

தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு தந்த சோகம் மறைவதற்குள்ளேயே, தேவாவின் ஆஸ்தான பாடகரான கிருஷ்ணராஜ் பிரிந்தது ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சிங்கப்பூர் வரை ஒலித்த மண் வாசனை பாடல்களின் மன்னனான கிருஷ்ணராஜின் பிளேலிஸ்ட்டை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தமிழ் சினிமா எத்தனையோ பாடகர்களை பார்த்திருக்கிறது. ஒவ்வொரு குரலுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். வாய்ப்பு கிடைக்காமல் பாடகர்கள் அவுடேட் ஆனாலும் கூட அந்த பாடல்கள் எப்போதும் அவுடேட் ஆகாது. அப்படி காலத்திற்கும் அவுடேட் ஆகாத முத்தான பாடல்களை பாடி, ரசிகர்களின் காது குளிரச் செய்த அருமையான UNDERATED சிங்கர் தான் கிருஷ்ணராஜும்.
தேவாவுக்கு பிடித்தவர்
இசையமைப்பாளர் தேவாவுக்கு பிடித்தமானவராக இருந்ததாலோ என்னவோ? தேவா மறைந்த அடுத்த சில நாட்களிலேயே பாடகர் கிருஷ்ணராஜ் மறைந்து விட்டார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே வேம்படிதாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் இருந்ததால் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் சேர்ந்து இசை கற்றார். அதற்கு பிறகு சினிமாவில் காலடி எடுத்து வைத்த கிருஷ்ணராஜ்-க்கு ஆரம்பத்தில் அவ்வளவு வெற்றியாக இல்லை.
ஹிட் கொடுத்த பாடல்கள்
எனினும், மனம் தளராமல் முயற்சியைக் கைவிடாமல், பொறுமையாகப் போராடிய கிருஷ்ணராஜுக்கு 90களில் காலம் கை கொடுத்தது. காதல் கோட்டையில் வெள்ளரிக்கா பாடல், பொற்காலம் படத்தில் தஞ்சாவூர் மண்ணெடுத்து ஆகிய பாடல்கள் ஹிட் ஆகின.
’பொற்காலம்’ பாடலுக்கு தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதும் கிடைத்தது.
சிங்கப்பூரின் மறைந்த அதிபர் செல்லப்பன் ராமநாதனுக்கு ரொம்பவே பிடித்த பாடலாக இருந்த ’தஞ்சாவூரு மண் எடுத்து...’ பாடல், அவரது ஆசைப்படி இறுதி ஊர்வலத்தில் கூட இசைக்கப்பட்டது.
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா...
இசையமைப்பாளர் தேவா இசையில் காதலர்களின் கானகீதமான எந்தன் உயிரே... பாடலில் சித்ராவுடன் இணைந்து மேஜிக் நிகழ்த்தியிருக்கும் கிருஷ்ணராஜ், ராசாவே என்னை தெரியலையா பாடலில் சில வரிகளே பாடியிருந்தாலும் அந்த மெட்டுக்கு கிருஷ்ணராஜின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.
தேவா இசையில் காதல் கோட்டை படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய மற்றொரு மாஸ் ஹிட் பாடல் தான் வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா...
’நீ பார்த்துட்டு போனாலும், பாக்காம போனாலும் பார்த்துட்டே தான் இருப்பேன்...’ பாடலில் ஒரு தலையாக காதலிக்கும் இளைஞர்களின் உணர்வுகளை தனது குரல் மூலம் கடத்தியிருப்பார் கிருஷ்ணராஜ்.
அதே மோடில் இருப்பது தான் கண்ணும் கண்ணும் பார்த்துக்கிட்டா டிங்...டிங்...டிங்... பாடலும்.
தாஜ்மகால் படத்தில்...
கிருஷ்ணராஜ் குரலில் ஸ்பெஷல் சாங் எது என்றால் கண்ணை மூடிக் கொண்டு தாஜ்மஹால் படத்தில் வரும் ’ஈச்சு, எலுமிச்சு...’ பாடலை சொல்லலாம். ஏ.ஆர்.ரகுமான் இசையில், ‘மச்சக்கண்ணி உன்னை காண்கலேயே... என கிருஷ்ணராஜ் பாடுவது மெய் சிலிர்க்க வைத்து காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.
வருசமெல்லாம் வசந்தத்தில், ‘நான் ரெடி, நீங்க ரெடியா...’ பாடலில் சித்ராவும், கிருஷ்ணராஜ்ஜும் போட்டிக்கு போட்டியாக டூயட் பாடி அசத்தியிருப்பார்கள். இதற்கு ஒரு படி மேலாக இருப்பது தான் துள்ளலான கிராமிய இசையில் சுஜாதா மோகனுடன் பாடிய ’சோக்கு சுந்தரி, சோக்கு சுந்தரி... பாடல்.
தொண்ணூறுகளின் இசையமைப்பாளர்களுடன்
அந்த கால காதலுக்கும், இன்றைய கால காதலுக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளை அவ்வளவு அழகாக விளக்கும், ‘ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் அவசரம் ... பாடலை பாடியதும் கிருஷ்ணராஜ் தான்.
தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார் போன்ற தொண்ணூறுகளின் இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய கிருஷ்ணராஜ், பருத்திவீரனில் யுவன் சங்கர் ராஜாவுக்கும், சூரறை போற்று படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கும் பாடல்கள் பாடியிருக்கிறார்.
கேளுங்கள் தரப்படும்...
தேவாலயங்களை அலங்கரிக்கும் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும், ‘கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்...’ பாடலில் எத்தனையோ வெர்ஷன் இருந்தாலும், கிருஷ்ணராஜ் பாடிய வெர்சனில் பக்தி மனம் கமழும்.
தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் பல பாடல்களை பாடியிருக்கிறார் கிருஷ்ணராஜ். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணராஜ் உயிர் பிரிந்தாலும், அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களுக்கு உரமூட்டும் கீதங்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.