விளிம்பு நிலை தேர்வர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!
கல்வி மற்றும் தலைமைப் பதவிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்ற திட்டத்துடன் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த தகுதியான தேர்வர்கள் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினருடன் கலந்துரையாடிய வீடியோ ஓன்றுடன், இதை ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மனுஸ்மிருதியால் கட்டுப்படுத்தப்படும் கொள்கையின்படி மோடி அரசு இந்த அராஜக நடவடிக்கையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, தகுதியின் மிகப்பெரிய ஆயுதம் கல்வி என அம்பேத்கர் கூறியதையும் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆயுதத்தை விளிம்பு நிலை மக்கள் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக மோடி அரசும், ஆர்எஸ்எஸ்ஸும் அதை ஒடுக்கி மழுங்கடிக்கும் வேலையை செய்வதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

