ஆன்மீகம்

தென்னங்கீற்றுகளுக்கு மத்தியில் தேங்காய்க்குள் விநாயகர் 5 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வடிவமைப்பு |


விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வித்தியாசமான முறையில் ஸ்ரீ பூரண நாளிகேர மகா கணபதி அலங்காரம் தமிழகத்திலேயே சேலத்தில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கோவில்களில் மட்டுமின்றி விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பிரத்தியேகமாக அரங்குகள் அமைத்து, கிராமப் பகுதிகளில் பந்தல் அமைத்து கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் வித்தியாசமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவதை பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆண்டுதோறும் கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் எலைட் அசோசியேஷன் சார்பில் ஸ்ரீ வாசவி திருமண மண்டபத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் குறிப்பாக கைலாலயத்தில் கணபதி இருப்பது போன்று, தசாவதாரத்தில் விநாயகர் இருப்பது போன்று என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். இந்த வருடம் எலைட் அசோசியேஷன் 43 வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு 14 அடி உயரத்தில் தென்னந்தோப்பு போன்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய் மற்றும் தென்னங்கீற்றுகளை கொண்டு மிக பிரம்மாண்டமாக தேங்காய்க்குள் ஸ்ரீ பூரண நாளிகேர மகா கணபதி காட்சி தருவது போன்று பிரதிஷ்டை செய்துள்ளனர். வித்தியாசமான இந்த விநாயகரை வழிபடுவதற்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இதுகுறித்து எலைட் அசோசியேஷன் நிர்வாகி சுவாதி சேகர் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஆண்டுதோறும் பல்வேறு வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலையை அமைத்து வருகிறோம் எந்த ஆண்டு தென்னந்தோப்பிற்குள் தேங்காயின் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர கணபதியை வடிவமைத்துள்ளோம் என்றும் இதற்காக கடந்த ஒரு வாரமாக 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு மண்டபம் முழுவதும் தென்னந்தோப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் பக்தர்கள் நடக்கும் பாதை முதல் விநாயகரை காண செல்லும் வழி முழுவதும் தேங்காய் நார் மற்றும் தேங்காய் துகள்கள் போன்றவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் நோக்கம் முக்கண்ணின் அம்சமாக இருக்கக்கூடிய சிவபெருமானை நினைவுபடுத்தும் வகையிலும் அவருடைய மகன் கணபதியை தேங்காய்க்குள் வடிவமைக்க வேண்டும் என்று நினைத்து செய்யப்பட்டுள்ளது முக்கியமாக எந்த சுப காரியங்கள் செய்தாலும் தேங்காய் ஒரு முக்கிய காரணியாகவும் உள்ளது எனவே தேங்காயை மையமாக வைத்து இந்த வருடம் விநாயகர் சிலையை வடிவமைத்து உள்ளோம் பக்தர்களின் தரிசனத்திற்காக நாளை முதல் மூன்று நாட்கள் இருக்கும் என்று கூறினார்.

00 Comments

Leave a comment