வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

லீக் ஆன டேட்டா, ஆமாம் உண்மை தான் உறுதிப்படுத்திய SBI வங்கி

வங்கி சார்ந்த எந்த விவரங்களையும் யாரிடமும் தேவையில்லாமல் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Published on: 

SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் லீக் ஆகிவிட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 ஆயிரத்து 897 வாடிக்கையாளர்களின் டேட்டாக்கள் மட்டுமே கசிந்துள்ளதாக கூறியுள்ள வங்கி அதிகாரிகள், வங்கி சார்ந்த எந்த விவரங்களையும் யாரிடமும் தேவையில்லாமல் பகிர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

பொதுத்துறை வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி தான் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கிக்கு கடந்த அக்டோபர் 16ஆம் தேதி அமெரிக்கா மற்றும் நமது நாட்டின் இணையப் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து எச்சரிக்கை ஒன்று வந்தது.

அதில், SBI வாடிக்கையாளர்கள் தொடர்பான சுமார் 3.75 லட்சம் பதிவுகள் டார்க் வெப் எனப்படும் இணையப் பகுதியில் லீக் ஆகி இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, வங்கி தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது 3,897 வாடிக்கையாளர்களின் டேட்டாக்கள் டார்க்வெப்பில் லீக் ஆகி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

வாடிக்கையாளர் விவரங்கள்
சிரியூஸம் Siriusim என்ற பெயரில் செயல்படும் முகம் தெரியாத ஹேக்கர் குழு ஒன்றுதான் சிஎஸ்வி CSV - Comma-Separated Values எனப்படும் எளிய உரைக் கோப்பு வடிவத்திலும், 2722 தரவுகளை கணினி அல்லது மொபைல் சாதனங்கள் வழியாக ஒரே மாதிரியான தோற்றத்துடன் பகிரும் PDF Portable Document Format வடிவத்திலும் திருடி உள்ளது தெரியவந்தது.

வாடிக்கையாளர்களின் பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, பாலினம் மற்றும் வங்கிக் கிளை, வாடிக்கையாளர் அடையாள எண்கள், கடன் விண்ணப்பங்கள், வாடிக்கையாளர் தொடர்பான பதிவுகளின் விவரங்கள் கசிந்துள்ளது உறுதியானது.

பணம் பறிக்கும் நோக்கம்
மின்னஞ்சல் முகவரி வழக்கமாக .com அல்லது .org என்றுதான் முடியும். ஆனால், .onion என குறியீட்டுடன் முடிவுடையும் டார்க் வெப்பில் Dark Web நெட்வொர்க் பயனர்களின் லொகேஷன் மற்றும் அவர்களின் தரவுகளை கண்டறிய இயலாது. உரிக்க உரிக்க பல அடுக்குகளை கொண்டிருக்கும் வெங்காயம் போன்றுதான் பயனர்களின் அடையாளமும் பல அடுக்குகளால் மறைக்கப்பட்டிருக்கும்.

ஹேக்கர்கள் இத்தனை தொழில்நுட்பங்களை கையாண்டு தகவல்களை திருடுவதன் முக்கிய நோக்கமே பணம் பறிப்பதுதான். வங்கிக்கு வருபவர்களின் அன்றாட சேவைகளும், முக்கிய வணிக செயல்பாடுகளும் தங்கு தடையின்றி ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து சில அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அதிகாரிகள் எச்சரிக்கை
முன்பின் தெரியாத எண்ணில் இருந்து யாரேனும் அழைத்து தாங்கள் எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாவும், உங்களுக்கு ஒரு OTP வந்துள்ளது, அதனை கூறுமாறு கேட்டால் அவசரப்பட்டு கடவுச்சொல்லை கூற வேண்டாம் எனக்கூறியுள்ள வங்கி அதிகாரிகள், அப்படி ஏதேனும் சந்தேகம் இருப்பின் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கே நேரில் சென்று தெளிவுபடுத்திக் கொள்ளுமாறும் கூறி உள்ளது.

அதேபோல், ஏடிஎம் ரகசிய எண், ஏடிஎம் கார்டில் உள்ள 16 இலக்க எண்கள் உள்ளிட்டவற்றையும் எந்த காரணத்திற்காக கூறவேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

வங்கிக்கு தகவல்
மேலும், வங்கியில் இருந்து வந்ததாக கூறப்படும் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் செய்தி, சஸ்பெக்ட் லிங் உள்ளிட்டவற்றை மறந்தும் தொட வேண்டாம் எனவும் கூறியுள்ள வங்கி நிர்வாகம், வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி ஏதேனும் பணப்பரிவர்த்தனை நடந்திருந்தாலும் வங்கிக்கு உடடினயாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளது.

இதுதவிர சைபர் குற்ற உதவி எண்ணான 1930ஐ தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சம் வேண்டாம்
இதனிடையே, எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களும் ஒருபுறம் பதற்றத்தில் உள்ளதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், அனைவரது தரவுகளும் வெளியாகவில்லை, அதனால் அனைவரும் அச்சப்பட தேவையில்லை எனவும்கூறி உள்ளது.

newstamil.tv