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதை அனுமதிக்கும் சட்ட விதிவிலக்குகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. குறிப்பாக, இந்தத் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மரபணுக் குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், திருமணத்துக்கு முன்பாக மரபணு ஆலோசனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா அமர்வு, மத்திய அரசின் கருத்தைக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரத்த உறவுத் திருமணங்களால் என்ன பிரச்சினை?

ஒவ்வொரு மனிதரிடமும் ஆயிரக்கணக்கான மரபணுக்கள் உள்ளன. இவற்றில் சில மரபணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் வெளிப்படையாக நோயை ஏற்படுத்திவிடுவதில்லை. குறிப்பாக, பின்னடையும் மரபணு அதாவது Recessive Gene என்று அழைக்கப்படும் மரபணுக்களில் ஏற்படும் சில மாற்றங்கள், ஒருவரிடம் ஒரு பிரதியில் மட்டும் இருந்தால் நோய் வெளிப்படாமல் இருக்கலாம்.

அவர் அந்த மரபணுவின் கடத்தியாக (Carrier) மட்டுமே இருப்பார். ஆனால், கணவன், மனைவி இருவரிடமும் ஒரே மாதிரியான பாதிப்புக்குள்ளான பின்னடையும் மரபணு இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு இரு பெற்றோரிடமிருந்தும் அந்தப் பாதிப்புக்குள்ளான மரபணுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதனால் அந்தக் குழந்தைக்கு மரபணு நோய் வெளிப்படலாம். நெருங்கிய ரத்த உறவினர்களுக்குள் திருமணம் நடைபெறும்போது, இருவருக்கும் ஒரே மூதாதையிடமிருந்து பெறப்பட்ட ஒரே மாதிரியான மரபணுக்கள் இருக்கக்கூடிய சாத்தியம் அதிகமாகிறது. இதனால் குழந்தைகளுக்கு சில பின்னடையும் மரபணு நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.

ரத்த உறவுத் திருமணங்களால் என்னென்ன நோய்கள் ஏற்படலாம்?

ரத்த உறவுத் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு எல்லா வகையான நோய்களும் ஏற்படும் என்று கூற முடியாது. குறிப்பாக, பின்னடையும் மரபணுக்களால் ஏற்படும் நோய்களின் ஆபத்துதான் அதிகரிக்கிறது. அதாவது தலசீமியா (Thalassemia) போன்ற மரபணு சார்ந்த ரத்தக் குறைபாடுகள், சில வகையான பார்வைக் குறைபாடுகள் மற்றும் விழித்திரை நோய்கள், காது கேளாமை, வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் தொடர்பான சில குறைபாடுகள், சில பிறவிக் குறைபாடுகள் மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சிப் பாதிப்புகள், சில அரிய மரபணு சார்ந்த வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படலாம்.

குடும்பத்தில் ஏற்கெனவே இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், அடுத்த தலைமுறையினருக்கு ஆபத்து அதிகரிக்கலாம். இதனால், நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்யத் திட்டமிடுபவர்கள் தங்களுடைய குடும்ப மருத்துவ வரலாற்றை அறிந்து கொள்வதும், தேவைப்பட்டால் மரபணு ஆலோசனை பெறுவதும் முக்கியம்.

ரத்த உறவுத் திருமணங்கள் விவகாரம்: தமிழ்நாட்டுக்கு ஏன் மிகவும் முக்கியம்?

இந்த வழக்கின் முக்கியத்துவம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்னும் அதிகரிக்கிறது. இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சுகாதார ஆய்வு தரவுகளின் அடிப்படையில் ரத்த உறவுத் திருமணங்கள் தமிழ்நாட்டில் 30 சதவீதத்துக்கும் அதிகம். தமிழ்நாட்டின் குடும்ப மற்றும் திருமண உறவுமுறைகளில் நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்வது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக - தாய்மாமன் மகள் அல்லது மகனைத் திருமணம் செய்துகொள்வது. - அத்தை மகன் அல்லது மகளைத் திருமணம் செய்துகொள்வது. - மாமன் மகள் அல்லது மகனைத் திருமணம் செய்துகொள்வது. - சில சமூகங்களில் முறைப்பெண், முறைமாப்பிள்ளை உறவுகளுக்குள் திருமணம் செய்வது.

இவை குடும்ப உறவுகளைப் பாதுகாப்பது, சொத்துகள் குடும்பத்துக்குள்ளேயே இருப்பது, உறவுகளுக்கிடையிலான பிணைப்பைத் தொடர்வது போன்ற சமூகக் காரணங்களுடன் தொடர்புடையவை. சில சமூகங்களில் இவை விருப்பமான திருமண உறவுமுறையாகவே இருந்து வருகின்றன. ஆனால், இந்த வழக்கத்தில் உள்ள எல்லா திருமணங்களையும் ஒரே மருத்துவ அல்லது சட்ட வரையறைக்குள் கொண்டுவர முடியாது. எந்த உறவுமுறையில் திருமணம் நடைபெறுகிறது என்பதைப் பொறுத்தே மரபணு ஆபத்து மாறுபடும்.

ரத்த உறவுத் திருமணங்கள்: உச்சநீதிமன்றம் ஏன் தலையிடுகிறது?

இந்த வழக்கில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வுரிமை, தனிநபர் திருமண உரிமை ஆகிய இரண்டு முக்கியமான அம்சங்களின் மீது உச்சநீதிமன்றத்தின் கவனம் இருக்கிறது. அதாவது, திருமண உரிமையைப் பறிப்பதா அல்லது அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கு முன்பாகத் தேவையான அறிவியல் தகவல்களை வழங்குவதா என்பதுதான் இங்கே எழும் அடிப்படையான விவாதம்.

இந்தப் பின்னணியில்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம் மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பது என்ற அடிப்படைக் கடமையையும் நீதிமன்றம் நினைவுபடுத்தியுள்ளது.

வீடியோவில் காணலாம்

ரத்த உறவில் திருமணம் செய்வதை தடுக்க சட்டம்? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதை தடுக்க சட்டம்? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்