இந்தியா

சீறிய சிராஜ் - சுருண்ட இலங்கை 8-வது முறை இந்தியா ஆசிய சாம்பியன் | Asia Cup 2023

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில் சிராஜின் அதிரடி பந்து வீச்சால் இலங்கை அணி 50 ரன்களுக்கு சுருண்டது. 7-வது ஓவரிலேயே இலங்கையை வீழ்த்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை உட்பட 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த தொடரின் இறுதி போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், தொடக்க வீரர்களாக பதும் நிசான்கா, குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கிய நிலையில், குசல் பெரேரா ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார். .

அடுத்த வந்த குசல் மெண்டிஸ் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பதும் நிசாங்கா 2 ரன்களிலும், சதீரா மற்றும் சரீத் அசலங்கா ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் தனஞ்சயா டி சில்வா 4 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 17 ரன்களிலும் நடையை கட்டியதால் இலங்கை அணி 12 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்திய அணி வீரர்களின் அபார பந்துவீச்சால் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களுக்கு 16-வது ஓவரிலேயே சுருண்டது. குறிப்பாக சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 7 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கிய நிலையில், 7-வது ஓவரிலேயே 51 ரன்கள் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதோடு ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதுவரை 8 முறை இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குறைவான ரன்களில் ஆல்-அவுட்டான அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது. மேலும் ஒருநாள் போட்டியில் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சமிந்தா வாஸின் சாதனையை சிராஜ் சமன் செய்தார்.

00 Comments

Leave a comment