

புத்தக வெளியீட்டில் தொடங்கிய சலசலப்பு, தற்போது மன்னிப்பு கேட்க சொல்லும் அளவுக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், அப்படி அந்த புத்தகத்தில் என்னதான் எழுதப்பட்டிருக்கிறது? இந்த மோதலின் முழுப் பின்னணி என்ன?
சோனியாவுக்கு வக்கீல் நோட்டீஸ்
சோனியா காந்தி எழுதியிருக்கும் Belonging A Journey of Love புத்தகத்தில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்ற 2 குறிப்புகள், தற்போது, டெல்லி முதல் மகாராஷ்டிரா வரை அரசியல் அனலை கிளப்பியிருக்கிறது. வரலாற்றை திரித்து காட்டிவிட்டதாக கூறி, சாவர்க்கரின் பேரன் வழி உறவினரான சத்யகி சாவர்க்கர், வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, 15 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.
சாவர்க்கர் குடும்பத்தினரை கொந்தளிக்க வைத்த முதல் ஷாக் வேவ், புத்தகத்தின் 201வது பக்கத்தில்தான் ஒளிந்திருக்கிறது. காங்கிரஸ் போராளிகள் பிரிட்டிஷாரின் அடிகளையும் சிறைவாசத்தையும் எதிர்கொண்டபோது, சாவர்க்கர் கருணை மனுக்களை எழுதிக்கொண்டிருந்தார் என்றும், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பிரிட்டிஷாருக்கு உளவாளிகளாக செயல்பட்டார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சாவர்க்கர் கருணை மனுக்கள் கொடுத்தது வரலாற்று பதிவில் இருந்தாலும், கருணை மனு கொடுத்ததும், உளவு பார்த்ததும் ஒன்றல்ல என்கிறது சாவர்க்கர் தரப்பு. போராட்ட வீரர்கள் குறித்த தகவல்களை கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும், சாவர்க்கரையும் உளவு பார்த்தவர்களையும் ஒரே வரிசையில் நிறுத்துவது தவறு என்றும் சத்யகி சாவர்க்கர் குற்றம்சாட்டுகிறார்.
முழுமையாக ஆராய வேண்டும்
இதனை தொடர்ந்து, 443வது பக்கத்தில், சாவர்க்கர் முன்வைத்த இந்துத்துவ சித்தாந்தம், இந்தியாவை இந்துக்கள் மேலாதிக்கம் செலுத்தும் தேசமாக பார்க்கிறது என்றும், அதை RSS, பாஜக, சங்கப் பரிவார் அமைப்புகள் பின்பற்றுகின்றன என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, 1923ல் சாவர்க்கர் எழுதிய Essentials of Hindutva நூலை குறிப்பிட்டிகிறார்கள்.
அதில், இந்துத்துவம் என்பது மத நம்பிக்கையை தாண்டி, பொதுவான தாய்நாடு, முன்னோர் மரபு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான அடையாளமாக விவரிக்கப்பட்டிருப்பதால், அவரது எழுத்துக்களை முழுமையாக ஆராய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.
15 நாட்களுக்குள்... நோட்டீஸ்
இந்த நோட்டீஸில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது சாவர்க்கருக்காக நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டதையும், நினைவிடத்திற்கு நன்கொடை அளிக்கப்பட்டதையும், ஆவணப்படத்திற்கு உதவி செய்யப்பட்டதையும் சத்யகி சாவர்க்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். முன்னாள் காங்கிரஸ் பிரதமரே சாவர்க்கரை போற்றியிருக்கும்போது, தற்போது சோனியா காந்தி இப்படி எழுதியிருப்பது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.
மொத்தத்தில், 15 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வீடியோவைக் காணலாம்