உனக்கு 75, எனக்கு 63 - கரம் பிடித்த சீனியர் சிட்டிசன்ஸ்

காதலுக்கும், வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த முதிய தம்பதியினர் நிரூபித்துள்ளனர்.
உனக்கு 75, எனக்கு 63 - கரம் பிடித்த சீனியர் சிட்டிசன்ஸ்
Published on: 

தனிமையின் பிடியில் தவித்த இரு உள்ளங்கள், முதியோர் இல்லத்தில் சந்தித்து, தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதியோர் இல்லத்தில்...

இமாச்சலப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் தியோலியில் உள்ள அப்னா கர் முதியோர் இல்லம், தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. இங்கு வசித்து வந்த 75 வயதான கன்ஹையா லால் மற்றும் 63 வயதான சவினா ஆகியோருக்கு இடையே மலர்ந்த நட்பு, தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமணத்தில், மஹிலா சங்கீத் எனப்படும் இசை நிகழ்ச்சியும் களைகட்டியது.

காட்டில் வசித்து வந்தவர்

மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான கன்ஹையா லால், தனக்குக் குழந்தைகள் இல்லாததால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது நிலங்களைச் சகோதரர்களுக்கு எழுதி வைத்தார்.

ஆனால், அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவர், மன உளைச்சலுக்கு ஆளாகி காட்டில் உள்ள ஒரு குகையில் வசித்து வந்துள்ளார். அவரை வழக்கறிஞர் பிரகாஷ் சந்த் பன்சால் தலைமையிலான குழுவினர் மீட்டு இந்த முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

நட்பு காதலாக மாறவே...

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சவினா, பயணத்தின் போது வழிதவறி சிம்லா அருகே தவித்த நிலையில், காவல்துறையினரால் மீட்கப்பட்டு இந்த இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

வாழ்க்கையில் பல துயரங்களையும் தனிமையையும் சந்தித்த இவர்கள் இருவரும், முதியோர் இல்லத்தில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்துள்ளனர்.

காலப்போக்கில் இவர்களது நட்பு காதலாக மாற, எஞ்சிய வாழ்நாளை இணைந்து வாழ முடிவு செய்து தற்போது இல்லறத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்.

புதிய அத்தியாயம்

முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் புடைசூழ, பிலாஸ்பூர் துணை ஆணையர் கிரண் பதானா உள்ளிட்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களுடன் இந்தத் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அன்பும், துணையும் கிடைத்தால் புதிய அத்தியாயத்தைத் தொடங்கலாம் என்பதற்கு இந்தத் தம்பதியினரின் திருமணம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

வீடியோவைக் காணலாம்

உனக்கு 75, எனக்கு 63 - கரம் பிடித்த சீனியர் சிட்டிசன்ஸ்
காதலுக்கு வயதில்லை, கரம் பிடித்த சீனியர் சிட்டிசன்ஸ்