

நேரடி விவாதத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி விடுத்த சவாலுக்குப் பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்திலேயே SIR குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையர் பதவி விலக...
SIR விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்தார்.
இந்தியா வெளிப்புறச் சவால்களை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், நாட்டுக்குள்ளேயே சில சக்திகள் பொய்களையும் வதந்திகளையும் பரப்பி நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி சாடல்
வெளிநாடுகளில் யாரை யார் ரகசியமாகச் சந்திக்கிறார்கள்? இந்தியாவுக்கு எதிரான சக்திகள் யாருக்கு ஆதரவளிக்கின்றன? இந்தியாவின் எதிரிகளின் மொழியில் பேசுவது யார்? என்ற கேள்விகளையும் மோடி எழுப்பினார்.
ராகுல்காந்தி சவால்
இதையடுத்து, யார் தேச விரோதி, வெளிநாட்டு சக்திகளுடன் யாருக்குத் தொடர்பு இருக்கிறது, அந்தத் தொடர்புகளின் தன்மை என்ன என்பது குறித்து எந்த இடத்திலும், எந்த மேடையிலும் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என்று நவம்பர் 3ஆம் தேதி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்திருந்தார்.
அமித்ஷா ஆவேசம்
இந்த பின்னணியில், ஹரியானா மாநிலம் கர்னாலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி உண்மையிலேயே விவாதிக்க விரும்பினால் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதட்டும் என்றும், SIR குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் காங்கிரஸ் கேள்விக்கு உள்ளாக்குவதையும் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
SIR இல்லாமலேயே காங்கிரஸ் தோல்வி
2014 மக்களவைத் தேர்தலில் SIR நடைமுறையில் இல்லை. அப்போதும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. 2019 தேர்தலிலும் SIR இல்லை; அப்போதும் தோல்விதான். 2024 தேர்தலிலும் SIR இல்லாத நிலையில் தான் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல்களிலும் SIR இல்லாமலேயே காங்கிரஸ் தோல்வியடைந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் மீதும் அதன் செயல்பாடுகள் மீதும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதாகவும், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் அமளியிலும் புறக்கணிப்பிலும் ஈடுபடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்
மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து நீக்குவதே பாஜகவின் நோக்கம் என்றும், அவர்களைப் பாதுகாக்கவே எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகளின் இந்த நிலைப்பாடு குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என்றும் அமி்ஷா தெரிவித்தார்.
அமித்ஷா விடுத்துள்ள சவாலை ராகுல் காந்தி ஏற்றுக்கொள்வாரா? பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதுவாரா? நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் உண்மையில் கூட்டப்படுமா? என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்விகள்.