ஜாமினை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்: நடிகர் தர்ஷன் கைது
ரசிகர் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமின் ரத்தான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சி பாளையா போலீசாரால் கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரது தோழியும், நடிகையுமான பவித்ரா கௌடாவுக்கும் இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி இருந்தது.
ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கௌடா உள்பட 7 பேருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை ஜூலை மாதம் நிறைவு பெற்று, தீர்ப்பு அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தர்ஷன் ஜாமினுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு வெளியிட்டது. அப்போது, தர்ஷன் உட்பட 7 பேருக்கு வழங்கிய ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இயந்திரத்தனமாக உள்ளது, ஜாமின் வழங்கப்பட்டு இருப்பது விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும், சாட்சிகளும் மிரட்டப்படக்கூடும் என்றும் தெரிவித்தது. சிறையில் சிறப்பு சலுகை கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் தர்ஷனை பெங்களூருவில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
