வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தம்
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு கடற்கரைப் பகுதியின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவானதாக வானிலை மையம் கூறி உள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...
சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரி வி.ஆர்.துரை கூறி இருப்பதாவது;
தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது.
கனமழை, மிக கனமழை
வடக்கு கடலோர ஆந்திரா பகுதி வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 21ஆம் தேதி இன்று, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
19 மாவட்டங்களில்...
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 22
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 24 வரை...
அக்டோபர் 23ஆம் தேதி 25 மாவட்டங்கள், அக்டோபர் 24ஆம் தேதி 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யக்கூடும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரி வி.ஆர்.துரை கூறி உள்ளார்.

