ticket issue
ticket issue

ரயில் டிக்கெட்டுக்கு பதில் ஆதார் கொடுத்த மூதாட்டி

டிக்கெட்டுக்கு பதிலாக, ஆதார் கார்டை கொடுத்த மூதாட்டியிடம் டிக்கெட் பரிசோதகர் பணிவுடன் நடந்து கொண்டார்.
Published on: 

ரயிலில் டிக்கெட்டுக்கு பதிலாக, ஆதார் கார்டை கொடுத்த மூதாட்டியிடம் டிக்கெட் பரிசோதகர் பணிவுடன் நடந்து கொண்ட காணொலி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், மூதாட்டியிடம் டிக்கெட்டை காண்பிக்கும்படி கேட்டார். அந்த மூதாட்டி மிகவும் அப்பாவியாக, தனது கைப் பையை திறந்து, தன்னிடமிருந்த ஆதார் அட்டையை எடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்தார்.
பொதுவாகவே, பெரும்பாலான டிக்கெட் பரிசோதகர்கள், ரயிலில் பயணிகளிடம் சிடுசிடுவென விழுவதைத் தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த டிக்கெட் பரிசோதகர் அப்படி இல்லை. அந்த மூதாட்டியின் வெகுளித்தனத்தை புரிந்துகொண்டு, ‘நீங்கள் என்னிடம் கொடுத்திருப்பது உங்களது ஆதார் கார்டு. ஆனால் நான் ரயில் டிக்கெட்டை கேட்டேன். உங்களிடம் டிக்கெட் இருக்கிறதா?” என மென்மையான முறையில் கேட்டார்.
இதைக் கேட்டதும் குழம்பிய அந்த மூதாட்டி, ‘என்னிடம் இதுதான் இருக்கிறது. என் மகன் இது மட்டுமே போதும் எனக்கூறி தான் என்னை ரயிலில் ஏற்றி விட்டார்” என பாவமாகக் கூறினார். இதைக் கேட்டதும் சட்டென சிரித்த டிக்கெட் பரிசோதகர், ஆதார் கார்டை மூதாட்டியிடமே கொடுத்துவிட்டு, ரயிலில் பயணிக்கவும் அனுமதித்தார்.
தற்போது, இந்த வீடியோ தான் இணையவாசிகளின் ஹார்ட்டுகளை அள்ளி வருகிறது. இந்த காட்சி, எப்போது, எங்கு எடுக்கப்பட்டது, அந்த மூதாட்டி தனியாகதான் பயணம் செய்தாரா? என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் மூதாட்டியிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்ட டிக்கெட் பரிசோதகரை நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.

newstamil.tv